Published : 18 Nov 2021 03:07 AM
Last Updated : 18 Nov 2021 03:07 AM

அகத்தைத் தேடி 69: நான்காம் தடத்தில் ஒரு பயணம்

ஸ்விட்சர்லாந்திலிருந்து தஞ்சைக்கு ஆய்வின் நிமித்தம் வந்த எவலின் மாசிலாமணி மேயர் தமிழ்நாட்டிலேயே சிறிது காலம் தங்க நேர்ந்தது. அவரது கணவர் மாசிலாமணி தமிழர். தஞ்சை நகரத்தின் புறநகர்ப் பகுதியில் ஒரு நேர்த்தியான இல்லத்தில் வசித்துவந்தார். “தமிழ்நாட்டில் அங்காள பரமேஸ்வரி வழிபாடு” (The Cult of Angalaparameswari in Tamilnadu) ஆய்வுக்காக தஞ்சை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு குக்கிராமங்களுக்குச் சென்று சிரத்தையோடு அவர் பதிவுசெய்த குறிப்புகள் ஆழமும் விரிவும் மிக்க நூலாக உருப்பெற்றது. இந்நூல் ஜெர்மனியில் உள்ள ஹைடல்பெர்க் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ஒருமுறை ஸ்விட்சர்லாந்து சென்று திரும்பியபோது எனக்கு ஒரு புத்தகத்தைப் பரிசளித்தார். புத்தகத்தின் பெயர் ‘தனித்தன்மைமிக்க மனிதர்களு டனான சந்திப்புகள்’(Meetings with Remarkable Men). அட்டையில் முறுக்கிய மீசை முழுவதுமாக மழிக்கப்பட்ட தலை, காந்தம்போல் கவரும் கண்களுடன் காட்சியளித்த மனிதர் ஒருவரின் அசாதாரண முகத் தோற்றம். ரஷ்ய ஞானி ஜார்ஜ் ஐவனோவிச் குர்ஜிப், தாந்திரிக மார்க்கத்தின் உச்ச நிலையைத் தொட்டவர். அவரது அனுபவத் தொகுப்புதான் அந்தப் புத்தகம்.

குர்ஜிப்பின் பால்யகால பள்ளி ஆசிரியர், தச்சர், கப்பல் பயணத்தில் சந்தித்த கடலோடி, உள்ளூர் ரொட்டி தயாரிப்பாளர், நிலக்கரி சுரங்க தொழிலாளி என்று சமூகத்தின் பலதரப்பட்ட மனிதர்கள் பற்றிய குணாம்சங்களை அசாதாரணத் தொனியில் முன்வைக்கும் சுவாரஸ்ய மான புத்தகம்.

காதலில் தோன்றிய மரணபயம்

இவர் தந்தை அர்மீனியாவில் வாழ்ந்த தச்சுத் தொழிலாளி மட்டுமில்லை. எசொக்குகள் என்று அழைக்கப்படும் தெருப் பாடகர்கள், கதை சொல்லிகள் கூட்டத்தைச் சேர்ந்தவர். எங்கு சென்றாலும் சிறுவனான குர்ஜிபை தன்னுடன் அழைத்துச் செல்வார். இனம்புரியாத ஒரு மாய உலகத்தில் தந்தையோடு சுற்றித்திரிந்த அனுபவம்தான் பின்னாளில் ஒரு ஞானியாக இவரைக் கனியவைத்தது.

இளைஞனாக இருந்தபோது ஒரு பெண்ணைக் காதலிப்பதில் இவருக்கும் இவர் நண்பருக்கும் இடையே நடந்த போட்டியில் ராணுவப் பயிற்சித் தளத்தின் பதுங்குகுழியில் துணிச்சலுடன் நாள் முழுதும் பதுங்கிக் கொண்டார். காதலியை விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் பந்தயம். பீரங்கிகளின் தாக்குதல் சூழ்ந்த பயங்கரமான இப்பந்தயத்தில் வென்று வெளிவந்தார். நண்பனோ ரத்தக்காயங்களுடன் கிடந்தான். அப்போது இவர் மனத்தில் காதலிக் கான ஏக்கத்தைவிட மரண பயமே மேலோங்கி நின்றது.

குர்ஜிப் மரணபயத்துக்கான விடைதேடி துருக்கி, கிரேக்கம், ஜார்ஜியா, இராக், எகிப்து, ஆப்கானிஸ்தான் என்று தூர தூரமாக தேசங்களில் அலைந்து திரிந்தார்.

நான்காம் தடம்

குர்ஜிப்பின் போதனை களை அவரது பிரதம சீடரான பி.டி.உஸ்பென்ஸ்கி தனது பிரசங்கத்திலும் நேர்ப் பேச்சிலும் நான்காம் தடம் என்று குறிப்பிடுகிறார்.

