Published : 09 Nov 2021 03:08 AM
Last Updated : 09 Nov 2021 03:08 AM

மாணவரை முன்னேற்றுமா இல்லம் தேடிக் கல்வி?

கரோனா ஊரடங்கால் மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இடைவெளியைக் குறைத்து மாணவர் களைப் பள்ளியை நோக்கி இழுக்கும் நோக்கத்துடன் ‘இல்லம் தேடிக் கல்வி’ என்கிற திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மாணவர்கள் வசிக்கும் இடத்துக்கே சென்று கற்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டம் தன்னார்வலர்களின் துணையோடு செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தனியார் பள்ளிகளில் இணையவழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘கல்வி தொலைக்காட்சி’ மூலம் பாடம் நடத்தப்பட்டது. இருந்தும் இணையம், தொலைக்காட்சி போன்ற எவ்விதத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாத கிராமப்புற மாணவர்களின் கல்வி கேள்விக்குறியானது. பொதுமுடக்கத்தால் பல குடும்பங்கள் மரணம், உடல்நலப் பாதிப்பு, வேலையிழப்பு எனப் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகின. இதனால், மாணவர்களின் பள்ளி இடைநிற்றல் அதிகரித்தது. இப்படியான கொடும் சூழல்களிலிருந்து மாணவர்களை மீட்டெடுத்து அவர்களுடைய பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது.

நவீன குருகுலமா?

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாரத்தில் குறைந்தது ஆறு மணி நேரம், பள்ளிகளுக்கு வெளியே பொதுவான இடத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுமாம். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தபோது இப்படியொரு திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்ட நிலையில் இதுபோன்ற தனிப் பயிற்சிகள் மாணவர்களுக்குக் கூடுதல் சுமையாகிவிடக்கூடும் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர். இந்தத் திட்டத்துக்கான பாடத்திட்டத்தை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து வழங்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. பாடத் திட்டம் குறித்து வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதும் கல்வியாளர்களின் கோரிக்கை.

இந்தத் திட்டத்தின்படி, ப்ளஸ் டூ முடித்த தன்னார்வலர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும் பட்டப் படிப்பு முடித்தவர்கள் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலும் படிக்கும் மாணவர்களுக்குப் பாடங்களை நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்தான் சிக்கல் என்கிறார் தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் அஜீஸ்குமார்.

“இந்தத் திட்டத்துக்குத் தேர்ந் தெடுக்கப்படும் தன்னார்வலர்கள் யார், மாணவர்களை அணுகுவது குறித்தும் அவர்களின் உளவியல் குறித்தும் அவர்களுக்குப் போதிய பயிற்சி இருக்கிறதா என்பதெல்லாம் வேறெதையும்விட முக்கியமில்லையா? கற்றல் என்பது பள்ளிகளில்தான் நடைபெற வேண்டும் என்பது பல்வேறு ஆணையங்களை அமைத்து அதன் பிறகு எடுக்கப்பட்ட முடிவுதானே. அதை மாற்றுகிற விதத்தில் ஊருக்குப் பொதுவான இடத்தில் கற்றல் செயல்பாடு நடப்பது என்பது குருகுலக் கல்வி முறைக்கு அழைத்துச் செல்வதைப் போல அமைந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது” என்கிறார்.

சித்தாந்தத் திணிப்பு

தேசியக் கல்விக் கொள்கையை மறைமுகமாகப் புகுத்துவதற்கான ஏற்பாடாகவும் இது புரிந்து கொள்ளப்படும் சாத்தியம் இருக்கிறது என்கிறார் அஜீஸ்குமார். “தேசியக் கல்விக் கொள்கையின் முக்கிய அஜெண்டாக்களில் ஒன்று வாலண்டியரிஸம் எனப்படும் தன்னார்வலர்களின் செயல்பாடு. இந்தத் திட்டமும் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்படும் என்பதால் ஏற்படுகிற பதற்றம் இது. நம் கிராமங்களின் சாதியக் கட்டுமானம் யாரும் அறியாதது அல்ல. அப்படி யிருக்கையில் தன்னார்வலர்கள் ஊருக்குள் ஒரு மாதிரியும் ஊருக்கு வெளியே இருக்கிற மாணவர்களை வேறு மாதிரியும் நடத்துவதற்கான சாத்தியமும் இதில் இருக்கிறது. இன்னொரு வகையில் பார்த்தால் குறிப்பிட்ட ஒரு சித்தாந்தத்தை மட்டுமே மாணவர்களின் மனத்தில் விதைக்கக்கூடிய அபாயமும் இதில் உண்டு. காரணம் இளம் மாணவர்களின் மனம் எதுவும் எழுதப்படாத சுத்தமான பலகையைப் போன்றது. அதில் நாம் எதை எழுதுகிறோம் என்பது முக்கியமல்லவா? பள்ளி என்றால் ஐந்து ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள். அவர்களுக்கு வெவ்வேறு விதமான கொள்கையும் சித்தாந்த ஈடுபாடும் இருக்கலாம். ஒருவேளை தங்கள் சித்தாந்தத்தை அவர்கள் மாணவர்களிடையே பரப்ப நினைத்தாலும் அனைத்தையும் கேட்டுவிட்டு, நண்பர்களுடனோ பிறருடனோ கலந்துரையாடித் தங்களுக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மாணவர்களுக்கு உண்டு. சித்தாந்தம் மட்டும் என்றில்லை, வரலாறு, அறிவியல் என எதையும் தன்னார்வலர்கள் தங்களுக்குச் சாதகமாகத் திரித்து மாணவர் களுக்கு பரப்பிவிடக் கூடிய ஆபத்து இருப்பதையும் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை” என்கிறார் அஜீஸ்குமார்.

