Last Updated : 04 Mar, 2016 12:23 PM

Published : 04 Mar 2016 12:23 PM
Last Updated : 04 Mar 2016 12:23 PM

நிறைவேறிய ரசிகர்களின் கனவு

ஐந்து முறை ஆஸ்கரைத் தவறவிட்டவர் டைட்டானிக் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொள்ளை கொண்ட நாயகன் லியனார்டோ டிகாப்ரியா. அந்த விருது இந்தமுறை, டிகாப்ரியாவுக்கு அவர் நடித்த ‘தி ரெவனண்ட்’ திரைப்படத்துக்காகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. எல்லா பேதங்களையும் கடந்த சினிமா ரசிகர்கள் ஒரு கணம் மனதுக்குள் டிகாப்ரியாவுக்காக ஆர்ப்பரித்திருக்கவே செய்திருப்பார்கள்.

கரடியால் தாக்கப்பட்டு, பனி உறைந்த காட்டில் தன்னந்தனியாக உயிருக்காகப் போராடி, பழிவாங்கும் வெறியுடன் இறங்கும் 19-ம் நூற்றாண்டு வேடன் ஹக் கிளாஸ் கதாபாத்திரத்துக்குக் கிடைத்த விருது இது. துடுக்கான ஏழை இளைஞனாக கப்பலில் ஏறி, ஒரு மகத்தான காதல் காவியத்தைத் தன் மரணத்தால் எழுதும் இளைஞனாக உலகத்தையே கவர்ந்த ஜாக் டாஸன் கதாபாத்திரத்துக்கு ஏற்கெனவே கிடைத்திருக்க வேண்டிய விருது இது.

அதீத உளச் சிக்கல் கொண்டதும், விதவிதமான தொழில்முனைவுகளில் ஈடுபடும் ஹோவார்ட் ஹக்ஸாக சாகசம் காட்டியதற்கும் தி ஏவியேட்டர் படத்தில் நடித்ததற்காக வந்திருக்க வேண்டிய விருது இது. கொண்டாட்டமும் போதையும் செல்வச் செழிப்பும் மிதமிஞ்சிய ‘தி வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’டில் ஜோர்டான் பெல்போர்ட்டாக நினைவில் நின்றதற்குக் கிடைத்திருக்க வேண்டிய விருது இது. ‘தி டிப்பார்ட்டட்’ படத்தில் ரகசிய போலீஸ், ‘கேங்ஸ் ஆஃப் நியூயார்க்’கில், ஐரிஷ் சண்டைக்காரனாக, ‘ஜாங்கோ அன்செய்ன்’டில் வில்லனாக என டிகாப்ரியோ தான் ஏற்ற கதாபாத்திரங்கள் அனைத்துக்குமான விருதைப் பெற்றிருக்கிறார்.

டிகாப்ரியோ ஒரு நடிகனாக அடைந்த உருமாற்றம் மகத்தானது. தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கினார். ‘வாட் இஸ் ஈட்டிங் கில்பர்ட் க்ரேப்’ திரைப்படத்தில் ஜானி டெப்புக்கு எதிராக வேடமேற்றார். டைட்டானிக்கில் ரொமான்டிக் ஹீரோ. அடுத்தடுத்து அவர் நடித்த கதாபாத்திரங்கள், உலகில் எந்த மூலையில் உள்ள பெருநடிகனும் பொறாமைப்படும் கதாபாத்திரங்கள். டிகாப்ரியோ, தனது நான்கு வயதிலிருந்து கனவு கண்ட விருது என்று கூறியிருக்கிறார்.

டி காப்ரியோவுக்குச் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டபோது, அரங்கமே எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி மரியாதை செய்தது. முதல்முறை ஆஸ்கர் வெல்பவருக்கு இதுவரை கிடைத்திராத மரியாதை இது. டைட்டானிக் திரைப்படம் மூலமாகக் கனவு ஜோடியாக நினைவுகூரப்பட்ட கேட் வின்ஸ்லட்டும் ஆஸ்கர் விருது விழாவில் லியார்னடோவைக் கட்டிப்பிடித்து வரவேற்றார்.

டிகாப்ரியோ 41 வயது வாலிபர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானைப் போலவே திருமணம் செய்துகொள்ளாதவர். உலகத்தின் சூப்பர் மாடல்களைக் காதலிகளாகக் கொண்டவர். சர்வதேச அளவில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவரான டிகாப்ரியோ, சுற்றுப்புறச்சூழல் நலன் தொடங்கி கடல் வளங்களைப் பாதுகாப்பது தொடர்பான பணிகளில் கோடிக்கணக்கில் தனது பணத்தைச் செலவழித்துவருபவர்.

ஆஸ்கர் விருது ஏற்புரையிலும் அவர், பேராசையின் அரசியலால் இந்த உலகின் இயற்கை வளங்களைச் சீரழிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் பெருநிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு எதிராகவே பேசினார். ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலனுக்காகப் பேசும் மக்கள் தலைவர்களை நாம் ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பேராசையையும் பேரங்களையும் மட்டுமே அரசியலாகக் கொண்டு தனது கவர்ச்சியை முதலீடாகப் போட்டு ஆட்சிக்கு வரத் துடிக்கும் நடிகர்கள் வாழும் நாடு இது. இச்சூழலில் உலகின் இயற்கை வளங்களைக் காப்பதற்கான அறைகூவலை விடுத்துள்ள லியனார்டோ டிகாப்ரியோ அரிதான கலைஞர்தான்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x