Published : 15 Nov 2021 07:11 AM
Last Updated : 15 Nov 2021 07:11 AM

அச்சுறுத்தும் போதை வலை

அச்சுறுத்தும் அளவுக்கு இந்தியாவில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. பாலிவுட் நட்சத்திரங்கள் தொடங்கி பள்ளி மாணவர்கள் வரையில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக கைதாகும் செய்திகள் தொடர்ச்சியாக வந்தபடி உள்ளன.

கடந்த செப்டம்பர் மாதத்தில், குஜராத்தில் அதானி குழுமத்துக்குச் சொந்தமானமுந்த்ரா துறைமுகத்தில் 3.2 டன் அளவில் ஆப்கான் ஹெராயின் பிடிபட்டது.அதன் மதிப்பு ரூ.21,000 கோடி. இவ்வாண்டில் இதுவரையில் 6 டன்னுக்கு மேல்ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது இரு மடங்கு அதிகம்.

போதைப்பொருள்கள் உற்பத்தி மற்றும் விநியோகம் என்பது மிகப் பெரிய வலைப்பின்னல். உலகில் பயன்படுத்தப்படும் அபின், ஹெராயின் போன்றஓப்பியாய்டு வகை போதைப்பொருள்களின் உற்பத்தியில் ஆப்கானிஸ்தான் 83 சதவீதம் அளவில் பங்கு வகிக்கிறது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றுவதற்கு முன்பு வரையில் அவர்களுக்கான முதன்மை நிதி ஆதாரம் போதைப்பொருள்கள் ஏற்றுமதிதான்.

ஆப்கானில் தயார்செய்யப்படும் போதைப்பொருள்கள் ஈரான் மற்றும் பாகிஸ்தான் வழியாக உலகநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து பயணப்படும் போது 1 கிலோஹெராயின் விலை ரூ.10,000 என்றால்,அது பல இடங்களுக்கு கைமாறி மும்பையை அடையும்போது அதன் விலை ரூ.50 லட்சம். நியூயார்கை அடையும்போது அதன் விலை ரூ.1 கோடி. அந்தவகையில் போதைப்பொருள் கடத்தல் பல கோடிகள் புழங்கும் வியாபாரமாக உள்ளது.

ஆப்கானிஸ்தான் போதைப்பொருள்கள் உற்பத்தியில் முதன்மை இடம் வகிக்கிறது என்றால், இந்தியா போதைப்பொருள்கள் நுகர்வில் மிகப் பெரும் சந்தையாக திகழ்கிறது. ஓப்பியாய்டு நுகர்வில் உலக சராசரி 0.7 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் ஒப்பியாய்டு நுகர்வு 2.06 சதவீதமாக உள்ளது. இதில் கூடுதலாக கவனிக்கத்தக்க விசயம் போதைப்பொருள் நுகர்வில் மட்டுமல்ல, கைமாற்றிவிடும் இடமாகவும், விநியோக மையமாகவும் இந்தியா உள்ளது என்பதுதான். ஓப்பியாய்டு வகை போதைப்பொருள்கள் இந்தியா –பாகிஸ்தான் எல்லை வழியாகவும், கஞ்சா வகை போதைப்பொருள்கள் இந்தியா - நேபாள் எல்லை வழியாகவும் ஏடிஎஸ் வகை போதைப்பொருள்கள் இந்தியா - மியான்மர் எல்லை வழியாகவும் இந்தியாவுக்குள் கடத்தப்படுகின்றன.

இந்தியாவில் முறைகேடான போதைப்பொருள் சந்தையின் மதிப்பு ரூ.30,000 கோடிக்கு மேல் என்று அனுமானிக்கப்படுகிறது. மும்பை இந்தியாவின் போதைப்பொருள் கடத்தலின் தலைநகரமாக திகழ்கிறது.

நைஜீரியா தொடங்கி தென் அமெரிக்கநாடுகளான பெரு, பிரேசில், சிலி ஆகியநாடுகளின் போதைக் கடத்தல் கும்பல்கள்மும்பையுடன் நெருங்கிய தொடர்பில்உள்ளன. இப்போது போதைப்பொருள்கள் விற்பனை இணையதளங்கள் மூலம் நடக்கிறது. கூரியர்கள் மூலமும் அவை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுகிறது. சிறிய பொட்டலங்களாக அனுப்பப்படுவதால் இதை கண்டறிவது கடினமாக உள்ளது.

இந்தியாவில் 5 கோடி பேர் தீவிர போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர் என்று மத்திய அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது. அதில் 2.3 கோடி பேர் ஹெராயின் போன்ற ஒப்பியாய்டு வகை போதைப்பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஹெராயின் பயன்பாடு மிக அதிக அளவில் உள்ளது.

தற்போதைய இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்துவரும் மது, சிகரெட்போன்ற பழக்கங்கள் கவலையளிப்பதாக உள்ள நிலையில் தற்போது சில இளைஞர்கள் கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப் பழக்கத்துக்கு அடிமையாவது மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதை மாத்திரைகள் அதிக அளவில் புழங்கிக்கொண்டிருக்கின்றன.

போதைப்பொருள்களை பயன்படுத்துபவர்களில், 10 முதல் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளாக அதிகரித்துவருகிறது. போதை பழக்கம் மீட்பு தொடர்பான மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது. அதேபோல் போதைப்பழக்கத்தின் விளைவாக தற்கொலைசெய்துகொள்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த பத்தாண்டுகளில் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது.

ஒரு சமூகத்தில் போதைப்பொருள்களின் பயன்பாடு அதிகரிப்பது என்பது அந்தச் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தச் சமூகம் வன்முறை மிக்கதாகவும், பாதுகாப்பற்றதாகவும் மாறும். இந்தப் புதைகுழியிலிருந்து இளைய தலைமுறையினரைக் காப்பது என்பது அவர்களின் குடும்பத்தினருக்கும் சரி, அரசுக்கும் சரி எளிதான செயல்பாடாக இருக்கப்போவதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x