Last Updated : 20 Nov, 2021 03:06 AM

 

Published : 20 Nov 2021 03:06 AM
Last Updated : 20 Nov 2021 03:06 AM

சென்னை வெள்ளம் - குப்பையும் நம் அலட்சியமும்:என்னதான் காரணம்?

சென்னை அண்ணா சாலையில் சென்ற மாதத்தின் ஒரு அதிகாலை வேளையில் எனது நண்பருடன் அமெரிக்கத் தூதரகத்துக்கு எதிரே மெட்ரோ ரயில் நிலையம் அருகே தேநீர் குடித்தபடி உரையாடிக்கொண்டிருந்தேன். அதிகாலை நேரத்தில் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் அவசர அவசரமாகத் தேநீர் அருந்திவிட்டு வேலையைப் பார்க்க மும்முரமாக ஓடிக்கொண்டிருந்தனர்.

எனது பார்வை எதேச்சையாக அருகிலிருந்த சாக்கடையை நோக்கித் திரும்பியது. அதில் தெர்மாகோல், டயர், பிளாஸ்டிக் போன்றவை அடைத்துக் கிடந்தன. அது குறித்து எங்களது உரையாடல் தொடர்ந்தது. ஏற்கெனவே சென்னையின் பல பெருவெள்ளங்கள் நமக்குப் பாடம் புகட்டியிருக்கும் நிலையிலும் சாக்கடையில் குப்பை போடக் கூடாது என்கிற எண்ணம் ஏன் நம்மிடையே எழவில்லை? இவையெல்லாம் சாக்கடையை அடைத்துக் கொண்டால் கழிவுநீர் எப்படி வெளியேறும்? இதுகூடவா மக்களுக்குத் தெரியாது என்று நான் அலுத்துக்கொண்டபோது, பாமர மக்கள்தான் இதற்குக் காரணம் என நண்பர் சொன்னார். நான் அதை மறுதலித்துப் பின்வரும் நிகழ்வைச் சொன்னேன்.

இரண்டு சம்பவங்கள்

சில மாதங்களுக்கு முன் முன்னிரவு நேரத்தில் கோயம்புத்தூர் நகரில் ஒரு சிறு மருத்துவமனைக்கு அருகில் நண்பருடன் பேசிக்கொண்டிருக்கிறேன். அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர் வெளியே வந்து அருகிலிருந்த சாக்கடையில் ஒரு அட்டைப் பெட்டியைக் கவிழ்த்துச் சென்றார். நோயாளிகளுக்குப் பயன்படுத்திய ரத்தக் கறையுடன் கூடிய பஞ்சு, பயன்படுத்தப்பட்ட ஊசி, மருந்துப் புட்டிகள், மருந்து அட்டைப் பெட்டிகள் ஆகியவை இருந்தன.

அதேபோலத் திண்டுக்கல்லிலும் ஒரு காட்சி. சந்தானவர்த்தினி ஆற்றங்கரை யோரம் அந்திப்பொழுதில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பாதி எரிந்த நிலையில் மருத்துவக் கழிவு ஆற்றோரத்தில் கொட்டப்பட்டுக் கிடந்தது. எதிர்புறமிருந்த மருத்துவமனையிலிருந்துதான் அது வந்திருக்க வேண்டும் என்று யூகித்தபடி, அவர்கள் கவனத்திற்குக் கொண்டுசென்றபோது, இனி கொட்டாமல் பார்த்துக்கொள்கிறோம் என்றனர்.

பண்பாட்டுக் கோளாறு?

நோயாளியைக் காக்கும் மருத்துவர் களுக்கும் செவிலியர்களுக்கும் குப்பையை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்பது தெரியாதா? அவர்கள் படிக்காதவர்களா? இந்தச் செய்கை மருத்துவருக்குத் தெரியாமலே நடந்திருக்கும் எனச் சப்பைக்கட்டுக் கட்டினால், அது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம் என்றுதானே பொருள். குப்பை போடுவதற்கும் படிப்புக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.

அண்மையில் வாட்ஸ்அப்பில் வந்த ஒரு காட்சியும் அதை உறுதிப்படுத்தியது. ஒரு ஆற்றுப்பாலம் தொடங்கும் இடத்தில் மகிழுந்து ஒன்று ஒதுங்கி நிற்கிறது. நவநாகரீக ஆடை அணிந்த ஒரு பெண் பெரிய பிளாஸ்டிக் பையைத் தூக்கிக்கொண்டு அதிலிருந்து இறங்குகிறார். ஆற்றை நோக்கி நடந்து, தான் கொண்டுவந்த பையைத் தலைகீழாக ஆற்றில் கவிழ்க்கிறார். அதிலிருந்து பிளாஸ்டிக் உள்ளிட்டவை காற்றில் பறந்தபடி ஆற்றில் சங்கமிக்கின்றன. அவர்கள் வசதி குறைவானவர்களோ படிக்காதவர்களாகவோ இருக்க வாய்ப்பில்லை. மேற்கண்ட சம்பவங்களிலிருந்து வசதி படைத்தவர்கள், படித்தவர்கள் அலட்சியமாகக் குப்பை போட மாட்டார்கள் என்கிற வாதம் ஏற்கக் கூடியதாக இல்லை. இது நமது பண்பாட்டின் கோளாறாக இருக்கலாம்.

