Last Updated : 16 Nov, 2021 03:07 AM

 

Published : 16 Nov 2021 03:07 AM
Last Updated : 16 Nov 2021 03:07 AM

சென்னை வெதர் பிளாக்கர்கள் பராக்!

பருவ மழை காலங்களில் வானிலை ஆய்வு மையங்களின் பணி அளப்பரியது அரசு நிறுவனங்களில் ஒன்றாகவே வானிலை ஆய்வு மையங்கள் இருந்துவரும் சூழலில், கடந்த ஒரு தசாப்தசமாகத் தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்களும் பருவ மழை காலங்களில் வானிலையைக் கணித்து வெளியிட்டு வருகிறார்கள். அதில் ‘தமிழ்நாடு வெதர்மேன்’ மிகப் பிரபலம். அவரைப் போலவே குழுவாக இணைந்து செயல்படும் ‘வெதர் பிளாக்கர்ஸ்’ சென்னையில் பலர் உண்டு. அவர்களைப் பற்றி பார்ப்போமா?

சென்னை ரெயின்ஸ்

‘சென்னை ரெயின்ஸ்’ என்ற பெயரில் செயல்படும் இந்த பிளாக்கை உருவாக்கியவர் கே.காந்த். இதற்கென தனியாக ஓர் இணையதளமும் உள்ளது. ‘சென்னையில் ஒரு மழைக்காலம்’ என்ற பெயரில் வானிலை தொடர்பான கட்டுரைகள், தகவல்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். வானிலை தன்னார்வலர்கள் பலர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இதற்காக கோவிலம்பாக்கம், போரூர், மேட்டுக்குப்பம், சைதாப்பேட்டை, திருமுல்லைவாயில், அம்பத்தூர், திருத்துறைப்பூண்டி(டெல்டா), மேட்டுப் பாளையம் ஆகிய இடங்களில் மழை மானியை வைத்து தகவல்களைச் சேகரிக்கிறார்கள். வெவ்வேறு பகுதிகளில் பெறப்படும் மழை தொடர்பான தகவல்களை வைத்து கட்டுரைகளை உருவாக்குகிறார்கள். இந்த பிளாக்கர்கள் குழுவில் புதிதாக அண்ணாநகரும் சேர்ந்திருக்கிறது. அங்கும் மழை மானியை வைத்து தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதிகாரப்பூர்வ வானிலை நிலவரங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தைப் பின்தொடருங்கள் என்ற பொறுப்பு துறப்புடன் இந்த பிளாக்கர்கள் குழு செயல்படுகிறது.

தொடர்புக்கு: https://www.chennairains.com/

கேஇஏ வெதர்

சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இன்னொரு வெதர் பிளாக்கர் கேஇஏ. 2004-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிளாக்கர்ஸ் குழு இது. கே.இஷான் அகமது என்பவர் இதைத் தொடங்கினார். அவருடைய பெயரின் சுருக்கம்தான் கேஇஏ. இந்த பிளாக்கர் குழுவில் வானிலை தொடர்பான கட்டுரைகள் பதிவிடப்படுகின்றன. வானிலை தொடர்பான தகவல்களை சமூக ஊடகங்களிலும் இதில் பங்களிப்போர் பகிர்கிறார்கள். பருவ மழைக் காலங்களில் சில வேளைகளில் அதிக மழை பொழிவை சந்திக்கும் சென்னை மாநகரம்தான், பிற காலங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நகரமாகவும் உள்ளது. அதனாலேயே, இந்த பிளாக்கர்ஸ் குழுவில் பலரும் ஆர்வமாக எழுதி வருகிறார்கள். இந்த பிளாக்கர் குழுவில் வானிலை நிலவரம், சென்னை ஏரி நிலவரம், வானிலை ஆய்வு மையங்களின் இணைப்புகள் எனப் பலவற்றையும் ஒரே இடத்தில் காணலாம். வெவ்வேறு பிளாக்கர்களின் கட்டுரைகளையும் படிக்கலாம்.

தொடர்புக்கு: https://kwschennai.com/about.htm

சென்னை வெதர்

சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சீனியர் வானிலை தன்னார்வலர் ராஜா ராமசாமி. இவர்தான் ‘சென்னை வெதர்’ பிளாக்கைத் தொடங்கியவர். இவர், கடந்த 30 ஆண்டுகளாக வானிலை தன்னார்வலராக உள்ளார். ‘சென்னை வெதர்’ என்ற பெயரில் இணையதளமும் வைத்திருக்கிறார். சென்னை வானிலை தொடர்பான நிலவரங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அதோடு, சென்னையின் வானிலை தகவல்களை ட்விட்டரில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டு வருகிறார்.

தொடர்புக்கு: https://www.chennaiweather.org/

குழுவாக இணைந்து செயல்படும் வெதர் பிளாக்கர்கள் தவிர்த்து, தனியொருவராக வானிலை நிலவரங்களை கணித்து சமூக ஊடகங்களில் வெளியிடுவோர் சென்னைக்கு வெளியேயும் அதிகரித்து வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x