Published : 06 Nov 2021 03:06 AM
Last Updated : 06 Nov 2021 03:06 AM

நல்ல பாம்பு 8: சூது அறியாத சுருட்டை விரியன்

மா.ரமேஸ்வரன்

பெருமழை கொட்டித் தீர்க்க, வீட்டைச் சுற்றி நீர் சூழ்ந்திருந்தது. நீரில் தத்தளித்த குட்டிப் பாம்பொன்று தஞ்சம் தேடி அருகிலிருந்த வீட்டின் வெளிக்கதவில் தொற்றியது. இதை அறியாத அவ்வீட்டிலிருந்த அம்மா கதவில் கைவைக்க பாம்பு கடித்திருக்கிறது. விரலில் முள் குத்தியது போன்ற உணர்வோடு கையை எடுத்தவர், பாம்பைப் பார்த்துவிட்டார். அவ்வளவுதான் அருகிலிருந்தவர்கள், தலையில் ஒரே போடாகப் போட்டு அதன் கதையை முடித்தார்கள். ஒரே பதற்றம்! என்ன பாம்பு, நஞ்சுடையதா இல்லையா என்கிற குழப்பத்தில் பாம்பை எடுத்துக்கொண்டு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவை அடைந்தார்கள். கடிபட்டவரின் உறவினர் மூலமாகத் தகவல் கிடைத்துச் சென்றிருந்தேன்.

கடிபட்டவர் சுயநினைவோடு இருந்தார். கடிபட்ட விரல் வீங்கி மணிக்கட்டின் மேல்வரை பரவியிருந்தது. அவர் அணிந்திருந்த மோதிரமும் வளையலும் வீக்கத்தை அதிகப்படுத்தியிருந்தன. ஆபரணங்களைக் கழற்ற முடியாததால், வெட்டியெடுக்கப்பட்டன. அந்த அம்மாவை ஆசுவாசப்படுத்தி நடந்ததைக் கேட்டறிந்தேன். ஆனால், அது எவ்வகைப் பாம்பு என்று ஊகிக்க முடியவில்லை.

குட்டிப் பாம்பா?

வெளியே உறவினர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்களுடைய கண்களில் பயம் தெரிந்தது. யாராவது பாம்பை பார்த்தீங்களா எனக் கேட்க, ஒருவர் தயக்கத்துடன் கொன்ற பாம்பைக் காட்டினார். தலை நன்றாக நசுக்கப்பட்டிருந்தாலும் அது எனக்கு மிகவும் பரிச்சயமான சுருட்டை விரியன் பாம்பு (Saw-scaled viper – Echis carinatus) என்பது தெரிந்தது. நஞ்சுப் பாம்பு என்று தெரியவும் அவர்கள் மேலும் பதறினார்கள். அவர்கள் நினைப்பதுபோல் மிகவும் ஆபத்தானது அல்ல என்பதை விளக்க முயன்றேன்.

அது முதலில் குட்டியே இல்ல. நடுத்தர அளவான அப்பாம்பு சுண்டுவிரல் தடிமனோடு ஓரடி நீளம் இருந்தாலும், அதிகபட்சமாக ஒன்றரை அடியைத் தாண்டுவதில்லை. இது நஞ்சுப் பாம்பு. இதன் நஞ்சு ரத்த மண்டலத்தைத் தாக்கும் தன்மைகொண்டது. இது ‘வைபரிடே’ குடும்பத்தின் துணைக் குடும்பமான ‘வைபரினே’வில் ‘எக்கிஸ்’ என்கிற தனித்த பேரினமாகச் சில பகுதிகளைத் தவிர்த்து நாட்டில் பரவலாகக் காணப்படுகிறது.

