Published : 17 Nov 2021 03:06 AM
Last Updated : 17 Nov 2021 03:06 AM

சூழலியல் காப்போம்: யார் செய்த குற்றம்?

கார்குழலி, முகிலின் வீடு இருந்த இடம் பள்ளிக்கரணை அருகிலுள்ள வேளச்சேரி. அருகிலேயே சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள் நிறைய உண்டு. பல வகை நீர்ப்பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், வண்டுகளை எல்லாம் சாதாரணமாகப் பார்க்கலாம். அவ்வப்போது பாம்புகளும்கூட எட்டிப்பார்த்துச் செல்லும். நவம்பர் முதல் வாரஇறுதியில் பருவமழை வந்த பிறகு, அவர்களுடைய தெருவில் தண்ணீர் தேங்கிவிட்டது. நாள் முழுவதும் வீட்டிலிருந்து யாரும் வெளியில் போக முடியவில்லை.

தனியார் கல்லூரிப் பேராசிரியரான இவர்களுடைய அம்மா விடுமுறை எடுத்திருந்தார். அப்பா ஓர் இதழாளர். எழுதுவது, படிப்பது போன்ற வேலைகளுடனே எப்போதும் இருப்பார். நாள்தோறும் அவர் வேலைக்குப் போயாக வேண்டும். அன்று வீட்டிலிருந்து வேலை பார்த்தார். ஆனால், அந்தப் பகுதி முழுவதையும் நீர் சூழ்ந்து இருந்ததால் மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது. வீட்டிலிருந்தே வேலை பார்ப்பது என்றாலும்கூட, மின்சாரம் இல்லாமல் எத்தனை மணி நேரம் வேலை பார்க்க முடியும்?

சாலையில் தேங்கியிருந்த வெள்ளம் அடுத்த நாளில் சற்றுக் குறைந்தது. அன்றைக்கு எல்லோரும் வேலைக்குச் செல்லத் தொடங்கினார்கள். ஒரு வாரத்தில் எல்லாம் இயல்பாகின. ஆனால், நவம்பர் மூன்றாவது வாரம் மழை கொட்டித் தீர்த்தது. இந்த முறை அவர்கள் வீட்டு வாசல்படிவரை தண்ணீர் வந்துவிட்டது. அவர்களுடைய வீடு தரைத்தளத்தில் இருந்தது.

இரவு முழுவதும் எல்லோரும் விழித்திருந்தார்கள். வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டால் முக்கியமான பொருள்களைத் தண்ணீர் படாமல் எடுத்துவைக்க வேண்டுமே. ஏற்கெனவே தரையிலிருந்து ஓரடி உயரத்துக்குள் இருந்த பொருள்களை உயரமான இடங்களிலும் சிலவற்றை பரணிலும் ஏற்றி வைத்திருந்தார்கள். அன்றாடம் பயன்படுத்தும் எல்லாவற்றையும் பரணில் ஏற்றி வைக்க முடியாதல்லவா?

குழலியும் முகிலும் விழித்திருக்க முயன்றாலும் தூக்கம் அவர்கள் கண்ணைச் சுழற்றியது. இருவரும் சோபாவிலேயே அயர்ந்து தூங்கிவிட்டார்கள். அப்பாவும் அம்மாவும் குறிப்பிட்ட இடைவெளியில் அலாரம் வைத்து எழுந்து, வீட்டுக்குள் தண்ணீர் வருகிறதா என்று பார்த்து வந்தபடி இருந்தார்கள்.

“நான் அப்பவே சொன்னேன், வேளச்சேரியில வீடு வேண்டாம்னு. கேட்டீங்களா? பள்ளிக்கரணை மழை நீரைச் சேமிப்பதற்கான ஒரு சதுப்புநிலம். அது மட்டுமில்லாம இந்தப் பகுதி மொத்தமுமே தாழ்வானது. மழை பேஞ்சா தண்ணி இங்க வரத்தான் செய்யும்.”

“நீ சொல்றது சரிதான். ஆனா, சென்னைல இங்கதானே கட்டுப்படியாகுற வாடகைல, கொஞ்சம் தாராளமான இடத்தோட வீடு கிடைக்குது. ஊருக்குள்ள நம்மளால வாடகை கொடுத்து வாழ முடியுமா?”

“உண்மைதான். ஆனா, இப்படி வெள்ளம் வந்துட்டா எப்படா வீட்டுக்குள்ள தண்ணி வரும்னு முழிச்சுப் பார்த்துக்கிட்டிருக்க வேண்டியிருக்கே.”

“இந்த வெள்ளத்துக்குக் காலநிலை மாற்றம்தான் காரணம்னு உலக விஞ்ஞானிகள் சொல்றாங்க.”

“வேளச்சேரில வர்ற வெள்ளத்துக்கும் காலநிலை மாற்றம்தான் காரணம்னு சொல்றாங்களா?”

