Last Updated : 20 Mar, 2016 12:41 PM

 

Published : 20 Mar 2016 12:41 PM
Last Updated : 20 Mar 2016 12:41 PM

பெண் எனும் பகடைக்காய்: குறுநில மன்னர்களும் பூஞ்சைக் காளான்களும்

மலரினும் மெல்லிது காமம். மலரைவிட மென்மையான காதலைக் கைக்கொண்டு, காதலொருவனைக் கைப்பிடித்து அவன் காரியங்கள் யாவற்றுக்கும் கை கொடுத்து வாழ நினைத்த இளம் பெண் குருத்து, இன்று சிதைக்கப்பட்டு நிற்கிறது. கண்ணெதிரில் துள்ளத் துடிக்கத் தன் துணையை, ஆருயிரை பலி கடாவாக்கிவிட்டோமே என்ற குற்ற உணர்வுக்கு அந்தப் பெண்ணை ஆளாக்குகிறது சாதியச் சமூகம். காட்சி ஊடகத்தின் வழி பார்த்த நமக்கே பதறுகிறது என்றால், அந்தப் பெண்ணின் துயரத்தையும், வேதனையையும் சொற்களில் அடக்கிவிட இயலுமா? வாழ்நாள் முழுதும் நரக வேதனையல்லவா? வாழ வேண்டிய ஒரு இளைஞன் பலர் பார்க்க நடு வீதியில் துண்டாடப்படுகிறான். ஆயிரம் கற்பனைக் கோட்டைகளுடன் தங்கள் வாழ்க்கையைத் தொடங்க நினைத்த அவர்களுக்கு வாழ்நாள் முழுதும் துயரத்தையும் மரணத்தையும் பரிசாக அளித்திருக்கிறது சாதி. மகளின் நிலை அந்தத் தந்தைக்கு இப்போது மன மகிழ்ச்சியைக் கொடுத்துவிட்டதா? அல்லது சாதியின் பெருமைதான் நிலைநாட்டப்பட்டுவிட்டதா? பெற்ற மகளின் மன மகிழ்ச்சியைவிட மேலானதா அந்தச் சாதி? சாதியின் பெயரைச் சொல்லிச் சொல்லிக் கும்மாளமிடும் கூட்டத்துக்கும் மனிதம் கடந்தவர்களுக்கும் வேண்டுமானால் அது மகிழ்ச்சியைக் கொடுக்கலாம். ஆனால், பெரும்பான்மை மனித மனங்களுக்கு அது கடக்க முடியாத துன்ப நதி.

குறுநில மன்னர்களா? ஜனநாயக ஆட்சி முறையா?

தங்கள் இனம் பெருக வேண்டும், அதில் கலப்பு நிகழ்ந்துவிடக் கூடாது, அந்த இனப்பெருக்கத்தைக் கொண்டு, பெரும்பான்மைச் சமூகமாக, தங்கள் பகுதியில் குறுநில மன்னர்களைப் போலத் தங்கள் வம்சம் ஆட்சி செலுத்த வேண்டும் என்ற மனநிலையின் வெளிப்பாடாகவே இவற்றைக் கூர்ந்து நோக்க வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் நான்கு திசைகளிலும் இருக்கும் மாவட்டங்கள்தோறும் வீங்கிப் பெருத்திருக்கும் சாதியின் ஆதிக்கமும், அதன் வீச்சும், கொக்கரிக்கும் முழக்கங்களும் அதைத்தான் பறைசாற்றுகின்றன.

பூஞ்சை மனதும் பூஞ்சைக் காளான்களும்

அந்தந்தச் சாதியைச் சார்ந்த பெண்கள் படித்தவர்களாக இருந்தபோதும், சுய சிந்தனைகளும் செயல்பாடுகளும் அற்றவர்களாக, தலையாட்டி பொம்மைகளாக இருப்பதையே சாதிய ஆண் சமூகம் விரும்புகிறது. பெண்களைப் படிக்க வைப்பதையும்கூட, அவர்கள் கல்வியறிவு பெற வேண்டும் என்பதையும் தாண்டி, வேலை செய்வதற்கும், பொருளாதார நலன், பலன் கருதியுமே அதில் கவனம் குவிக்கிறது. கோணலாகிப் போன தங்கள் ஆதிக்கச் சிந்தனைகளால் பெண்ணைக் கட்டிப்போட நினைக்கிறது. பூஞ்சைக் காளான்களாக மனமெங்கும் படர்ந்து கிடக்கும் சாதியச் சிந்தனை, தரங்கெட்ட சொற்களாக அதை வெளிப்படுத்துகிறது.

ஜீன்ஸுக்கும், கூலிங் கிளாஸுக்கும் மயங்கி ஆணின் பின்னால் திரிபவர்களா பெண்கள்? விளம்பரங்களும்கூட இதே உத்தியைத்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. சாதாரண எளிய வீட்டு உபயோகப் பொருட்களைக் காண்பித்துப் பெண்ணை ஒரு ஆணால் கட்டிப் போட்டுவிட முடியுமா? இல்லை தன்வசப்படுத்திவிடத்தான் முடியுமா? முடியும் என்கின்றன அவை. அவ்வளவு பூஞ்சையானதா பெண் மனது?

