

பல்வேறு நிலைகளில் ஒருமித்தக் கருத்து கொண்ட இரு அற்புதமான அறிவியல் நண்பர்கள் உரையாடல் நிகழ்த்தினால் எப்படி இருக்கும்? அவ்வாறு ஒருவருக்கு ஒருவர் ஒத்திசைவாக நிகழ்த்திய உரையாடலின் தொகுப்புதான் ‘எனது வானின் ஞானச் சுடர்கள்’ புத்தகம். அப்துல் காலம் குடியரசுத் தலைவராக இருந்தபோது பதிவுசெய்யப்பட்ட உரையாடல். அவருடைய நண்பரும் அக்னிச் சிறகுகள் புத்தகத்தின் இணை ஆசிரியருமான அருண் கே.திவாரி உடன் குடியரசுத் தலைவர் மாளிகையில் வாழ்வியலின் குறிக்கோள் குறித்த சுவாரஸ்யமான பதிவு.
நித்தியத்துவம், திசைகாட்டும் கம்பங்கள், மூலாதாரம் என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வாசகர்களை அடுத்த கட்ட உரையாடலுக்கு உந்தித்தள்ளும் பதிவு இது.
கீழிருந்து மேல் எழுந்தவர்கள்
முதல் அத்தியாயத்துக்கு முன்பாக இரண்டாவதை விவாதிப்பது எளிமையான புரிதலுக்கு உதவும். இந்தப் பகுதியில் எத்தனையோ தடைகளைத் தாண்டி வாழ்க்கைச் சவால்களைத் துணிகரமாக எதிர்கொண்டு சமூகத்துக்குப் பெரும்பங்கு ஆற்றியவர்கள் பற்றிய விரிவான விவாதம் இது. திருவள்ளுவர் தொடங்கி, அசோகர், ஆரியப் பட்டர், கலீஃபா உமர், குருநானக், தாமஸ் ஆல்வா எடிசன், ஆப்ரகாம் லிங்கன், காந்தியடிகள், ஸ்ரீனிவாச ராமானுஜர், விவேகானந்தர், சர்.சி.வி.ராமன், எம்.எஸ்.சுப்புலட்சுமி, நெல்சன் மண்டேலா, சதீஷ் தவன், குரியன், காக்கர்லா சுப்பாராவ் வரை பல சாதனையாளர்களை உந்தித்தள்ளிய சக்தி எது என்பது சுருக்கமாகவும் சுவையாகவும் விளக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் வசதியற்ற சூழலில், படிப்புக்கே வழியில்லாத போதும், கடும் போராட்டங்கள் மூலமாகத் தங்களை முன்னிறுத்தியவர்கள். இவர்களுடன் தனது தாயையும், அயராது உழைத்து வந்த பாமரத் தந்தையையும் அப்துல் கலாம் இணைக்கிறார். கலாமைக் கவர்ந்தவர்களும், கலாமுடன் சமகாலத்தில் நெருங்கிப் பணிபுரிந்தவர்களும், பழகியவர்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பகுதி நம்மிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
முடிவில்லா உரையாடல்!
இப்போது முதலாம் அத்தியாயத்துக்கு வருவோம். ஆன்மாவின் நிலைத்த தன்மை மற்றும் தொடர்ச்சி இதில் பேசப்படுகிறது. மனிதன் தன் தேவைக்காகத்தான் உலகம் இருப்பதாக எண்ணுவது சரி அல்ல. யார் ஒருவரையும் மையமாகக் கொண்டு இவ்வுலகம் படைக்கப்படவில்லை. அனைவரையும் ஒரு சங்கிலித் தொடரில் இணைக்கும் ஒரு ஒழுங்காற்றலுடன் இவ்வுலகம் படைக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ளச் செய்கிறது இப்பகுதி.
நிஜம் எது, சத்தியம் எது என்ற தேடலில் நிறைவு பெறுகிறது. இத்தகைய கருத்துகளை ஏற்க மறுப்பவர்களும் இருப்பார்கள். அத்தகைய மறுப்பும், விமர்சனமும்தான் வளர்ச்சி என்று அப்துல் கலாம் கருதுகிறார். அதைச் சுட்டிக்காட இந்த உரையாடல் முடிவற்றது என்று அவரே கூறுகிறார்.
கொள்கை வெல்வதே கொண்ட லட்சியம்!
மூன்றாம் பகுதியில் நம் வாழ்வின் நோக்கத்தைத் தேர்வு செய்வதில் தொடங்கி, அதனை எட்டிப்பிடிப்பதற்கான வழிமுறைகள் வரை அலசப்படுகின்றன. மனித இருப்பின் விடுதலை மற்றும் மேம்பாட்டுக்காகத் தொடரப்படும் இடையறாத பயணம் பேசப்படுகிறது. லட்சியத்தை எட்ட எதன் மீதும் பற்றுக் கொள்ளாமல் இருக்கும் தன்மை வலியுறுத்தப்படுகிறது. செல்ல வேண்டிய இலக்கு எப்படித் தீர்மானிப்பது, அதைச் சென்றடைய நம்மை நாமே எப்படித் தயார்படுத்திக்கொள்ளலாம் என்பது பற்றிய விளக்கத்தை அப்துல் கலாம் சொல்லக் கேட்பதைவிட இளைஞர்களுக்கு வேறென்ன வேண்டும்!
தடைகளைத் தாண்டி வெளிப்படுபவர்கள்தான் உலகில் எதையும் சாதிக்க முடியும் என்பதற்குக் கீழ்க்காணும் கவிதையை அப்துல் கலாம் எழுதியுள்ளார்.
உன் ஜாடியில் உள்ளது உப்பு கரிக்கும் அழுக்கு நீர்ஜாடியை உடைத்தெறி! ஆற்றங்கரைக்கு வா!
நமது வாழ்வின் லட்சியம் எது, நாம் எதை நோக்கிப் பயணிக்கப்போகிறோம், அதற்கான உந்து சக்தியும், அந்த இலக்கை எட்டுவதற்கான விடாமுயற்சியை மேற்கொள்வது எப்படிப் போன்றவற்றை ஆன்மிகத் தளத்தில் தத்துவ விசாரணையுடன் அலசும் இந்த உரையாடல் நமது வாழ்வுக்கு உறுதுணையாக நிச்சயம் அமையும். விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு இந்நூலைப் படித்த பின்பு நமது விமர்சனங்களுடன் இந்நூலைச் சீர்தூக்கிப் பார்க்கலாம்.
எனது வானின் ஞானச் சுடர்கள்
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் - அருண் கே.திவாரி
தமிழில்: மு.சிவலிங்கம்
கண்ணதாசன் பதிப்பகம்,
23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை - 600 017.
தொலைபேசி: 044 - 24332682, 24338712
பக்கம் - 214 / விலை ரூ.75/-