Last Updated : 02 Nov, 2021 03:09 AM

 

Published : 02 Nov 2021 03:09 AM
Last Updated : 02 Nov 2021 03:09 AM

இணைய களம்: யூடியூப் தீபாவளி!

இது யூடியூப் காலம். சரி, தீபாவளியையொட்டி யூடியூபில் என்னென்ன காணொலிகள் கிடைக்கின்றன என்று ஒரு ரவுண்டு விட்டேன். அடேங்கப்பா, தீபாவளி பண்டிகைக்குத் திட்டமிடுவது தொடங்கி, செயல்படுத்துவது வரை எல்லாத் தகவல்களையும் சொல்கின்றன யூடியூப் அலைவரிசைகள். வாங்களேன், யூடியூபுக்குள் ஒரு ரவுண்டு வருவோம்.

ஷாப்பிங் அலப்பறைகள்

ஏற்கெனவே ஷாப்பிங் அலைவரிசைகளுக்கு யூடியூபில் பஞ்சமில்லை. கைக்குட்டை முதல் பட்டுப்புடவை வரை வாங்குவது எப்படி என்று வகுப்பெடுக்கும் அலைவரிசைகள் வரிசைகட்டும் வேளையில், பிரபலங்களும் இந்த கோதாவில் குதித்துவிட்டார்கள். எங்கெங்கே என்னென்ன துணிகள் கிடைக்கின்றன, எங்கே வாங்கலாம், விலை குறைவாகத் துணிகள் எங்கே கிடைக்கின்றன, தீபாவளிக்கு வந்த புது டிசைன்கள் என்னென்ன என்பது போன்ற தகவல்கள் யூடியூபில் கொட்டுகின்றன. ஷாப்பிங்கை மையப்படுத்தி பல அலைவரிசைகள் இருக்க, தீபாவளி ஷாப்பிங்கில் எப்படி மிச்சப்படுத்தலாம் என்று பாக்கெட்டைப் பத்திரப்படுத்தும் டிப்ஸ்களோடு வரும் காணொலிகளும் யூடியூபில் பளிச்சிடுகின்றன. குடும்பத் தலைவர்களே, தலைவிகளே கொஞ்சம் குறிச்சு வைச்சுக்குங்க.

அணிவகுக்கும் பலகாரங்கள்

வருஷம் பூராவுமே இந்த ‘கிச்சன்’ யூடியூப்கள் பிஸிதான். தீபாவளி காலத்தில் சொல்லவே வேண்டாம். பெரும்பாலும் எல்லா கிச்சன் யூடியூப் அலைவரிசைகளும் தீபாவளி பலகார டிப்ஸ்களை அள்ளிவிட்டிருக்கின்றன. ஐந்தே நிமிடத்தில் பலகாரம் எப்படிச் செய்யலாம் எனத் தொடங்கி விதவிதமான தலைப்புகளில் தீபாவளி பலகாரக் குறிப்புகள் யூடியூபில் கொட்டுகின்றன. பாரம்பரிய தீபாவளி பலகாரங்களைத் தாண்டி பல புதிய பலகாரங்களையும் தமிழ்க் கூறும் சமையலறை உலகத்துக்கு யூடியூப் மூலம் அறிமுகம் செய்து வைத்திருக்கின்றன அலைவரிசைகள். தீபாவளி ஸ்பெஷல் என்றாலே கறி குருமாதான். பல ஊர்களிலும் செய்யப்படும் தீபாவளி கறி குருமா காணொலிகள் யூடியூபில் ஜமாய்க்கின்றன. இப்போதெல்லாம் வீட்டில் கிடைக்கும் பல புதிய மெனுக்களுக்கு காப்பி ரைட்டே யூடியூப் அலைவரிசைகள்தாம். அது, தீபாவளி அன்றும் உங்கள் வீட்டில் தொடர்ந்தால் ஆச்சரியமில்லை.

பட்டாசு காணொலிகள்

தீபாவளியின் கிளைமாக்ஸே பட்டாசுகளில் மூழ்கிக் கிடப்பதுதான். அது தொடர்பான காணொலிகளும் யூடியூபில் சரம்சரமாகக் கிடைக்கின்றன. பட்டாசுகளை சிவகாசி விலையில் உங்கள் ஊரில் எப்படி வாங்கலாம், ஆன்லைனில் பட்டாசு ஷாப்பிங் செய்வது எப்படி, குறைந்த விலையில் எங்கே பட்டாசுகள் கிடைக்கின்றன என்பது போன்ற காணொலிகள் யூடியூபை அமர்க்களப்படுத்துகின்றன. சிவகாசிக்கே போனால், எங்கே பட்டாசு வாங்கலாம் என்கிற தகவல்களும் கிடைக்கின்றன. பொது நலன் கருதி பட்டாசுகளைப் பாதுகாப்பாக வெடிப்பது எப்படி என்பதையும் பலர் காணொலிகளாகப் பதிவிட்டிருக்கிறார்கள். இவ்வளவு ஏன், வெடி, மத்தாப்பு செய்வது எப்படி என்கிற காணொலிகள்கூடக் கிடைக்கின்றன. ஆனால், அதைப் பார்த்து ரிஸ்க் எதுவும் எடுக்காதீங்க மக்கா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x