Published : 29 Mar 2016 12:43 PM
Last Updated : 29 Mar 2016 12:43 PM

என்னைச் செதுக்கிய மாணவர்கள்: வாழ்க்கைப் பாடம் சொன்ன பிரபுசிங்

கற்ற ஆசிரியரிடம் உங்கள் குழந்தையை ஒப்படைக்காதீர்கள். இன்னமும் கற்றுக்கொண்டிருக்கும் ஆசிரியரிடம் அவரை அனுப்புவதே நல்லது.

- லியோ டால்ஸ்டாய் (அன்னா கரீனினா)

பாடப் புத்தகத்தையே கட்டிக்கொண்டிருக்க நம் குழந்தைகள் பழகிவிட்டார்கள். எப்போதும் பாடப் புத்தகமும் கையுமாக இருப்பவர்களே நல்ல பிள்ளைகள். சும்மா சுற்றித்திரிவதையோ, மனம்போன போக்கில் கற்பனையாக விளையாடுவதையோ நாம் ஏற்பதில்லை. இவற்றின் மூலமும் அனுபவ அறிவும் நிதர்சனங்களும் கைவரப் பெறும் என நினைப்பதில்லை. பாடப் புத்தகத்திலிருந்து பெறுவது மட்டுமே அறிவு என நம்பப்படுகிறது. அது கேள்வி பதிலாகத் தேர்வுகளின் வழியே பரிசோதிக்கப்படுகிறது.

எல்லையற்றுப் பல்கிப் பெருகி வளர்ந்துகொண்டே இருக்கும் மனித அறிவைத் துண்டுதுண்டான தகவல்களாய்த் தரும் பாடப் புத்தகம், புனித நூல் அந்தஸ்து பெற்றுவிடுகிறது. இது, பார்வைத் திறனற்ற நால்வர் யானை ஆராய்ச்சி செய்ததைவிட அபத்தம். வீட்டுத் தோட்டம், மைதானம், புல்வெளி, நூலகம் இங்கெல்லாம் கற்க ஏதுமில்லையா? உண்மையானக் கல்வி பாடப்புத்தகத்தையும் கடந்தது என எனக்கு காட்டியவர்தான் மாணவர் பிரபு சிங்.

கல்வியில் முதலிடம் பின்லாந்து

பொருளாதார மற்றும் வளர்ச்சி கூட்டமைப்பானது (Organisation For Economic Co-Operation and Development (OECD)) உலக கல்வித் தரப் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இந்த அமைப்பு நடத்தும் வருடாந்தரத் தேர்வுகள் வித்தியாசமானவை. புரிதல் திறன், தொடர்பாற்றல் மொழித் திறன் ஆகியவை இதில் சோதிக்கப்படு கின்றன. சர்வதேச மாணவர் தரச்சான்று தேர்வு (PISA) என அழைக்கப்படும் இதில் உலக அளவில் கல்வியில் முதன்மை தேசமாக பின்லாந்து அறிவிக்கப்பட்டுள்ளது.அங்கே என்ன நடக்கிறது என்று பார்த்தால் ஆச்சிரியம் என்பதைவிடவும் அதிர்ச்சியாகவே இருக்கிறது.

பின்லாந்தில் குழந்தைகள் 7 வயதில்தான் பள்ளிக்குள்ளேயே காலடி எடுத்துவைக்கிறார்கள். அங்கே எந்தப் பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட பாடப் புத்தகம் கிடையாது. 14 வயது வரை ரேங்க் கார்டும் கிடையாது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். 100 சதவீத எழுத்தறிவு, அதிலும் வயது முதிர்ந்தவர்கள் அனைவரும் பட்டதாரிகள் எனும் நிலையை அடைந்திருக்கும் இந்நாட்டில் பள்ளிப்படிப்பைத் தொடங்கும் குழந்தைகள் முதல் இரு ஆண்டுகள் கற்பவை பாட்டும் கதையும்தான்!

பின்லாந்து கல்வியின் பிதாமகர்

குழந்தைகளின் மகிழ்ச்சியை இலக்காகக் கொண்ட இந்தக் கல்விமுறையின் பிதாமகர் டென்மர்க்கைச் சேர்ந்த கிரிஸ்டன் கோல்டு (Kristen Kold). டேனிஷ் மக்கள் உயர்நிலைப்பள்ளி அமைப்பு (Danish Folk high School System) எனப்படும் இது அரசு சாராத கல்வி முறையாகும். 1840-45 வரை ஜூட்லாந்து பகுதியில் ஆசிரியராக பணியாற்றிய கிரிஸ்டன் கற்பித்தலில் நூதன முறையைக் கையாண்டார். பாடப் புத்தகமே இல்லாமல் பாடல்கள் வழியாகவும் கதைகள் மூலமாகவும் கற்பித்தார். வெவ்வேறு வயது வரம்பைச் சேர்ந்த குழந்தைகள் ஒரே வகுப்பில் அமர்ந்து தோழமையோடு ஒருவருக்கு ஒருவர் அறிந்ததைப் பகிர்ந்துகொள்ளும் சிறப்பம்சத்தையும் அறிமுகப்படுத்தினார்.

