Published : 14 Nov 2021 03:06 AM
Last Updated : 14 Nov 2021 03:06 AM

பறிக்கப்பட்ட குழந்தையைத் தேடும் தாய்

கேரளத்தில் ஓர் இளம் தாய், தான் பெற்ற குழந்தையைத் தேடும் போராட்டம் அந்த மாநில அரசாங்கத்தையே உலுக்கிவருகிறது. இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்.எஃப்.ஐ.) முன்னாள் தலைவரான 22 வயது அனுபமா எஸ். சந்திரன், கேரள தலைமைச் செயலகத்தின் முன்பு, தனது துணைவரோடு நீதிகேட்டு தினசரி போராடிவருகிறார். பிறந்து மூன்றே நாட்களான தன் குழந்தையை, போலி கௌரவத்துக்காகத் தன்னிடமிருந்து பறித்து, ஒப்புதல் இல்லாமல் தத்துக்குக் கொடுத்த பெற்றோர்களை எதிர்த்தும், தற்போது அந்தக் குழந்தை இருக்கும் இடத்தைத் தேடியும் அவர் இந்தப் போராட்டத்தை நடத்திவருகிறார்.

அனுபமாவின் பிரச்சினை அரசியல் பிரச்சினை ஆக மாறியிருப்பதற்குக் காரணம் அவரது தந்தை உள்ளூர் சிபிஐ(எம்) கட்சியின் தலைவர் ஆவார். அவரது தாத்தாவோ அதே கட்சியின் முன்னாள் மாநிலக் குழு உறுப்பினர். ஒரு பெண்ணின் தேர்வு, விருப்பத்துக்கு கேரளா போன்ற முற்போக்கான பின்னணி உள்ள மாநிலத்திலும் மதிப்பு இல்லையா எனும் விவாதத்தை அனுபமாவின் போராட்டம் கிளப்பியுள்ளது.

பெற்றோர் விதித்த தடை

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஜித் குமாருடன் இணைந்து வாழத் தொடங்கிய அனுபமாவுக்குக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அஜித் குமார், தனது முந்தைய திருமணத்தின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் அனுபமாவுடன் சேர்ந்து வாழத் தொடங்கியதாலும் அவர் தலித் என்பதாலும் அனுபமாவின் பெற்றோர் இந்த ஏற்பாட்டை எதிர்த்து வந்திருக் கின்றனர். அனுபமா எட்டாவது மாதம் கர்ப்பமாக இருந்தபோது, கர்ப்பத்தைக் காரணம் காட்டி அவரது பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். வீட்டுக்கு வந்தபிறகு அனுபமாவை அஜித்துடன் பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. அனுபமாவின் வயிற்றில் உள்ள கருவையும் அவரது பெற்றோர்கள் கலைக்க முயற்சி செய்துள்ளனர்.

இச்சூழ்நிலையில் கோவிட் தொற்று வந்ததையடுத்து மருத்துவமனையில் தனியாக இருக்கும் சூழ்நிலை அனுபமாவுக்கு ஏற்பட்டது. அப்போது அவர் அஜித்தைத் தொடர்புகொண்டு தப்பித்துச் சென்றுள்ளார். மீண்டும் அனுபமாவைத் தொடர்புகொண்ட பெற் றோர்கள், தங்கையின் திருமணத்தைக் காரணம் காட்டி அனுபமாவை திருவனந்தபுரத்துக்கு அழைத்துச் சென்றனர். அனுபமாவின் தந்தை ஜெயச்சந்திரன் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தனது சித்திரவதையை மகள் மீது ஆரம்பித்துள்ளார். வயிற்றில் உள்ள குழந்தையின் நலன் கருதி அனைத்தையும் பொறுத்துக் கொண்டுள்ளார் அனுபமா.

பறிக்கப்பட்ட குழந்தை

கடந்த அக்டோபர் 19ஆம் தேதி திருவனந்தபுரம் அருகே கட்டக்கடாவில் உள்ள மருத்துவமனையில் ஒரு ஆண்மகவைப் பெற்றெடுத்தார் அனுபமா. மூன்று நாட்களுக்குப் பிறகு அனுபமாவையும் குழந்தையையும் அழைத்துச் சென்ற கார் நடுவில் நின்றது. அனுபமாவிடமிருந்து குழந்தை பறிக்கப்பட்டது. அனுபமாவின் அப்பாவும் அம்மாவும் இன்னொரு காரில் குழந்தையைத் தூக்கிப்போட்டுச் சென்றதாகக் கூறுகிறார் அனுபமா. அதற்குப் பிறகு அனுபமா தனது குழந்தையைப் பார்க்கவேயில்லை.

