Published : 23 Oct 2021 03:06 am

Updated : 23 Oct 2021 06:02 am

 

Published : 23 Oct 2021 03:06 AM
Last Updated : 23 Oct 2021 06:02 AM

நல்ல பாம்பு 6: மலைப் பாம்புடன் குழப்பிக்கொள்ளக் கூடாது!

nalla-pambu

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. வெகு நாட்களாகப் பராமரிக்கப்படாத தோட்டத் தைச் சுத்தம் செய்வதற்காகச் சென்றிருந்தபோது, அங்கிருந்த மரத்தூருக்கு அருகில் இலை சருகினூடே ஒரு மலைப்பாம்பு இருப்பதை அவர் பார்த்திருக்கிறார். சற்றுப் பதற்றமடைந்தவர் வனத்துறைக்குத் தகவல் சொல்ல, நானும் வன ஊழியரும் அங்கே விரைந்தோம். அங்கே சென்றடைந்த பிறகு பாம்பைப் பற்றி ஒரு கூடுதல் தகவல் சொன்னார், ‘உஷ்…’ என்று பெருத்த சத்தத்தை அந்தப் பாம்பு எழுப்பியதாக.

என் ஊகம் நிஜமானது, அது கண்ணாடி விரியன் (Russell’s Viper - Daboia russelii) பாம்புதான். இது நஞ்சுப் பாம்பு, இதன் நஞ்சு (venom) ரத்த மண்டலத்தைத் தாக்கும் தன்மைகொண்டது. நாட்டின் நான்கு முக்கிய நஞ்சுப் பாம்புகளில் ஒன்று இது. ‘வைபரிடே’ குடும்பத்தின் துணைக் குடும்பமான ‘வைபரினே’வில் ‘டபோயா’ என்கிற தனித்த பேரினத்தைக் கொண்டு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக வாழ்ந்துவருகிறது.

ஏன் அது விரியன்?

பாம்பு எங்களைக் கண்டுகொண்டதால் எச்சரிக்கை சமிக்ஞையாக உடலைச் சுருட்டி கழுத்தை ‘S’ வடிவத்தில் வளைத்துக்கொண்டு உரத்த சத்தத்தை வெளிப்படுத்தியது. நாம் மூச்சுப்பயிற்சி செய்யும்பொழுது மூச்சுக்காற்றை உள்ளிழுத்து வெளியிடுவது போன்றிருந்தாலும், அது வெளிப்படுத்தும் சத்தத்தின் அளவு கூடுதலாகவே இருந்தது. அந்நேரத்தில் அதன் உடல் பகுதி சுருங்கி விரிவதையும் பார்க்க முடிந்தது. இப்பாம்புகள் முழு வளர்ச்சியடையும்பொழுது 5 அடி நீளம் வரை வளரலாம்.

இது எப்படி விரியன் பாம்பெனக் கூறுகிறீர்கள் என்று அவர் கேட்க, மூவரும் அதை உற்று நோக்கினோம். அதன் உடல் மேடுடைய (Keeled) செதில்களுடன் சொரசொரப்பான தன்மையைப் பெற்றிருந்தது. தலை தட்டையாக முக்கோண வடிவத்தில் கழுத்திலிருந்து தனித்திருந்தது. நன்கு பருத்த உடல், ஒல்லியான குட்டை வால், தலையில் நெருக்கமான சிறு செதில்கள், பெரிய நாசித்துவாரம், செங்குத்தான கண் பாவை ஆகியவற்றைக் கொண்டிருந்தது. இது விரியனுக்கே உரிய முக்கிய உடல் அம்சம், தலையின் மேல் பகுதியில் மெல்லிய வெள்ளை நிறத்தில் ஆங்கில ' v' வடிவில் (ஸ்டெதஸ்கோப்பின் மேல் அமைப்பு) இருந்தது.

உடல் மேற்புறத்தில் நடுவில் மனிதக் கண்ணைப் போன்ற வடிவத்தில் சங்கிலித் தொடர் அமைப்பைப் பெற்றிருக்கிறது. கழுத்தில் ஆரம்பித்து வால் பகுதியை நெருங்க நெருங்க அந்த வடிவம் சுருங்கி இருந்தது. இந்த அமைப்பு நீளவாக்கில் மூன்று வரிசையாக இருக்கிறது. பழுப்பு நிறம் உடல் மேற்புறம் முழுவதும் பரவியிருக்கிறது. அடிவயிறு முழு அளவுடைய பட்டைசெதில்களைக் கொண்டு வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது.

