Last Updated : 29 Mar, 2016 12:30 PM

 

Published : 29 Mar 2016 12:30 PM
Last Updated : 29 Mar 2016 12:30 PM

இப்படியும் பார்க்கலாம்: மனதின் கலோரிகள்

ஒரு சிறுவன் தாத்தாவின் ஷூவை சுத்தப்படுத்தும் முயற்சியில் கைகளை அழுக்காக்கிக் கொள்வான்.அவனது உடல் மற்றும் உடைகளை நார்மல் நிலைக்குக் கொண்டுவர 2,3 குளியல் சோப்புகளும்,4,5 விசேஷ சலவை சோப்புகளும் தேவைப்படும் நிலையில் அக்குடும்பம் ஜென் மனநிலையுடன் வாழ்வின் கொண்டாட்டத்திற்குக் ‘கறை நல்லது’ என்று கூறும் விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள்.

பிரச்சினைக்கு கவலைபடலாமா?

சொந்த வீடு வாங்கும்போது மொத்தப் பணத்தையும் சேமிப்பிலிருந்து கொடுக்காதீர்கள். சேமிப்பையும், வரிச்சலுகையையும் இழப்பீர்கள். எனவே ‘கடன் நல்லது’ என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

அந்தத் தம்பதி குழந்தைப்பேறு பிரச்சினையால் டாக்டர் மதுபாலா முன் சோகமாய் அமர்ந்திருந்தார்கள். ‘ப்ரொலாக்டீன்’சற்றே அதிகமாக சுரக்கின்றன என அந்தப் பெண்ணிடம் கூறின மெடிக்கல் ரிப்போர்ட். அவ்வளவுதான், தன்னிடம்தான் குறை இருக்கிறது என்று அறிந்த மாத்திரத்தில் அழுது தீர்த்து விட்டார்.

நிதானமாக விளக்கினார் டாக்டர். “பொதுவா, தன் கிட்ட குறை இருக்குதுன்னு காட்டிக்க யாரும் விரும்பறதில்ல...அதனால, பிரச்சினையே இல்லேங்கற பதிலைத்தான் எல்லோருமே விரும்பறாங்க...ஆனா,என்னைப் பொறுத்தவரை குறை இருக்கறது நல்லது!. குறை என்னான்னு தெரிஞ்சாத்தானே சிகிச்சையை ஆரம்பிக்க முடியும்? ரெண்டு பேர்கிட்டயுமே குறை இல்லைங்கற ரிப்போர்ட் உங்களுக்கு வேணும்னா, சந்தோஷம் தரலாம். ஆனா, மருத்துவ ரீதியா அது எவ்வளவு ஆபத்தான ரிப்போர்ட் தெரியுமா? நான் எங்கிருந்து ட்ரீட்மெண்ட்டைத் தொடங்குறது?” என்றார்.

ஆம், இப்போது பிரச்சினை எங்குள்ளது என்பது தெரிந்துவிட்டது. அதை எப்படி சரி செய்யலாம் என்பதை மட்டும் கண்டுபிடித்தால்போதும். எந்தக் குறையும் இல்லை. பிரச்சினைக்கான காரணமே தெரியவில்லை. இப்படி இருந்தால் எப்படி சரி செய்வது?

‘கறை நல்லது’, ‘கடன் நல்லது’, ‘குறை நல்லது’ இவற்றில் இருக்கும் உண்மையைவிட அதிகமாகவே ‘வாழ்வில் நிம்மதி கிடைக்க பிரச்னைகள் இருப்பது நல்லது ’ என்றால் நம்புவீர்களா?

மனம் சும்மா இருப்பதில்லை

வயல்களில் யாரேனும் களையைப் பயிரிடுகிறார்களா? களை தானாகவே வருகிறது. நன்கு சுத்தம் செய்த வீட்டின் கதவை அடைத்துச் சென்றாலும், இரண்டு நாள் கழித்துப்பார்த்தால்,தரையில் தூசி படிந்திருக்கும். ஆக,தானாகவே வருகிறவை தூசி, களை. அப்புறம் நீங்கள் கவலைப்படுவது ஏன்?

