Published : 10 Nov 2021 03:06 AM
Last Updated : 10 Nov 2021 03:06 AM

புதிய கண்டுபிடிப்புகள்: பூமியின் பிரகாசம் மங்குகிறதா?

கடந்த இருபது வருடங்களில் பூமியின் அல்பீடோ விகிதம் எனப்படும் எதிரொளிக்கும் திறன் மங்கிவருகிறது. சுமார் 0.5 சதவீதம் பூமியின் பிரகாசம் மங்கிவிட்டது என்று வானியற்பியலாளர் பிலிப் கூடே நடத்திய ஆய்வில் தெரிந்திருக்கிறது.

பூமி தானே ஒளியை உருவாக்குவதில்லை. நிலா, கோள்கள் உட்பட எல்லா சூரிய மண்டல வான்பொருள்களும் சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால்தான் அவற்றுக்குப் பிரகாசம் கிடைக்கிறது. தன் மீது படும் சூரிய ஒளியில் சுமார் முப்பது சதவீதத்தை, பூமி விண்ணை நோக்கிப் பிரதிபலிக்கிறது.

பிறை நிலாவில் பிரகாசமாகத் தென்படும் பகுதி நேரடியாகச் சூரிய ஒளியைப் பெற்று பிரதிபலிக்கிறது. கருமையாக உள்ள பகுதி சூரியனுக்கு எதிர்த் திசையில் உள்ளது. எனினும் அங்கே பூமி பிரதிபலிக்கும் ஒளி ஓரளவு படரும். இதுதான் ‘புவி ஒளி’. மூன்று, நான்காம் நாள் பிறையின்போது பூமியின் எதிரொளி நிலவில் படிவதைக் காணலாம்.

1998 முதல் 2017 வரை நிலவின் கருமை பகுதியில் படரும் புவி ஒளியை ஆய்வு செய்ததில், பூமியின் பிரகாசம் மங்கி வருவது உறுதியானது.

பூமியின் பிரகாசத்தை இரண்டு அம்சங்கள் தீர்மானிக்கின்றன. சூரியனின் பிரகாசம், பூமியின் பிரதிபலிப்பு திறன். பூமியின் எதிரொளிக்கும் திறன் விகித மாற்றத்துக்கும் சூரிய பிரகாச வேறுபாடுகளுக்கும் பெரிய தொடர்பு இல்லை. அப்படி என்றால் பூமியில் ஏற்படும் நிகழ்வுகள்தாம் பிரகாசம் மங்குவதற்கான காரணம்.

செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி விண்ணை நோக்கிப் பூமி திருப்பும் பிரதிபலிப்பு ஒளியை ஆய்வுசெய்தார்கள். சில ஆண்டுகள் மங்கியும் சில ஆண்டுகள் பிரகாசமாகவும் காணப்பட்டது. குறிப்பாகப் பசிபிக் பெருங்கடலில் நீர் அதிக அளவில் சூடாகும்போது பிரதிபலிப்பு மங்குகிறது. நீர் குளிர்ச்சி அடையும்போது பிரதிபலிப்பு கூடுகிறது என்று கண்டுபிடித்தார்கள்.

வெண் மேகங்கள் கூடுதல் பிரதிபலிப்பு தன்மை கொண்டவை. பசிபிக் கடல் குளிர்ச்சி அடையும்போது கூடுதல் மேகங்கள் ஏற்படுகின்றன. அடர்த்தியான வெண் மேகங்கள் ஒளியைப் பிரதிபலித்து விண்ணுக்குச் செலுத்துகின்றன. இதன் காரணமாகப் பூமி சற்றே பிரகாசமாகத் தென்படும். பூமியின் மீது விழும் சூரிய ஒளி குறையும். புவி வெப்பமடைதல் குறையும். கடல் கூடுதல் வெப்பம் அடையும்போது மேக மூட்டம் குறையும். கூடுதல் வெப்பம் பூமியை அடையும். எனவே, பூமியின் பிரகாசம் மங்கும்.

பசிபிக் பெருங்கடலில் சால்மன் மீன்களின் எண்ணிக்கையில் ஏற்ற இறக்கங்கள் உள்ளன. மேற்கு பசிபிக் கடல் பகுதி குளிர்ச்சி அடையும்போது கிழக்கு பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதி வெப்பமடைகிறது. அப்போது அலாஸ்காவில் சால்மன் மீன்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. மேற்குப் பகுதி வெப்பமடைந்து, கிழக்குப் பகுதி குளிர்ச்சி அடையும்போது சால்மன் மீன்களின் எண்ணிக்கை குறைகிறது. பத்தாண்டு பசிபிக் கடல் வெப்ப அலைவு காரணமாக மேக உற்பத்தியிலும் மாற்றம் ஏற்படும். இதன் தொடர்ச்சியாகப் பூமியின் பிரகாசம் கூடிக்குறையும்.

ஆர்க்டிக், அண்டார்க்டிகாவில் படர்ந்துள்ள உறைபனி, காற்றில் மிதக்கும் நுண் தூசு துகள்கள்கூடச் சூரிய ஒளியை விண்ணுக்குத் திருப்பிவிடும். கூடுதல் சூரிய ஒளியை வளிமண்டலமே பிரதிபலித்துவிட்டால், பூமியின் மீது விழும் சூரிய ஒளியின் அளவு குறையும். சூரிய ஒளி அளவு குறைந்தால் பூமியின் வெப்பநிலை உயர்வு கட்டுக்குள் வரும் என ஆய்வாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், புவி வெப்பத்தின் தொடர்ச்சியாகப் பூமியின் உறைபனி குறைந்துவருகிறது. கூடுதல் ஆற்றலைப் பூமி உறிஞ்சிக்கொள்வதால் கூடுதலாகப் பூமி வெப்பமடைகிறது.

பிரகாசம் மங்கும் பூமி எனில் புவி வெப்பமடைதல் மேலும் தீவிரம் அடையும். ஒவ்வொரு சதுர மீட்டர் பரப்பளவும் சராசரியாக 0.5 வாட் ஆற்றலைக் கூடுதலாக உறிஞ்சிக்கொள்கிறது என்கிறார் பிலிப் கூடே. பசுங்குடில் வாயுக்கள் அதிகரிப்பதன் காரணமாகப் பூமியின் ஒவ்வொரு சதுர மீட்டர் நிலப்பரப்பும் சுமார் 0.6 வாட் ஆற்றலைக் கூடுதலாகப் பெற்று, புவியை மேலும் வெப்பமடையச் செய்கிறது. புவி வெப்பமடைதலில் பாதி பூமியின் பிரதிபலிப்பு குறைந்து பிரகாசம் மங்கியதன் தொடர்ச்சியே. எப்படிக் காற்று மாசு குறித்து கவலைப்படுகிறோமோ அதே மாதிரி பூமியின் எதிரொளிக்கும் திறன் குறைந்துபோவது குறித்தும் கவலைகொள்ள வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கட்டுரையாளர், விஞ்ஞானி

தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x