நாட்டின் வடமேற்குப் பகுதிகளில் வாழும் இதன் துணை இனமான சாச்சுரெகி (Sochureki) உருவத்தில் சற்றுப் பெரியது, மூன்றடி நீளம் வளரக்கூடியது. அதன் கடி பாதிப்பை உருவாக்குகிறது. அதனால்தான் இந்தப் பாம்பு நாட்டின் நான்கு முக்கிய நஞ்சுப் பாம்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அடையாளங்கள்

குட்டியிடக்கூடிய இது தரைவாழ் பண்பைப் பெற்ற இரவாடி. சமவெளிப் பகுதி, வறண்ட நிலம், மணற்பாங்கான இடம், சிறு பாறை முகடுகள் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது. பொந்து, கற்குவியல், கல் வெடிப்பு, சிறு முட்தாவரங்களின் அடிப்பகுதி போன்றவை இதன் வசிப்பிடம். சிறு கொறிவிலங்குகள், பூரான், தேள், பல்லி, ஓணான் போன்ற உயிரினங்களை இரையாக்கிக்கொள்கிறது.

தலை முக்கோண வடிவில் கழுத்திலிருந்து தெளிவாக உள்ளது. உச்சந்தலையில் ‘சங்கு அல்லது அம்புக்குறி’ போன்று தனித்த வடிவம் உள்ளது. செங்குத்தான கண் பாவையோடு பெரிய கண்கள் தலையிலிருந்து சற்று உயர்ந்திருக்கின்றன. வால் சிறுத்து, மெல்லியதாக உள்ளது. உடல் மேற்புறம் அடர் பழுப்பு, சாம்பல் நிறம் கலந்து காணப்படுகிறது. வாழிடத்தைப் பொறுத்து நிறம் வேறுபடலாம். இதன் மேலே வெள்ளை நிறத்தில் வளைவு வளைவான கோடுகள் கழுத்திலிருந்து வால் பகுதி வரை பக்கவாட்டில் இருக்கின்றன. அச்சுறுத்தப்படும்பொழுது உடலை மடித்துக்கொண்டு நடுவே தலையை வைத்துத் தாக்கத் தயாராகிறது. அச்சமயத்தில் எச்சரிக்கை வெளிப்பாடாகத் தன் உடலின் பக்கவாட்டில் மேடுடைய ரம்பம் போன்ற சொரசொரப்பான செதில்களை, வேகமாக முன்னும் பின்னுமாக உரசி சத்தத்தை ஏற்படுத்துகிறது.

கவனம் தேவை

உருவத்தில் சிறிதாகவும், இருக்கும் இடத்தோடு அவை ஒன்றியிருப்பதாலும் நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை. அறியாது நாம் நெருங்கும்பொழுது கடித்துவிடுகிறது. கடிபட்ட இடத்தில் தீ பட்டது போன்ற எரிச்சல், கடுமையான வலி, வீக்கம் போன்றவை ஏற்படும். இதன் தொடர்ச்சியாக நெறி கட்டலாம். கடிவாயைச் சுற்றிலும் கொப்பளங்கள் தோன்றும். கூடவே வீக்கமும் பரவும். அடுத்த கட்டமாக ஈறுகளிலிருந்து ரத்தம் கசியும். இது செலுத்தும் நஞ்சின் அளவு குறைவாக இருந்தாலும், வீரியமிக்கது. தீவிரசிகிச்சைப் பிரிவில் சேர்ந்து பாம்பு நஞ்சு முறிவு மருந்தைப் பெறவேண்டும். ‘சாச்சுரெகி’ போன்று ‘எக்கிஸ்’ பெரிய பாதிப்பை உருவாக்காவிட்டாலும், அலட்சியம் உயிரைப் பறிக்கலாம்.

இது நடந்து முடிந்து சில வாரம் கடந்த பிறகு, அந்த அம்மா ஒரு நாள் தொலைபேசியில் அழைத்துப் பேசினார். “பாவம் அந்தப் பாம்பு! அது என்னைக் கடித்தது உண்மைதான். ஆனால், நாம் பார்க்காமல் காலில் முள்ளைக் குத்திக்கொண்டு, ‘முள் குத்தியது’ எனப் பழிபோடுவது தவறுதானே” என்றார்.

கட்டுரையாளர், ஊர்வன ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: oorvanapalli@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x