Published : 04 Mar 2016 12:29 PM
Last Updated : 04 Mar 2016 12:29 PM

சினிமா ரசனை 36: திரைக்கதை எனும் பூனை

திரைக்கதை என்பது எந்தப் படத்துக்கும் மிக முக்கியமான அம்சம் என்னும் விழிப்புணர்வு இப்போது சற்றே பரவலாகத் திரையுலகில் ஏற்பட்டிருக்கிறது. முன்பு எப்போதையும் விட தற்போது அதிகமாகத் திரைக்கதை விவாதிக்கப்படுகிறது. தயாரிப்பாளர்களுக்குத் திரைக்கதையின் முக்கியத்துவம் புரிகிறது.

ஹாலிவுட்டில் திரைக்கதை எழுத்தாளர்கள் மிக அதிகம். அதேபோல் திரைக்கதையைப் பற்றிச் சொல்லிக்கொடுக்கக்கூடிய பிதாமகர்களும் அங்கே அதிகம். இவர்கள் பல புத்தகங்கள் எழுதியும் இருக்கிறார்கள். இவர்களில் முக்கியமானவர்கள்: ஸிட் ஃபீல்ட் (Syd Field), ராபர்ட் மெக்கீ (Robert Mckee), ப்ளேக் ஸ்னைடர் (Blake Snyder), லிண்டா செகர் (Lynda Seger), பாடி செயவ்ஸ்கி (Paddy Chayefsky), ஜோஸஃப் கேம்ப்பெல் (Joseph Campbell), மைக்கேல் ஹாஜ் (Mickael Hauge) போன்றோர். இன்னும் ஏராளமானவர்கள் இருந்தாலும், இவர்களே மிக முக்கியமானவர்கள். காரணம் இவர்களின் புத்தகங்கள்.

முக்கியமான புத்தகங்கள்

இவர்களில் இன்றும் ஹாலிவுட் திரைக்கதையமைப்பின் பிதாமகர் என்று கருதப்படுபவர் ஸிட் ஃபீல்ட். இவரது Screenplay: The Foundations of Screenwriting என்ற புத்தகம் உலகம் முழுக்கப் பிரபலம் (தமிழில் இந்தப் புத்தகம் ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ என்ற பெயரில் எனது எழுத்தில் அவரது அனுமதியோடு இரண்டு வருடங்கள் முன்னர் வெளிவந்துவிட்டது. தமிழ்ப் பட உதாரணங்களோடு விரிவாக எழுதப்பட்ட புத்தகம் இது). அடுத்ததாக, ராபர்ட் மெக்கீயின் Story: Substance, Structure, Style, and the principles of screenwriting என்ற புத்தகமும் உலகப் புகழ் பெற்றது. இவர்களுக்குப் பின்னர் ப்ளேக் ஸ்னைடர் எழுதிய Save the Cat என்ற புத்தகமும் ஸிட் ஃபீல்ட், ராபர்ட் மெக்கீயின் புத்தகங்களுக்கு இணையானது. உலகம் முழுக்க மிகவும் பிரபலமானது.

ஸிட் ஃபீல்டும் ராபர்ட் மெக்கீயும் ஆரம்ப காலங்களில் திரைக்கதைகள் எழுதியிருந்தாலும், பிரபலமான திரைக்கதைப் பயிற்சியாளர்களாக ஆன பின்னர் திரைக்கதைகள் எழுதியதில்லை (அல்லது எழுதிய திரைக்கதைகள் சரியாக வந்ததில்லை). ஆனால் ப்ளேக் ஸ்னைடர் ஹாலிவுட்டின் வெற்றிகரமான திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவர். Spec Script அல்லது speculative ஸ்க்ரீன்ப்ளே என்னும் வகையில் கில்லாடி.

அதாவது, திரைக்கதை எழுதும் நபர் ஒருவர் தானாகவே ஒரு கருவை யோசித்து, எந்த ஸ்டூடியோவும் தன்னை அணுகாதபோதும் முழுத் திரைக்கதையையும் முடித்துவிட்டு, அதன் பின்னர் அதனை ஸ்டூடியோக்களுக்கு விற்க முயல்வதுதான் Spec Scripts. இப்படி விற்கப்பட்ட திரைக்கதைகள் படமாகி பாக்ஸ் ஆபிஸில் மில்லியன்களை அள்ளும்போது அவற்றை எழுதிய திரைக்கதாசிரியர்கள் மீதும் புகழ்வெளிச்சம் பாயும்.

ஸ்பெக் திரைக்கதையின் ஜாம்பவான்

இப்படிப்பட்ட Spec Scripts உலகில் புயல் போல நுழைந்து கலக்கியவர்தான் ப்ளேக் ஸ்னைடர். 1989ல் ஸில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்த ‘Stop! Or My Mom will Shoot’ படம் வெளியானபோது ஹாலிவுட்டில் இவர் புகழ் பரவியது. அந்தப் படம் பாக்ஸ் ஆஃபீஸில் சரியாகப் போகாதபோதும், தனக்கே உரிய ஒரு மார்க்கெட்டை ப்ளேக் ஸ்னைடர் எளிதாக அடையாளம் கண்டுகொண்டார்.

