Published : 22 Mar 2016 12:20 PM
Last Updated : 22 Mar 2016 12:20 PM

மாறுபட்ட அணுகுமுறை: அடிக்காமல் திருத்தலாமே!

காலை இடைவேளை முடிந்து ஆறாம் வகுப்புக்குள் நுழையும்போதே ஆசிரியரால் ஒரு வித வித்தியாசத்தை உணரமுடிந்தது. கடைசி இருக்கையில் ஒரு மாணவன் படுத்துக்கொண்டிருக்க “என்ன ஆச்சு?” என்ற ஆசிரியரின் பார்வைக்கான பொருள் உணர்ந்து வகுப்புத் தலைவன், ‘‘மிஸ் ஆகாஸ் அவனை அடிச்சிட்டான். மூக்கிலிருந்து ரத்தமா கொட்டுச்சு. ஐஸ் வைச்சு இப்பத்தான் நின்னுருக்கு” என்றான்.

அவன் சொல்லி முடிப்பதற்குள் தன் இருக்கையிலிருந்து எகிறி வேகமாக வெளியே வந்த ஆகாஸ், ‘‘டேய் உனக்குத் தெரியுமா? ஓடி வரும்போது தெரியாம அவனை மிதிச்சுட்டேன். அதுக்கு அவன்தான் என்னை முதல்ல அடிச்சான். நான் திருப்பி அடிச்சேன். அவ்வளவுதான்” என்றான். அவன் வந்த வேகத்தையும், அவனது உடல் அசைவுகளையும் பார்த்து, எங்கே தன்னையும் அடித்து விடுவானோ என்று பயந்த வகுப்புத் தலைவன் ஆசிரியரின் பின்னால் போய் ஒளிந்தான். உடனே எழுந்த உதவி வகுப்புத் தலைவன், ‘‘மிஸ், இவங்க சண்டையத் தடுக்கப்போன என்னையும் ஆகாஸ் அடிச்சிட்டான்” என்றான்.

அடுத்தடுத்து தன் மீது வந்து விழுந்த குற்றச்சாட்டுகளையும் ஆசிரியரின் கோபமான பார்வையையும் கண்ட ஆகாஸ், ‘‘மிஸ், நான் எழுதிட்டு அவன் இடத்துல வெச்சிட்டேன். அவனே தொலைச்சிட்டு, என்னைப் புதுசா வாங்கிக் கொடுக்க சொல்றான் மிஸ்” என்றவன், ‘‘இந்த கிளாஸ்ல எல்லாரும் வேணும்னே என்னையே மாட்டிவிடுறாங்க, எது காணாமப் போனாலும் நான்தான் எடுத்தேன்னு சொல்றாங்க” என்றவாறு அழ ஆரம்பித்தான். சூழலை உணர்ந்த ஆசிரியர், ‘‘ஆகாஸ், லஞ்ச் டைம்ல நீ என்னை வந்துபார்’’ என்று சொல்லிவிட்டு மாணவர்களை அமைதிப்படுத்தி வகுப்பைத் தொடர்ந்தார்.

ஆகாஸ்களைச் சமாளிப்பது எப்படி?

இது போன்ற நிகழ்வுகள் எல்லா வகுப்பறைகளிலும் அடிக்கடி நடக்கக்கூடியதுதான். ஆனால் இந்தச் சூழலை ஆசிரியர்கள் எப்படிக் கையாளப் போகிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் ஆகாஸ் போன்ற மாணவர்களின் எதிர்காலமே அடங்கியுள்ளது. எல்லோர் முன்னிலையிலும் அவனைத் திட்டி, அடித்து, அவமானப்படுத்தி, பெற்றோரை அழைத்து வரச்சொல்லி, தலைமை ஆசிரியரிடம் அனுப்பலாம். அதனால், குற்றவுணர்வுக்கு ஆளாக்கி, மனரீதியாக ரணப்படுத்தி நிரந்தர முரட்டுத்தன்மை உடையவனாகவும் மாற்றலாம். அல்லது அவனைத் தனியாக அழைத்துப் பேசி ஆற்றுப்படுத்தி, பெற்றோரின் மூலம் வீட்டுச் சூழல்களை அறிந்து நடத்தை மாற்றுச் சிகிச்சை மூலம் நல்வழிப்படுத்தலாம்.