இப்பொழுது அந்தப் பாம்பு அசையாமல் அங்கிருந்த இலைகளோடு இலைகளாகத் தன் இயல்புநிலைக்குச் சென்றது. இது இரவாடி. புதர்க்காடுகள், தோட்டக்காடுகள், அடர்ந்த செடிகள் நிறைந்த இடங்களில் காணப்படுகிறது. தரைவாழ் பண்பைப் பெற்றிருக்கும் இவை மரக்கட்டைகளின் அடிப்பகுதி, எலி வளை, இலை சருகுகளின் ஊடே வசிக்கின்றன. இரையின் வருகையறிந்து அப்பகுதியில் மறைந்து காத்திருந்து வேட்டையாடும் பண்பைப் பெற்றிருக்கிறது. எலி, அணில் போன்ற சிறு கொறி விலங்குகள், சிறு பறவைகள் போன்றவையே இதன் இரை. குட்டியிடும் பாம்பு வகையைச் சேர்ந்த இது, ஒரு முறையில் 60 குட்டிகளுக்கு மேல் ஈணுவதாக அறியப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு அவசியம்

பார்க்க மந்தமாகக் காணப்பட்டாலும் அச்சுறுத்தப்படும்பொழுது திடீர் வேகமெடுத்துத் தாவிக் குதித்துக் கடிக்கக் கூடியவை. நஞ்சுப்பற்கள் மிக நீளமானவை. இதன் நஞ்சு ரத்த மண்டலத்தைத் தாக்குவதால், கடிபட்ட சிறிது நேரத்தில் கடிவாயில் ரத்தக் கசிவும் வீக்கமும் உண்டாகும். சில வேளைகளில் வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். தீவிர நிலையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவதோடு உள்ளுறுப்புகளிலும் ரத்தக்கசிவு ஏற்படும். இறுதியில் சிறுநீரகம் செயலிழந்து, கடிபட்டவர் இறக்க நேரிடும்.

நல்ல பாம்பின் நஞ்சு போன்று உடனே பெரிய பாதிப்பை இது உருவாக்காததால், மக்கள் இதைப் பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் மாந்திரீகம் போன்றவற்றை நம்பியும் தவறான முதலுதவியாலும் பாதிக்கப்படுகிறார்கள். இறுதிக் கட்டத்தில் மோசமான நிலைமையை அடையும்போது மருத்துவமனையை நாடுகிறார்கள். இந்நிலையில் ரத்தச் சுத்திகரிப்பு, கடிபட்ட இடத்தில் உண்டாகும் அழுகுதல் காரணமாக உடல் உறுப்பை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். சில நேரம் உயிரையும் இழக்கிறார்கள். நாட்டில் இப்பாம்புக் கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகம். எனவே, காலம் தாழ்த்தாமல் தீவிர சிகிச்சையைப் பெற வேண்டும். பாம்புகள் தற்காப்புக்காகவே கடிக்கின்றன. நாம் விழிப்புணர்வுடன் அவை வாழும் இருப்பிடங்களை அறிந்து, முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

அந்த இடம் பெரிய தோட்டப்பகுதியாக இருந்ததால், அந்தப் பாம்பைத் தொந்தரவு செய்யாமல் விட்டுவிடலாம் என்று நாங்கள் கூறியபொழுது, ஒருபுறம் அவருக்குப் பயமாக இருந்தாலும், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒப்புக்கொண்டார். பல நாட்கள் கழித்து அதே நபர் அழைத்தார், சமீபத்தில் தங்கள் தோட்டத்தில் ஒரு மலைப்பாம்பைப் பார்த்ததாகவும், நிச்சயமாக அது கண்ணாடி விரியன் அல்ல என்றும் கூறினார்.

கட்டுரையாளர், ஊர்வன ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: oorvanapalli@gmail.com

நல்ல பாம்புமலைப் பாம்புNalla pambuRussell’s ViperDaboia russelii

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x