“அந்த அளவுக்குத் திட்டவட்டமா சொல்லல. மழை, வெள்ளம், புயல் போன்றவற்றின் தீவிரத்தையும் போக்கையும் கணிக்க முடியாது. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் கொட்டித் தீர்க்கலாம். புயல் காற்றின் வேகம் தீவிரமடையலாம். இந்தக் காரணங்களால் வெள்ளமும் ஏற்படலாம்னு சொல்றாங்க.”

“வெள்ளம் வந்தா வடியறதுக்கு வழியா இருக்குற கால்வாய்களையும் ஆற்றையும் பெரிய பெரிய நிறுவனங்களும் அரசுமே ஆக்கிரமிச்சிருக்கு. அதனால தண்ணி போக முடியாம ஊருக்குள்ள வெள்ளம் வர்றதுதான் உண்மையான காரணமா இருக்கும். பழைய செங்கல்பட்டு மாவட்டத்தை ஏரிகள் மாவட்டம்னு சொல்லுவாங்க. இன்னைக்குச் சென்னையில எத்தனை ஏரி மிஞ்சிருக்கு?”. இப்படி அவர்களுடைய பேச்சு நீண்டது.

முதல் மழை ஒரு நாளில் வடியத் தொடங்கிவிட்டாலும், இந்த மழை வடிய மூன்று நாள்களுக்கு மேல் ஆனது. பல நாள்களுக்கு மின்சாரம் தடைசெய்யப்பட்டதால், வீட்டில் எந்த வேலையும் ஒழுங்காக நடைபெறவில்லை. கழிப்பறை செல்ல, குளிக்க, சமையல் செய்ய என அன்றாட வேலைகள்கூடப் பிரச்சினையாக மாறியிருந்தன. எல்லாவற்றுக்கும் தண்ணீ்ர் வேண்டும். கைபேசிகளில் யாருடனும் தொடர்புகொள்வதற்கும் மின்சாரம் அவசியமாக இருந்தது. வெளியில் வேலைக்கும் போக முடியவில்லை.

அடுத்தடுத்து இரண்டு முறை மழை பெய்ததால், சாலையை அடைத்திருந்த வெள்ளம் நிரந் தரமானதுபோல் ஆகிவிட்டிருந்தது. வீட்டுக்கு அருகே சாரைப் பாம்புகள் ஊர்ந்து செல்லத் தொடங்கின. இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியில் செல்ல முடியவில்லை. வண்டியின் எஞ்சினுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டால் பிரச்சினை, அல்லது சேற்றில் சிக்கிக்கொண்டு நகர மறுக்கலாம், நடந்து சென்றாலும்கூட எந்த இடத்தில் என்ன இருக்கும் எனத் தெரியாமல் ஏதாவது குழியில் விழலாம். சிறியவர்கள் பள்ளிக்கும் பெரியவர்கள் வேலைக்கும் செல்வது மிகுந்த பிரச்சினைக்கு உள்ளாகியிருந்தது.

இப்படி இயல்பு வாழ்க்கை பிரச்சினைக்கு உள்ளாகியிருந்த நிலையில், குழலிக்கும் முகிலுக்கும் ஒரே குழப்பமாக இருந்தது.

“நமக்காவது பரவாயில்லை குழந்தைகளா. குடிசை வீட்டிலும் நீர்நிலை ஓரமாகவும் வசிக்கிற சாதாரண மக்களை நினைச்சுப் பாருங்க. ஒவ்வொரு வெள்ளத்துக்குப் பிறகும் எல்லாவற்றையும் இழந்து, அவங்களோட எதிர்காலமே கேள்விக்குறியாகிடுது” என்று கவலையுடன் கூறினார் அப்பா. இதுக்கெல்லாம் தீர்வு இல்லையாப்பா என்று இருவரும் ஒரே குரலில் கேட்டார்கள்.

“உங்களைவிடச் சற்றே வளர்ந்த குழந்தைகளான ஸ்வீடனின் கிரெட்டா துன்பர்க்கும் திருவண்ணாமலையின் வினிஷாவும் சொல்றதை நாம எல்லோரும் கேட்கணும்”.

“அவங்க என்னம்மா சொல்றாங்க?”

“தனிநபர்கள் பூவுலகை, இயற்கையைச் சீர்கெடுக்கிறதை நிறுத்தியாகணும்.சுற்றுச்சூழல் சீரழிவைத் தடுக்குறவேலைய அரசு முழு வீச்சுல முன்னெடுக்கணும், அதுக்கு மட்டும்தான் முன்னுரிமை கொடுக்கணும். இல்லேன்னா உங்களைப் போன்ற அடுத்த தலைமுறைக்கு வாழ்க்கையே இருக்காதுன்னு சொல்றாங்க.”

“சரியாத்தான் சொல்லியிருக்காங்க அம்மா. இந்தப் பூவுலகு நம் அனைவருக்குமானது. நம் அனைவரையும் வாழவைக்குது. அதைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நாம ஒவ்வொருவருக்கும் உண்டுதானே” என்றாள் கார்குழலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x