வெளிநாடு சென்றால்…

குப்பை போடுவதற்கும் சாதிக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற ஐயத்தை நண்பரிடம் வெளிப்படுத்தினேன். ஒருவர் போடும் குப்பையை எடுப்பதற்கு, தாழ்த்தப்பட்டோர் இருக்கிறார்கள் என்கிற அலட்சியம் காரணமாகவே குப்பை அலட்சியமாகப் போடப்படுகிறதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. துப்புரவுப் பணிக்கென ஒரு சாதியை ஒதுக்கி, அவர்களுக்கு இன்ன வேலை என்று உருவாக்கி, அது நம் ஆழ்மனதில் வேரூன்றி விட்டதால்தான் இப்படி நடந்து கொள்கிறோமா?

இதே நம் ஆட்கள் வெளிநாட்டிற்குச் சென்றால் ஒழுங்காக நடந்துகொள்கிறார்கள். அது ஏன், துப்புரவுப் பணிக்கு அங்கே தனிச் சாதிக்காரர் இல்லை என்பதாலும், குப்பை போட்டால் தண்டத்தொகை கட்ட வேண்டி வரும் என்பதாலும் கண்ட இடத்தில் குப்பை போடப்படுவதில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. அது மட்டுமல்லாமல் பெரும் பாலான பகுதிகள் குப்பையின்றி பளிச்சென இருப்பதால், அங்கே குப்பை போட்டு வீணாகக் கௌரவத்தை இழந்துவிட வேண்டாம் என்கிற எண்ணமாகவும் இருக்கலாமோ?

நேரடி அனுபவம்

இந்த இடத்தில் இன்னொரு சம்பவத் தையும் நண்பருடன் பகிர்ந்து கொண்டேன். பத்தாண்டுகளுக்கு முன், சென்னையில் அதிவிமரிசையாக நடைபெற்ற ‘தசாவதாரம்’ படத்தின் பாடல் வெளியீட்டுக்குப் பிரபல நடிகர் ஜாக்கி சான் அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்வில் பாடல்கள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சி முடிந்து அனைவரும் மேடையை விட்டுக் கீழிறங்கியபோது, பாடல் பேழையைச் சுற்றிப் பொதியப்பட்டுக் கிழிக்கப்பட்டுக் கிடந்த குப்பையைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு கீழே இறங்கிய ஜாக்கி சான், இதை எங்கே போட வேண்டும் என்று நிகழ்ச்சித் தொகுப்பாளரிடம் கேட்டதாகப் படித்திருக்கிறேன்.

இதேபோல் இன்னொரு நேரடி அனுபவம் எனக்கே நிகழ்ந்தது. கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி எனும் ஊரில் மரக்கன்று நட்டபோது, நெதர்லாந்து நாட்டிலிருந்து தன்னார்வலராக வந்த ஒருவரும் எங்களுடன் இருந்தார். பிளாஸ்டிக் பையைக் கிழித்துவிட்டு மரக்கன்றுகளை நடுவதில் நாங்கள் மும்முரமாக இருந்தோம். ஆனால், அந்த நெதர்லாந்து நண்பரோ மரக்கன்றுகளை நட்டதோடு, நாங்கள் விட்டெறிந்த பிளாஸ்டிக் பைகளைக் கூச்சமின்றி தனது பேன்ட் பாக்கெட்டில் திணித்துக்கொண்டே இருந்தார். பேன்ட்டில் நான்கைந்து பைகள் இருந்ததால் அனைத்திலும் திணித்திருந்தார். கன்று நடும் பணி முடிந்தவுடன் அந்தப் பிளாஸ்டிக் பைகளை எடுத்து, இவற்றை எங்கே போட வேண்டும் என்று என்னிடம் கேட்டார். கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டதுபோல இருந்தது.

இந்தச் சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது நம் ஆதிக்கச் சிந்தனைக்கும் குப்பை போடுவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகத் தோன்றுகிறது. நம் சிந்தனையை முழுமையாகச் சீரமைக்காமல், சிறு வெள்ளத்திலிருந்துகூட நம்மால் தப்ப முடியாது என்றே தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

கட்டுரையாளர், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்

தொடர்புக்கு: arulagamindia@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x