ஒவ்வொருவரும் மாணவர், ஒவ்வொருவரும் ஆசிரியர் (Everyone a student, Everyone a teacher ) என இது அழைக்கப்பட்டது. தேர்வு என்பதே கிடையாது. அந்தந்தப் பகுதிக்கு ஏற்ப வெவ்வேறு பாடத்திட்டங்களும் கொண்டுவரப்பட்டன. வாழ்க்கை முழுவதற்குமான கற்றல் (A School of Life Long Learning ) நடக்கும் பள்ளியான அங்கே அதன் பழைய மாணவர்கள்தான் ஆசிரியர்கள். 1890-களில் டென்மார்க்கிலிருந்துதான் இந்த கல்வி முறை பின்லாந்திற்கு சென்றது.

நோபலைக் குவிப்பவர்கள்!

பின்லாந்து பொதுஉடைமைக் கட்சி தனது நிதியில் ஒரு கல்லூரியை நடத்துகிறது. அரசு அதன் பாடத்திட்டத்தில்கூடத் தலையிடுவது இல்லை. நோபல் பரிசு பெற்றவர்களின் பட்டியலைச் உற்றுப்பாருங்கள். பின்லாந்து மக்கள் உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்களால் அது நிரம்பி வழிகிறது! ஆனால் நமது சூழலில் பாடப் புத்தகத்தைத் தாண்டி கற்றலின் சாத்தியத்தை எனக்குப் புரியவைத்தவர் மாணவர் பிரபு சிங்தான்.

கானகப் பள்ளியாளர் பிரபு சிங்

அப்போது நான் சென்னையில் ஒரு சுயநிதி பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தேன். ஆளுநர் கொடியேற்றும் குடியரசு தின அணிவகுப்பில் தேர்வான எங்கள் பள்ளியின் மூன்று மாணவர்களோடு ஒத்திகை நடந்துகொண்டிருந்தது. அங்கே தேசிய மாணவர் படை மாணவராய் அறிமுகம் ஆனார் பிரபு சிங். காவலர்களின் மோப்ப நாய்களது சாகச நிகழ்ச்சி நடந்தது. தீ வைத்த வளையத்தின் வழியே தாவிக்குதித்த ஒரு நாய் கீழே விழுந்தது. ஆனால் எழவே இல்லை!

காவலர்கள் அதை சுற்றிப் பதற்றத்தோடு சூழ்ந்திருந்தனர். அது இறந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதியபோது பிரபு சிங் எங்கிருந்தோ ஓடி வந்தார். முதலுதவி செய்தார். அசைவற்றுக் கிடந்த நாய் உயிர்த்தெழுந்தது. ஆனாலும் நிற்க முடியாமல் தவித்தது. அதன் இரண்டு கால்களில் எலும்பு முறிவு என அறிவித்தார். அரங்கமே ஆச்சரியத்தில் உறைந்திருக்க அவரைப் பற்றி விசாரித்தேன்.

புனுகுப் பூனையோடு பள்ளிக்கு

பிரபு சிங்குக்குப் பிராணிகள் என்றால் அத்தனை பிரியம். அவர் வீட்டில் நாய் பூனை முதல் முயல், புறா, வாத்து எனப் பலவற்றை சுவீகரித்துச் செல்லமாக வளர்த்தார். அவருடைய தனித்துவத்தை எடுத்துச் சொல்ல இதோ ஒரு உதாரணம். பழைய (அவர் காலத்திய) ஒன்பதாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் புனுகுப் பூனைகளுக்கு வால் கிடையாது எனும் தகவல் பதிவாகியிருந்தது. இது தவறான தகவல் என்பது பிரபு சிங்கின் வாதம். ஆசிரியர்களோ பாடப் புத்தகத்தில் உள்ளதைப் படி எனப் பிடிவாதமாயிருந்தனர்.

விரைவில், அபூர்வமாய்த் தென்படும் ஒரு புனுகுப் பூனையோடு பள்ளிக்கு வந்து நேரடியாக விளக்கம் அளித்தார்! இன்று இணையத்தில் புகைப்படங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அப்படி எதுவுமே இல்லாத காலத்தில் அந்த விலங்கைப் புகைப்படம் எடுத்து ஆசிரியர்கள் பாடநூல் நிறுவனத்துக்கு விளக்கமாகக் கடிதம் எழுதினார்கள். பிறகு அடுத்த பதிப்பில் அந்த தவறு திருத்தப்பட்டது.

பாடப் புத்தகத்தைக் கடந்தது குழந்தைகளின் சுயதேடல் எனும் உண்மையை எனக்குக் காட்டிய பிரபு சிங் இன்று இந்தியன் ரயில்வேயில் உயர் பதவி வகிக்கிறார்.

ரிஸ்டன் கோல்டு



தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x