இந்தியா முழுமையுமே பல மாநிலங்களில் சாதியின் கோர முகம் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதற்கு பலியாவது தலித் மக்களும், பெண்களும்தான். இருவரும் விளிம்பு நிலையில்தான் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ‘சாதி மதங்களைப் பாரோம்’ என்று பாரதி பாடிச் சென்ற அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் காற்றில் கரைந்து போனதன் மாயம் என்ன? பாப்பாவுக்குச் சொல்லப்பட்டவை, அவர்கள் வளர்ந்த பின் மறந்து போனதோ?

குடும்பமும் பாலியல் வன்புணர்வும்

டெல்லி மாணவி நிர்பயா பாலியல் வழக்கின் பலனாக அளிக்கப்பட்ட ஜே.எஸ். வர்மா கமிஷன் பரிந்துரைகள், பெண்களைப் பொறுத்தவரை இருளில் கிடைத்த ஒரு கைவிளக்கு என்றே கொள்ளலாம். அதன் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பல சட்டங்களிலும் பலவிதமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று கணவனே என்றாலும் மனைவியின் சம்மதம் இன்றி அவளைப் பாலியல் வன்புணர்வு செய்வதும் கிரிமினல் குற்றமே என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதை அமல்படுத்தினால் குடும்ப அமைப்பில் விரிசல் ஏற்படும்; குடும்ப உறவு முறைகள் சிதறிப் போகும் என்று நாடாளுமன்றக் குழு அறிக்கை சுட்டுகிறது.

ஆண் விருப்பும் பெண் வெறுப்பும்

பெண்ணின் உடல் நிலை, மனநிலை எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் விருப்பம் மட்டுமே முதன்மையாகக் கொண்டு நிகழ்த்தப்படும் பாலியல் வன்புணர்வுகள் பற்றி, உலக நாடுகளின் பெண்கள் பலரும் தெரிவித்திருக்கும் கருத்துகள் அதிர வைப்பவை. இந்தியா உட்பட தென் கிழக்காசிய நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளில் உள்ள

பத்தாயிரம் ஆண்களிடம் ஐக்கிய நாடுகள் சபை நடத்திய கணக்கெடுப்பு, அவர்களின் பெண் பற்றிய பார்வையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. ஆண் – பெண் உறவில் பெண்ணின் சம்மதம் தேவையற்றது, கட்டாயப்படுத்தி, பெண்ணின் விருப்பமின்றி, அவளைத் துன்புறுத்தி உறவு கொள்வது தங்களின் உரிமை என்று 70 முதல் 80 சதவீத ஆண் சிங்கங்களிடமிருந்து பதில் கிடைத்திருக்கிறது. அதில் பலரும் தங்கள் கோபத்தைத் தீர்த்துக்கொள்ள, மனைவியைத் தண்டிக்க அல்லது தங்களின் சந்தோஷம் மட்டுமே முதன்மையாக என்று பலவிதமாகக் கருத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

திருமணம் முடிந்த அன்றே, தங்கள் வெறியைத் தீர்த்துக்கொள்ளும் முனைப்புடன் ‘காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் பாய்ந்தாற் போல்’ செயல்படும் ஆண்களின் ‘வீரம்’ கண்டு பெண் அஞ்சாமல் இருக்க முடியுமா? இதுவே தொடர்கதையானால் இல்வாழ்க்கை இனிமையாகத்தான் இருக்க முடியுமா? பெண்ணின் விருப்பம் இங்கு முதன்மை இல்லையா? இதைக் காரணமாக்கியே இன்று விவாகரத்து வழக்குகளும் தொடரப்படுகின்றன. ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் மலரினும் மெல்லிது காமம் என்பது இங்கு பெரும் கேள்விக்குறியாக நம் முன் நிற்கிறது.

ஜனநாயகமாகட்டும் குடும்ப அமைப்பு

குடும்ப அமைப்பு என்பதன் பெயரில்தான் பெண் மீதான அத்தனை வன்முறைகளும் பாதுகாப்பாக நான்கு சுவர்களுக்குள் இங்கு நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. குடும்ப அமைப்பு மிகவும் அவசியம். அதைச் சிதைக்க வேண்டுமென்று பெண்ணியவாதிகள் யாரும் குரலெழுப்பவில்லை. ஆனால், குடும்ப அமைப்புக்குள் ஜனநாயகம் வேண்டும் என்பதைத்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டியிருக்கிறது. ஜனநாயகம் இல்லாததே ஆணவக் கொலைகளுக்கும்கூட ஒரு காரணம் என்றும் சொல்லலாம். எந்த வன்முறையையும் தீர்த்துவிடலாம், ஆனால் குடும்ப வன்முறைக்குத் தீர்வு? அனைவர் கருத்துக்கும், விருப்பத்துக்கும் மதிப்பளிக்கத் தொடங்கினாலே, குடும்பத்துக்குள் நிகழும் வன்முறைகள் குறைந்துவிடாதா என்ற நப்பாசைதான் இதை வலியுறுத்தக் காரணம்.

பெண் மீது செலுத்தப்படும் அனைத்துத் தரப்பு வன்முறைகள் பற்றி எத்தனை முறை பேசினாலும், மீண்டும் மீண்டும் அதிரவைக்கின்றன அத்தனை நடப்புகளும். ஏன் தொடர்ச்சியாகப் பெண்ணைக் குறி வைத்து அடிக்கிறார்கள்? இந்தக் கேள்வியை அனைவரும் கேட்டுக்கொண்டே இருங்கள். அப்போதுதான் தீர்வும் தெளிவும் கிட்டும்.

(நிறைவடைந்தது)

கட்டுரையாளர், எழுத்தாளர்.தொடர்புக்கு: asixjeeko@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x