கல்வி இழப்பை ஈடுகட்டும்

தமிழக அரசின் இந்தத் திட்டம் குறித்து இந்த அளவுக்கு அச்சப்படத் தேவையில்லை என்பதைத் தன் அறிவொளி அனுபவத்தை முன்வைத்து விளக்குகிறார் 35 ஆண்டுகால ஆசிரிய அனுபவம் பெற்றவரும் தமிழ்நாடு பாடத்திட்டக் குழுவில் பங்கேற்றவருமான நா. முத்துநிலவன்.

“30 ஆண்டுகளுக்கு முன்பு அறிவொளி இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட ஒருங் கிணைப்பாளராகப் பணியாற்றினேன். அப்போது கிட்டத்தட்ட மூன்று லட்சம் தன்னார்வலர்கள் எங்களுடன் இணைந்து செயல்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் ஒன்பது, பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவியர்தாம். அவர்கள் 15-லிருந்து 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்குப் பாடம் நடத்தினர். பெண் குழந்தைகள் பெரியவர்களுக்குப் பாடம் நடத்துவார்களா என்கிற சந்தேகத்தைத் தவிடுபொடியாக்கும்விதத்தில் அறிவொளி இயக்கம் மகத்தான வெற்றிபெற்றது. அப்படித்தான் இந்த ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தையும் பார்க்க வேண்டும். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகப் பள்ளிகளுக்குச் செல்ல முடியாத மாணவர்களின் கல்வி இழப்பை நேர் செய்யும் விதத்தில் அக்கறையோடு உருவாக்கப்பட்டிருக்கும் திட்டம் இது” என்கிறார் அவர். புதிய கல்விக் கொள்கையைத் தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம் என்று முதல்வர் அறிவித்திருப்பதால் அது பற்றிய அச்சம் தேவையில்லை என்கிறார்.

பாதுகாப்புக்கு முன்னுரிமை

பள்ளிக்கு வெளியே கற்றல் செயல்பாடு நடைபெறுவதில் முத்துநிலவனுக்கும் உடன்பாடு இல்லை. “இருபாலரும் பங்கேற்கும் திட்டம் என்பதால் மாணவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அதனால், பள்ளிக்கூடத்திலேயே பயிற்சி அளிப்பது சிறந்த முடிவாக இருக்கும். பொதுவான இடம், எல்லோருக்கும் ஏற்றதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. பயிற்சி நடைபெறுவதை யார் கண்காணிப்பார்கள், அந்தக் குழுவில் யாரெல்லாம் இருப்பார்கள் என்பதையும் கிராம மக்களின் துணையோடு முடிவுசெய்ய வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கும் தலைமை ஆசிரியருக்கும் இதில் பங்கு இருப்பதால் பெற்றோர் - ஆசிரியர் சங்கங்கள் முனைப்புடன் செயல்பட இந்தத் திட்டம் தூண்டுதலாக அமையும். ஒன்றிய அரசின் துணையின்றி முழுக்க மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் என்பதால் எவ்விதக் குறுக்கீடும் இல்லாமல் சிறப்பாகச் செயலாற்றுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது” என்கிறார் முத்துநிலவன்.

குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கல்வியுடன் நேரடியாகத் தொடர்புடைய திட்டம் இது என்பதால் மாணவர்களின் பாதுகாப்பு, உள நலம், பின்புலம் போன்றவற்றையும் கருத்தில்கொண்டு செயல்படுவது திட்டத்தின் இலக்கை அடைய உதவும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மாநில, மாவட்ட, ஒன்றிய, பள்ளி அளவிலான நான்குப் படிநிலைகளில் குழுக்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்திலும் ஒன்றிய அளவிலும் செயல்படுகிறவர்களின் ஈடுபாட்டையும் பொறுப் புணர்வையும் மாணவர்கள் மீதான பரிவையும் பொறுத்துத்தான் திட்டம் வெற்றிபெறுவதும் நீர்த்துப்போவதும் அமையும்.

‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தில் கவனத்தில்கொள்ள வேண்டிவை எனக் கல்வியாளர்களும் பெற்றோர்களும் குறிப்பிடும் அம்சங்களில் சில:

l மாணவர்களின் பாதுகாப்பு

l தன்னார்வலர்களின் தேர்வு

l திட்டம் செயல்படுத்தப்படும் இடம்

l திட்டத்துக்கான பாடத்திட்டம்

l மேலாண்மைக் குழுக்களின் செயல்பாடு

l பெண்களுக்கும் ஆசிரியர் பயிற்சி, மழலையர் பயிற்சி முடித்தவர்களுக்கும் முன்னுரிமை

l கல்வியே சுமையாகிவிடாத கவனம்

l நேர மேலாண்மை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x