Last Updated : 23 Jun, 2014 10:11 AM

 

Published : 23 Jun 2014 10:11 AM
Last Updated : 23 Jun 2014 10:11 AM

டாக்டர்களும் கேப்டனாகலாம்

இந்திய ராணுவத்தின், முப்படைகளில் யுத்தப் பிரிவு மட்டுமின்றி கல்வி, பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம் எனப் பல தரப்பட்ட பிரிவுகள் இயங்குகின்றன. ராணுவத்தின் மருத்துவப் பிரிவு ஆர்மி மெடிக்கல் கார்ப்ஸ் (Army Medical Corps) என அழைக்கப்படுகிறது. இதில் குறுகிய கால பணி (Short service commission), நிரந்தரப் பணி (Permanent Commission) என்று இரண்டு விதமான பணிகள் இருக்கின்றன.

எஸ்.எஸ்.சி. எனச் சுருக்கமாக அழைக்கப்படும் குறுகிய கால பணி என்பது முதலில் 5 ஆண்டுகள் பின்னர் 9 ஆண்டுகள் என 14 ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கப்படக்கூடியது. குறுகிய காலப் பணிக்கு மருத்துவர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வுசெய்யப்படுகிறார்கள். இதற்கு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்று இன்டர்ன்ஷிப்பும் முடித்திருக்க வேண்டும். வயது 45-க்குள் இருக்க வேண்டும். எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் படித்தவர்களும் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு குறுகிய காலப் பணிக்குத் தேர்வுசெய்யப்படும் டாக்டர்கள், மருத்துவப் பிரிவில் நேரடியாக கேப்டன் பதவியில் (கடற்படை, விமானப்படை எனில் இதற்கு இணையான பதவியில்) நியமிக்கப்படுகிறார்கள். மாதச் சம்பளம் ரூ.75 ஆயிரம் அளவுக்கு இருக்கும். முதுகலை மருத்துவப் பட்டதாரியாக இருந்தால் கூடுதலாக மாதம் ரூ.1,000 பி.ஜி அலவன்ஸ் கிடைக்கும். சம்பளத்துடன் இலவச ரேஷன், சலுகைக் கட்டணத்தில் குடியிருப்பு வசதி, மருத்துவ வசதி, கேண்டீன் வசதி, ரூ.40 லட்சத்துக்கு குரூப் இன்சூரன்ஸ் போன்ற சலுகைகளும் கிடைக்கும். 4 ஆண்டுகளில் மேஜர் பதவிஉயர்வு வழங்குவார்கள். அடுத்த 7 ஆண்டுகளில் லெப்டினென்ட் கர்னல் ஆகிவிடலாம். தொடர்ந்து பணியில் இருந்து, தகுதியும் திறமையும் இருந்தால் கர்னல், பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினென்ட் ஜெனரல் என உயர் பதவிகளுக்குச் செல்ல வாய்ப்புகள் உள்ளன.

தற்போது, மருத்துவப் பிரிவில் குறுகிய காலப் பணியில் 300 டாக்டர்களைத் தேர்வுசெய்ய இந்திய ராணுவம் அறிவிப்பு வெளி யிட்டிருக்கிறது. அவற்றில் 50 இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. எம்.பி.பி.எஸ். படித்து இண்டர்ன்ஷிபை 31.3.2014-க்குள் முடித்தவராக இருக்க வேண்டும். மேலும், 31.12.2014 அன்றுள்ளபடி 45 வயது பூர்த்தியாகி இருக்கக் கூடாது. மாநில மருத்துவ கவுன்சில் அல்லது இந்திய மருத்துவ கவுன்சிலில் (எம்.சி.ஐ.) பதிவுசெய்திருக்க வேண்டும். ராணுவ மருத்துவ பணியில் சேர விரும்பும் டாக்டர்கள் www.amcsscentry.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை மாதம் 3-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அந்த ஆன்லைன் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து தேர்வுக் கட்டணம் ரூ.200-க்கான (Director General, Armed Forces Medical Services, New Delhi என்ற பெயரில்) டிமாண்ட் டிராப்ட், ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளில் இருந்து (ஜூலை 3) 10 நாட்களுக்குள் டெல்லிக்கு அனுப்ப வேண்டும். ராணுவ வாரியத்தின் நேர்முகத் தேர்வு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் டெல்லியில் நடைபெறும். விண்ணப்ப முறை மற்றும் இதர தகவல்களை மேற்கண்ட இணையதள முகவரியில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x