இந்தச் சூழ்நிலையில் விவாக ரத்தை முறையாகப் பெற்ற அஜித், அனுபமாவைப் பார்க்க வந்த நிலையில் அவர் மிரட்டப்பட்டு விரட்டியடிக்கப் பட்டிருக்கிறார். அனுபமாவுக்கு மன நோய் என்று சொல்லி விடுதியில் சிறை வைத்து விடுவோம் எனத் தந்தையும் தாயும் அவரை மிரட்டியுள்ளனர்.

அனுபமாவின் போராட்டம்

அதன் பின்னர், பாட்டி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அனுபமா ஒருவழியாக இந்த ஆண்டு மார்ச் மாதம் அங்கிருந்து துணைவர் அஜித்துடன் தப்பித்து வெளியேறினார். பீரூர்கடா காவல்நிலையத்தில் தன் குழந்தையைத் தேடி முதல் புகாரைக் கொடுத்தார். அரசின் தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சட்டப்பூர்வமாக ஜெயச்சந்திரன் கொடுத்துவிட்டதாகக் கூறியது அப்போதுதான் அவருக்குத் தெரியவந்திருக்கிறது. காவல்நிலையத்தில் புகார் செய்ததோடு தந்தை சார்ந்த கட்சியின் மாவட்டச் செயலாளருக்கும் கடிதம் கொடுத்து நடவடிக்கையை அனுபமா அன்றே கோரினார். அத்துடன் மாவட்ட குழந்தை நல கமிட்டியிலும் தொடர்புகொண்டு தனது புகாரைத் தெரிவித்தார். கடைசியில் முதலமைச்சருக்கும் புகார் தெரிவிக்கப்பட்டது.

தெரிந்தே நடந்த முறைகேடா?

அனுபமா குழந்தையைப் பிரசவித்து பத்து மாதங்களுக்குப் பின்னர், அவரது தந்தையும் காவல்துறை அதிகாரியும் சேர்ந்து குழந்தை மேம்பாட்டுக்கான மாநில கவுன்சில் நடத்தும் ‘அம்மதொட்டில்’ திட்டத்தில் குழந்தையைக் கொடுத்த விவரம் தெரிந்தது. ஆனால் அதே நாள் இரவில் இரண்டு குழந்தைகள் அங்கே கொடுக்கப்பட்டதுதான் அனுபமாவுக்குக் கூடுதல் போராட்டத்தைக் கொடுத் துள்ளது. ஏனெனில் கொடுக்கப்பட்ட குழந்தைகளில் ஒரு குழந்தை தவறாகப் பெண் பாலினம் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தெரியாமல் நடந்த தவறா? தெரிந்தே நடந்த முறைகேடா? என்பதுதான் இந்த வழக்கை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

ஒரு குழந்தை ஏற்கெனவே தத்துக் கொடுக்கப்பட்ட நிலையில் கவுன்சிலில் மிஞ்சியிருந்த இன்னொரு குழந்தையைப் போய்ப் பார்க்க அனுபமாவுக்கும் அஜித்துக்கும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அந்தக் குழந்தை அனுபமாவுக்குப் பிறந்த குழந்தை அல்ல என்பது மரபணு சோதனை மூலம் நிரூபணமாகியுள்ளது.

தொடரும் போராட்டம்

குழந்தையை தன்னுடைய பெற்றோர்கள் என்ன செய்தார்கள் என்கிற பெரிய கேள்வியுடன் தனது தேடுதல் போராட்டத்துக்காகத் தலைமைச் செயலகத்தின் வாசலில் அமர்ந்திருக்கிறார் அனுபமா. ஒரு தாயின் சம்மதம் இல்லாமல் அரசுத் திட்டம் சார்பில் ஒரு குழந்தை எப்படிப் பெறப்பட்டது என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. கட்சி அமைப்பு, அரசு அமைப்புகள் அத்தனையும் அனுபமா வின் போராட்டத்தைத் தொடங்கிய ஆரம்பக்கட்டத்தில் அலட்சியம் காட்டி அவரது நியாயத்தைப் புறக்கணித்தன. தற்போது அரசும், கட்சி அமைப்புகளும் அவரது நீடித்த போராட்டத்துக்கு இணங்கி ஆதரவு காட்டத் தொடங்கியுள்ளன. வயிற்றில் குழந்தை இருக்கும்போது தான் சந்தித்த அத்தனை போராட்டங்களும் அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்ப்பதற்குத்தான் என்கிறார் அனுபமா. இப்போதும் அந்தப் பையனின் முகத்தைப் பார்ப்பதற்குத்தான் தனது போராடத்தைத் தொடர்ந்து வருகிறார் அனுபமா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x