குடும்பத்தோடு ரசிகர்கள் சென்று சிரித்து மகிழும் படங்கள்தான் அவை. இந்த வகையில் மொத்தம் பன்னிரண்டு Spec Scriptகளை ப்ளேக் ஸ்னைடர் எழுத, அவை அத்தனையும் மில்லியன்களில் விலைபோயின. தனது புகழின் உச்சத்தில் ஸ்பீல்பெர்க்குக்கே ஒரு திரைக்கதையை விற்றார் ப்ளேக் ஸ்னைடர் (Nuclear Family). அது திரைப்படமாக எடுக்கப்படவில்லை.

ஆனாலும், ஸ்னைடர் அதில் எக்கச்சக்கமாகச் சம்பாதித்தார். அவர் விற்ற பன்னிரண்டு திரைக்கதைகளில் மொத்தம் இரண்டே இரண்டுதான் திரைப்படமாக எடுக்கப்பட்டன (Stop! or My Mom Will Shoot ஒன்று. பின்னர் Blank Check இன்னொன்று. சமீபத்தில் வெளியாகியிருக்கும் Ride Along, தொண்ணூறுகளில் ஸ்னைடர் எழுதிய (அல்லது விவாதித்த) கதைதான்.

தனது புகழின் உச்சத்தில் இருந்தபோது ப்ளேக் ஸ்னைடர் எழுதிய புத்தகம், இன்றுவரையில் திரைக்கதை ஆர்வலர்களுக்கிடையே மிகவும் பிரபலம்.

‘பூனையைக் காத்தல்’

திரைக்கதைத் துறையில் இருந்ததால் அவரது புத்தகம் மிக எளிதாகவும் உண்மையாகவும் திரைக்கதை எழுதும் கலையை போதித்தது. ஹாலிவுட்டில் இப்படித் தான் கற்றுக்கொண்ட கலையைப் பற்றிப் புத்தகம் எழுதிய திரைக்கதையாளர்கள் மிகவும் குறைவு என்பதாலும், ப்ளேக் ஸ்னைடரின் புத்தகம் எக்கச்சக்கப் புகழ் அடைந்தது. அந்தப் புத்தகத்தின் பெயர் – Save the Cat! The Last Book on Screenwriting You’ll Ever Need’. இந்தப் புத்தகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இன்னும் இரண்டு புத்தகங்கள் இதே Save the Cat சீரீஸீல் எழுதினார் ப்ளேக் ஸ்னைடர்.

திரைக்கதை வகுப்புகளும் எடுக்க ஆரம்பித்தார். அதிலும் அதிரடி வெற்றியை ஈட்டினார். ஆனால் – மிகவும் வெற்றிகரமான திரைக்கதை எழுத்தாளர் + ஆசிரியராக சரசரவென்று புகழேணியில் ஏறிக்கொண்டிருந்த வேளையில், தனது 52-வது வயதில் ஆகஸ்ட் 2009ல் நுரையீரல் அடைப்பால் (Pulmonary Embolism) திடீரென்று இறந்துவிட்டார் ப்ளேக் ஸ்னைடர்.

ப்ளேக் ஸ்னைடரின் ‘Save the Cat! The Last Book on Screenwriting You’ll Ever Need’ புத்தகமும் படிக்க மிகவும் எளிமையானதாக இருக்கும். வந்த புதிதில் அபரிமிதமாக விற்றுத் தீர்ந்த புத்தகமாகவும் அது இருந்தது. யார் வேண்டுமானாலும் ஸிட் ஃபீல்டையோ அல்லது ராபர்ட் மெக்கீயையோ படித்துவிடமுடியாது. ஸிட் ஃபீல்டாவது பரவாயில்லை.

ஆனால் ராபர்ட் மெக்கீயை கேஷுவலாகப் படிக்க முயற்சித்தால் நீங்கள் பீதி அடைவது உறுதி. காரணம் அதில் உள்ள விஷயங்களைத் தெரிந்துகொள்ள, திரைக்கதையைப் பற்றி நன்றாக முதலில் தெரிந்திருக்கவேண்டும். ஆனால், ப்ளேக் ஸ்னைடரை உலகில் உள்ள எவரும் படிக்கலாம் என்பது அவரது ப்ளஸ் பாயிண்ட்.

திரைக்கதையில் ஆர்வம் இருக்கும் அனைவரும் இவைபோன்ற புத்தகங்களைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும்போது திரைக்கதை பற்றிய நமது புரிதல் விரிவடையும். திரைக்கதை எழுதும் நமது முயற்சிகளும் செம்மை பெறும். இந்த Save the Cat புத்தகம், மிக விரைவில் எனது எழுத்தில் புத்தகமாக வெளிவரப்போகிறது. இதனை ஏற்கெனவே என் வலைத்தளத்தில் Fade in முதல் Fade out வரை என்ற பெயரில் முழுவதுமாக மொழிபெயர்த்துவிட்டேன்).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x