

இந்தியாவில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து வெளிவரும் பொறியியலாளர்களில் 75 சதவீதத்தினர் வேலைக்குத் தகுதியற்றவர்களாக இருக்கின்றனர் என்கிறது ஒரு சமீபத்திய அறிக்கை. ஏட்டளவில் நல்ல அறிவுடன் இருந்தாலும், நடைமுறை ரீதியாக, வேலைசார்ந்த திறன்கள் மற்றும் மென்திறன்கள் இன்றி இருக்கின்றனர். இதை வெளியிட்டது மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களுக்கான தேசிய கழகமான நாஸ்காம். கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியதன் அடிப்படையில் தொழில் நுட்பக் கல்விக்கு, கலைப் படிப்புகளை விட கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தேச வளர்ச்சியில் உயர்கல்வியின் பங்களிப்பு குறித்து சமீபத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலைப்பாடப் படிப்புகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.
விமர்சனப் பார்வை தேவை
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தற்போது நடந்துகொண்டிருக்கும் சர்ச்சையை அதற்கு உதாரணமாகக் கூறலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவர்களால் தினசரி உருவாகும் கூச்சல்களும் சமூக ஊடகங்களில் நடக்கும் சர்ச்சைகளையும் பார்க்கும்போது இப்படியான சூழ்நிலை எப்படி உருவானது என்று ஒருவர் வியக்கக்கூடும். நிதர்சனமான உண்மை இதுதான். நமக்கு மென்மேலும் பொறியாளர்களும் மருத்துவர்களும் வேண்டாம். வழக்கறிஞர்களும் கவிஞர்களும் தேவை. ஏற்கெனவே இருக்கும் சமூக நிலையையும், அதிகாரத்தில் இருப்பவர்களையும் விமர்சனம் செய்து கேள்வி கேட்க நமக்குக் கலைஞர்களும் சிந்தனையாளர்களும் கூடுதலாகத் தேவை. ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது அரசியல் ரீதியான தாக்குதல் நடந்துகொண்டிருக்கும் சூழலில் இது மிகவும் அவசியம். இந்தியாவின் தனித்துவமே வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான். ஆனால் தேசபக்தி, தேசியவாதம், கல்வி ஆகியவற்றைச் சுருக்கிப் பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது.
உலகமயமான காலகட்டத்தில், வெறும் தொழில்நுட்பத் திறன்கள் மட்டும் போதாது. நம்மைப் போல அல்லாதவர்களுடன் தொடர்புகொள்ள உதவுவதற்கான திறன்கள் நமக்குத் தேவை. பல்வேறு மொழிகளோடு பரிச்சயம் இருப்பதோடு, விமர்சனபூர்வமான சிந்தனைத் திறனும் தேவை. இவை தேவை என்றால் நிச்சயமாகக் கலைப் படிப்புகள் தேவை.
இன்று தொழில்நுட்பத் திறன்கள் சார்ந்த கல்விதான் நாட்டின் வளர்ச்சிக்கு உதவத் தகுந்ததாகப் பார்க்கப்படுகிறது. நாட்டின் முன்னேற்றத்துக்கு கவனம் அளிக்கப்பட வேண்டியதும், எல்லாரும் தரமான வாழ்க்கையைப் பெறுவதற்கான உத்தரவாதத்தை அளிப்பதும் அவசியம் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் விவாதங்கள், மாற்றுக் கருத்துகள், மறுப்புகள் ஆகியவை அகற்றப்பட்ட ஒரு சமூகம் இதன் வழியாக உருவாகிவிடக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
கல்வி மாதிரி
எத்தனை பேருக்கு வேலை தேவையாக இருக்கிறதோ அதே அளவுக்குப் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இளைஞர்களைச் சிறப்பாகத் தயார்ப்படுத்தும் தொழில்ரீதியான படிப்புகளும் அவசியம். ஆனால் ஒன்றை யோசித்துப்பாருங்கள், மகாத்மா காந்தி மட்டும் பொறியியல் பட்டதாரியாக இருந்திருந்தால் நாம் அனைவரும் பிரிட்டிஷ் அரசின் மேம்பட்ட ரயில்களில் பயணம் செய்திருந்திருப்போம். ஆனால் சுதந்திரம் கிடைத்திருக்குமா?
பெரும்பாலான அரசியல் தலைவர்கள் சட்டக் கல்வி அல்லது கலைப் படிப்புப் பின்னணியைக் கொண்டவர்களாக இருந்ததுக்குப் பின்னால் ஒரு காரணம் உள்ளது. ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றுத்தரப் போராடிய தலைவர்கள் அனைவரும் விமர்சனபூர்வமான சிந்தனையாளர்களாகவும், அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்பவர்களாகவும் இருந்தனர். அவர்கள் தங்கள் எண்ணங்களை உருவாக்குவதற்கு முன்னர் உண்மைகளை ஆராய்ந்தனர். சுதந்திரமான கலைப் படிப்புகள் மூலம் இத்திறன்களைப் பெற முடியும். தற்கால இந்தியாவிற்கும் தேவையான திறன்கள் அவை.
உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாக, எதிர்ப்புக் குரல்களையும் மாற்றுக் கருத்துகளையும் நிர்வகிக்கவும் அவற்றைத் தொடர்ந்து பாதுகாக்கவும் இந்தியா உலகுக்கு வழிகாட்ட வேண்டும். எதிர்ப்புக் கருத்துகள் இல்லையெனில், நாம் சர்வாதிகாரத்தின் குழப்படியில் சிக்கிக்கொள்வோம். அது ஒட்டுமொத்த உலகுக்கும் துயரகரமானது.
தமிழில் சுருக்கமாக: ஷங்கர்
©தி இந்து (ஆங்கிலம்)