ஏதேனும் ஒரு தூண்டலுக்குக் கொடுக்கப்படும் பதில்வினைதான் பிஹேவியர் தெரபி எனப்படும் நடத்தை மாற்றுச் சிகிச்சை. ஊக்கப்படுத்துதல் மற்றும் தண்டனை கொடுத்தல் ஆகியவற்றின் மூலம் விரும்பத்தகாத ஒரு செயலை நீக்கி விரும்பத்தக்க செயலை உண்டாக்குவதுதான் நடத்தை மாற்றுச் சிகிச்சை.

நேர்மறை ஊக்கம்

ஒரு குறிப்பிட்ட நடத்தையைத் தொடர்ந்து நிகழும் நிகழ்வு அந்த நடத்தையைப் பலப்படுத்தினாலோ அதேபோல் அதிக தடவை செய்யத் தூண்டினாலோ அது ஊக்கப்படுத்தல் எனப்படுகிறது. இது நேர்மறை ஊக்கம், எதிர்மறை ஊக்கம் என இரு வகைப்படும்.

தினமும் படிக்காமலேயே வரக்கூடிய ஒரு மாணவனை வகுப்பில் கேள்வி கேட்கும்போது அவனுக்கு நிச்சயமாகப் பதில் தெரியக்கூடிய எளிய கேள்விகளைக் கேட்டுப் பதில் சொல்லியதும் எல்லோரையும் கைதட்டச் சொல்லி அவனைப் பாராட்டுவது நேர்மறை ஊக்கம். தொடர்ந்து பாராட்டைப் பெறுவதற்காகவே அடுத்த நாளும் படித்துவிட்டு வரும்படி அவனைத் தூண்டிவிடுவது நேர்மறை ஊக்கமாகும். இது கொடுப்பவரால் தீர்மானிக்கப்படுகிறது.

எதிர்மறை ஊக்கம்

நகம் கடிக்கும் பழக்கமுடைய ஒரு குழந்தையைத் திருத்த அதன் தந்தை அக்குழந்தையின் கையைச் சற்றே வலிக்கும்படி அழுத்திப் பிடித்தால், அவ்வலியைத் தவிர்க்க நகம் கடிப்பதை குழந்தை தவிர்க்கும். அழுத்துவதை நிறுத்தியதும், ‘‘அப்பாடா’’ என்ற ஒரு சந்தோஷம் தோன்றும். வலியைத் தவிர்ப்பதால் ஏற்படும் சந்தோஷம் எதிர்மறை ஊக்கம் எனப்படும். பள்ளிக்குத் தினமும் தாமதமாக வருவதால் திட்டுவாங்குவான் அதைத் தவிர்க்க சீக்கிரம் வருவதும் இதில் அடங்கும். தண்டனை இல்லாமல் எதிர்மறை ஊக்கம் சாத்தியமில்லை. ஊக்கமளித்தும் எதிர்பார்த்த மாற்றமில்லாத நிலையில் தண்டனை கொடுக்கப்படும்.

நேர்மறை தண்டனை

ஒரு குறிப்பிட்ட நடத்தையைத் தொடர்ந்து நிகழும் நிகழ்வு அந்த நடவடிக்கையைக் குறைக்கவோ பலவீனப்படுத்தவோ செய்தால் அது தண்டனை எனப்படும்.

பாடம் நடத்தும்போது ஆசிரியரைப் பாடம் எடுக்கவிடாமல் இடைஞ்சல் செய்யும் மாணவனைக் கண்டிக்க மற்றவர்களின் முன்னிலையில் தவறைச் சுட்டிக்காட்டி அதனால் ஏற்பட்ட வலி நேர்மறை தண்டனை ஆகும். இதன் மூலம் அடுத்த முறை அந்த மாணவன் தவறு செய்யத் தயங்குவான். இது தண்டனை அளிப்பவரைப் பொறுத்தது.