மனதிற்கு உருப்படியான வேலைகள் கொடுக்காவிட்டால், அது ‘நல்லது, நாம் தூங்கலாம்’ என்று ஓய்வெடுக்காது. சும்மா இருக்கும் சராசரி மனதில் உலக ஒற்றுமைக்கான வழிமுறைகளோ, உருப்படியான கருத்துகளோ தோன்றப் போவதில்லை. அப்புறம் மனம் என்னதான் செய்கிறது? நம் மனம் நம்மைவிட ரொம்பவும் பிஸியானது.வேறு வழி இன்றி, அது தன் வேலையைத்தானே தேர்ந்தெடுத்துக்கொள்ளும்.

சும்மா இருந்தால் சண்டைதான்

கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால், செய்வதற்கு ஒரு வேலையும் இல்லாத நேரத்தில்தான் ‘எல்லோருக்கும்’ குட் மார்னிங் சொல்லும் காவலாளி எனக்கு சொல்லாமல் போன காரணம் என்ன ?; ‘பேப்பர் போடுகிற பையன் எல்லா வீடுகளிலும் ஒழுங்காகப் போடுகிறான், என் வீட்டில் மட்டும் தூக்கி எறிகிறானே’ போன்ற உலகை உலுக்கும் கேள்விகள் மனதில் ஓடும்.

அடிக்கடி ஒரு வீட்டிலோ, அலுவலகத்திலோ சண்டை நடக்கிறது என்றால் அங்கே எல்லோரும் பரிபூரண ஒய்வில் இருக்கிறார்கள் என்றே பொருள்.

உங்கள் கடந்த காலத்தை ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் தேவையில்லாத ஒரு பிரச்னையில் மாட்டிக்கொண்டதாக நினைத்து வருந்திய பொழுதுகளில் எல்லாம், 99% அப்போது செய்வதற்கு உருப்படியான வேலை எதுவும் இல்லாமல் இருந்திருப்பீர்கள்!

நல்ல பிரச்சினை தேவை!

சரி, மனதின் சுறுசுறுப்பை ஏன் கெடுக்க வேண்டும் என்றால், ஒன்று இந்த வெற்றுச் சிந்தனைகளால் நம் விலைமதிக்க முடியாத நேரம் பறி போகிறது.

இரண்டாவதாக, ‘நினைப்பு’ என்ற கண்ணுக்குத் தெரியாத விதை ‘செயல்’ என்னும் கண்ணுக்குத் தெரிகிற விருட்சங்களை உருவாக்கக்கூடியவை. இந்த மோசமான விதை செயலாகவோ, அரைகுறை ஆர்வக்கோளாறாகவோ மாறும்.அப்புறம், அதனாலும் பிரச்சினைகள்!

உண்மையான பிரச்சினை என்று கருதும் ஒரு பிரச்சினை இல்லாவிட்டால், தேவையில்லாத போலிப் பிரச்சினைகளுடன் வாழ்ந்து ஆற்றலை விரயமாக்கிக் கொண்டிருப்போம்.

பின் எப்படி மனதிலுள்ள கலோரிகளை எரிப்பது? மனதின் கலோரிகளை எரிப்பது உடலின் கலோரிகளை எரிப்பதைவிடவும் சிரமமானது. அதற்காக எரிக்கிறோம் என்று குப்பைகளைக் கொட்டி, எரித்துக் கொண்டிருக்க முடியாது.ஆரோக்கியமாக எரிப்பதே நன்மை பயக்கும்.

வெட்டிச் சிந்தனைகளை விரட்டுவதைவிட, ஒரு உருப்படியான பிரச்சினை இருந்தால் உங்கள் மனம் அதன் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும். அதுவே உங்களுக்கு நன்மை தரும். ஒரு நல்ல பிரச்சினை பல தேவையற்ற பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றும். உங்களை உங்களிடமிருந்தே காப்பாற்றும் நல்ல பிரச்சினைகள் கிடைத்தால் சந்தோஷப்படுங்கள்! கவனித்துப் பாருங்கள், அந்தப் பிரச்சினைகளின் முடிவில் நீங்கள் ஏதாவது ஒரு விதத்தில் வளர்ச்சி அடைந்திருப்பீர்கள்!

தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x