ஏதோ ஒரு பகற்கனவில் மிதந்தபடி தன்னிலை, தன்னிடம் மறந்து ஒருவித தூக்கமயக்கத்திலேயே மனிதர்கள் எந்திரத்தனமாக நடமாடுவதைக் கண்டு குர்ஜிப் துக்கிக்கிறார். உடல் மற்றும் மனத்தின் எந்திரகதியைத் தாண்டிப் பிரவேசிக்க முடிந்தால்தான், மனிதன் உண்மையாகவே எதையாவது முயலமுடியும் என்கிறார். மனிதன் சூன்யத்தோடுதான் வருகிறான், தன்னிடம் உள்ள காலித்தன்மையைத் தெரிந்துகொள்வதுதான் ஞானத்தின் முதல்படி என்கிறார் குர்ஜிப். ஆன்மா என்பது மனிதனின் சொந்த முயற்சியால் பிறப்பிக்க வேண்டியது என்கிறார்.

குர்ஜிப்பின் அசைவுகள்

குர்ஜிப் குறித்து வியப்பூட்டும் ஆன்மிகச் செய்திகளை எவலின்மூலம் நான் பெற்றேன். குர்ஜிப் தான் வாழ்ந்த காலத்தில் தனது அறிவுரைகளோ, கருத்துக்களோ குறித்து தமது சீடர்கள் எழுதுவதைத் தடுத்துவிட்டார். தனது மன்றத்தை மூடிவிட்டு அமெரிக்காவில் குடியேறினார். அவரை மந்திரவாதியாகக் கருதியோர் உண்டு. மந்திர சக்தியும் உளவியல் ஆற்றலும் அவரிடம் குடிகொண்டிருந்தது உண்மை.

தாமச குணங்களால் மூடுண்டிருக்கும் மனிதமனம் பொங்கி எழுந்தால் பெருஞ் செயல்களை சாதித்துவிட முடியும். பொருந்தாத செயல் களில் ஈடுபடும் மனிதர்களின் மனத்திரிபுகளிலிருந்து அவர்களை மீட்டெடுக்க அவர்கள் மிகவும் கடினமான, அசாத்தியமான காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் வாழ்வின் புதிய பரிமாணம் புலப்படும் என்று நம்பியவர் குர்ஜிப்.

மனிதன் பிறக்கலாம். ஆனால், அவன் பிறப்பதற்கு முதலில் இறக்க வேண்டும். அப்படி இறக்க வேண்டுமானால் அவன் முதலில் உறக்கத்திலிருந்து விழிக்க வேண்டும் என்றவர் குர்ஜிப்.

“சுய அறிவின்றி, தனது எந்திரத்தின் வேலைகள் பற்றிய புரிதல் இல்லாமல் மனிதன் விடுதலை அடைய முடியாது. அவனால் தன்னை நிர்வகிக்கவும் இயலாமல் ஆகிவிடுவதோடு அவன் எப்போதும் அடிமையாகவே இருப்பான்” என்றவர் குர்ஜிப்.

இதுவே வாழும் வழி. நான்காம் தடம்…

“நாம் பயணிக்கவேண்டிய தடம்...”

தமது நீலக்கண்கள் மினுங்க, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஒருநாள் முன்னிரவில் அவர் பேசிய பேச்சு இன்னும் நினைவிருக்கிறது.

எவலினை மீண்டும் பார்த்தேன்

எவலினைச் சந்தித்து 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. அவரது கணவர் இறந்துவிட்டார். அவரும் ஸ்விட்சர்லாந்து சென்றுவிட்டதாக அறிந்தேன். நானும் என் மனைவியும் அண்மையில் திருவண்ணாமலைக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தோம். எங்கள் பேச்சு எங்கெல்லாமோ சுற்றி எவலினிடம் வந்து நின்றது.

“நல்ல பெண்மணி. அந்த சிவப்பு நெற்றியில் பளிச்சென்று குங்குமத்தோடு அழகாக இருப்பாங்க இல்ல” என்று அங்கலாய்த்தார் என் மனைவி.

திருவண்ணாமலை ரமணாசிரமம் சென்றோம். பகவான் ரமணரின் சிலை இருக்கும் பீடத்தைச் சுற்றி பக்தர்கள் வலம்வந்து கொண்டிருந்தார்கள். அதில் சில வெளிநாட்டவரும் இருந்தார்கள்.

என் மனைவி சட்டென்று “அதோ அங்கே பாருங்க! எவலின்! என்று கத்தியேவிட்டார். ஆம், எவலினேதான்! அவரும் எங்களைக் கண்டுவிட்டார்.

எங்களை நோக்கிவந்து கோபால் எப்படி இருக்கீங்க? என்றார் கொச்சைத் தமிழில். என் மனைவியின் தோளை அன்புடன் தொட்டார்.

“இப்பத்தான், உங்களைப் பற்றி பேசிக்கொண்டு வந்தோம். நீங்கள் ஸ்விட்சர்லாந்திலிருந்து இங்கே வந்து நிற்கிறீர்கள், எப்படி வந்தீங்க நிமிஷத்தில்?” என்று கேட்டார் என் மனைவி சிரித்தபடி.

“நான்காம் தடத்தில் பயணித்து வந்தேன்!” என்று என்னைப் பார்த்து நீலக் கண்களைச் சிமிட்டிச் சிரித்தார் எவலின்.

(தேடல் தொடரும்),

கட்டுரையாளர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x