எதிர்மறை தண்டனை

வகுப்புத் தலைவனாயிருக்கும் மாணவன் ஒரு பாடத்தில் தவறிவிட்டான் என்பதற்காக, அவனுடைய தலைவன் பதவியைப் பறித்தல் எதிர்மறை தண்டனை ஆகிவிடும். பறிக்கப்பட்ட சந்தோஷத்தைத் திரும்பப் பெற நன்றாகப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அது தரும். இது பெறுபவரால் தீர்மானிக்கப்படுகிறது. தண்டனை பெற்றவருக்கு ஊக்கம் இல்லாமல் எதிர்மறை தண்டனையின் விளைவு நேர்மறையாக இருக்காது.

இந்த தண்டனை முறைகளை எல்லாம் தவிர்த்துவிட்டுப் பிரச்சினைக்கான காரணத்தைக் கண்டறிந்து அந்நடத்தையின் விளைவுகளை மாற்றலாம். இதன் மூலம் பிள்ளையை நல்வழிப்படுத்துதல் செயல்பாட்டு பகுப்பாய்வு அணுகுமுறை ஆகும்.

ஆகாஸ் விஷயத்திற்கு வருவோம். வகுப்பாசிரியர் செயல்பாட்டுப் பகுப்பாய்வு அணுகுமுறையைத்தான் பின்பற்றினார். ஆகாஸைத் தனியாக அழைத்துப் பேசிய வகுப்பாசிரியர் அவனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், வீட்டுச் சூழல் பற்றிக் கேட்டறிந்தார். பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்று இரவு தாமதமாக வருவதால் கவனிக்க ஆளின்றி, ஆகாஸ் கல்வியில் பின்தங்கிய நிலையில் பள்ளியிலும், வீட்டிலும் எப்போதும் திட்டும், உதையும் வாங்குபவன்.

அவனிடம் இருக்கும் நல்ல விஷயங்களைக்கூட இதுவரை யாரும் அங்கீகரிக்கவில்லை. இதனால் பாராட்டப்படுபவர்களின் மீது பொறாமைகொள்வது, கெட்ட வார்த்தைகளால் திட்டுவது, முரட்டுத்தனமாக நடந்துகொள்வது போன்ற நடத்தைகள் வரத் தொடங்கின. மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, ‘‘என்னைப் பாராட்டத்தான் மாட்டீர்கள், திட்டுவதற்காகவாவது என்னைக் கவனியுங்களேன்” என்ற ரீதியில் அவனையே அறியாமல் செய்தவைதான் இத்தகைய செயல்கள்.

இதைப் புரிந்துகொண்ட ஆசிரியர் பள்ளி நேரத்திற்குப் பின் அவனுக்குச் சிறப்பு வகுப்பு எடுத்து எழுதுதல், வாசித்தல், ஆகியவற்றில் பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். அதோடு அவனிடம் இருக்கும் கால்பந்து விளையாடும் திறன் பற்றி உடற்கல்வி ஆசிரியரிடம் பேசி பள்ளிக் கால்பந்துக் குழுவில் சேர்த்துவிட்டார். அவனது பெற்றோரிடம் பேசிப் ஒவ்வொரு நாளும் நேரம் ஒதுக்கி அவனைக் கவனிக்கும்படி, மற்ற குழந்தைகளோடு ஒப்பிடாமல் ஊக்கப்படுத்தும்படி அறிவுறுத்தினார். எல்லாத் தரப்பிலும் மாற்றங்கள் உண்டாக்க ஆகாஸிடமும் நல்ல முன்னேற்றம் தெரியவந்தது.

ஆகையால், குழந்தைகள் தவறு செய்யும்போது தண்டனை கொடுப்பதற்குப் பதிலாக நடத்தை மாற்று முறையை கையாண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x