Published : 23 Oct 2021 03:06 AM
Last Updated : 23 Oct 2021 03:06 AM

சேற்று உளுவை எனும் முன்னோடிகள்

வே.இரவி

கடல்வாழ் ஆதி உயிர்களிலிருந்து நிலமெனும் புதிய சூழலுக்கு மற்ற உயிரினங்கள் இடம்பெயர்ந்த நிகழ்வு உலகப் பரிணாம அற்புதங்களில் ஒன்று. இது இயற்கையின் பேராற்றலை உணர்த்தும் நிகழ்வும்கூட. புதுமையும் வளமையும் நிறைந்த பண்புகளோடு வாழும் இக்கால முதுகெலும்பிகளின் பரிணாம வளர்ச்சிக்கு மீன்களே அச்சாணி. மீன்களின் பொற்காலம் எனப்படும் டெவோனியன் காலத்தில்தான் (4.15 கோடியிலிருந்து 3.6 கோடி ஆண்டு களுக்கு முந்தைய காலம்), இன்று நாம் காணும் மீன்கள் பற்பலவாகிப் பெருகின.

கடலோரம் அமைந்துள்ள கழிமுகங்கள், அலையாத்திக் காடுகளில் இயற்கையாக அமைந்துள்ள ஈரநிலமே சேற்றுப்படுகை (mudflat). அளவில் சிறிதாக உள்ள இச்சேற்றுப் படுகைகள், பன்னெடுங்காலமாக ஆறுகளாலும் கடலலைகளாலும் உருவான சேற்றுமண் தொகுப்பு. ஆற்றங்கரையின் ஒருபுறத்திலிருந்து நீரை நோக்கி சற்றே சாய்வுத்தன்மையில் இக்கட்டமைப்பு நேர்த்தியாக அமைந்திருக்கும்.

பரிணாமக் கோட்பாட்டின்படி எந்த ஒரு சிற்றின உயிரியும் புதிய சூழலுக்கு எளிதில் தகவமைத்துக்கொண்டுவிட முடியாது. ஆகவே, நீரிலிருந்து நிலமெனும் தரையை நோக்கி வந்தபோது, அதற்குரிய தகவமைப்புகளை ஓர் உயிரினம் பெற்றாக வேண்டும். அந்த வகையில் மற்ற மீன்களை போலல்லாமல் பழைய விதிகளைத் தகர்த்து, வழக்கத்திற்கு மாறான உடல் பண்புகளைப் பெற்று நம்மைப் போன்று காற்றைச் சுவாசிக்கும்‘சேற்று உளுவை மீன்கள்’ (Mudskipper) உருவாகின. இவை சேற்றுப்படுகை எனும் சூழலையே மையமாகக் கொண்டு வாழ்பவை. சேத்துளுவை, வேட்டி, பரவட்டமீன் என்கிற வழக்குமொழிப் பெயர்கள் இதற்கு உண்டு.

இந்தியச் சேற்று உளுவை

.இந்திய - மேற்கு பசிபிக் கடல் பரப்பில் 40 வகையான சேற்று உளுவை மீன்கள் பரவியிருப்பதாக அறியப்படுகிறது. இந்தியாவில் 17 வகை சேற்று உளுவை மீன்கள் காணப்படு கின்றன. மேற்குவங்கத்தின் எழில்மிகு சுந்தரவனக் காடுகளைச் சேற்று உளுவை மீன்களின் சரணாலயம் எனலாம். அதைத் தொடர்ந்து ஒடிசாவிலுள்ள பீதர்கனிகா காடு, ஆந்திர பிரதேசத்தின் கொரிங்கா காடுகளில் சேற்று உளுவை கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிச்சாவரம் வனப்பகுதி, அதை ஒட்டியுள்ள வெள்ளாற்றுச் சேற்றுப்படுகை, முத்துப்பேட்டை வனப்பகுதிகளிலும் இவை வாழ்கின்றன. குஜராத், மகாராஷ்டிரம் போன்ற மேற்குக் கடற்பகுதியிலும் அந்தமான் நிகோபார் தீவுப்பகுதிகளிலும் இவை பரவியிருக்கின்றன. சேற்று உளுவை மீன்களிலேயே போலியாப்தால்மஸ் பொடார்டி (Boleophthalmus boddarti) என்கிற மீன், இந்திய அலையாத்திக் காடுகளிலும் கழிமுகங்களிலும் காணப்படுகிறது.

தாழ் அலைகள் (low tide) அடிக்கும் காலத்தில் சேற்று உளுவை மீன்கள் தாம் விரும்பிய உணவை உண்பது, வளையிடுவது, அதனைக் காப்பது, சேற்றில் மேய்வது, துள்ளுவது, உருள்வது, கண்களைச் சிமிட்டுவது, காற்றால் வாயை உப்பச்செய்வது, சிறு சிறு சண்டையிடுவது, சுழல்வது, துடுப்புகளை விரிப்பது, மற்ற மீன்கள் தன் வளையை நெருங்காது விரட்டியடிப்பது போன்ற பல பண்புகளை வெளிப்படுத்துகின்றன.

முட்டைக்கு ஆக்சிஜன்

சேற்றின் மேல் நடந்து செல்வதற்கு வலுவான மார்புத் துடுப்புகளே கால்கள்போல் செயல்படுகின்றன. தலை உச்சியில் உருண்ட இரண்டு கண்கள், பந்துகள் ஒட்டியிருப்பதுபோல் இருக்கின்றன. தம் தேவைக்கேற்ப கண்களை வெளி நீட்டவும் உள்வாங்கிக்கொள்ளவும் கூடிய திறம் பெற்றவை இவை. இக்கண்களால் தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் 360 டிகிரி கோணத்தில் பார்க்கக்கூடியது. ஒரு சிறு அசைவோ அதிர்வோ தென்பட்டால், உடனே வளைக்குள் சென்று மறைந்துகொள்ளும்.

இந்த மீன்கள் கீழ்த் துடுப்புகளின் உதவியால், நிலத்தில் நடந்து செல்லும்போதோ மரத்தில் ஏறும்போதோ உடலை இறுகப் பிடித்துக்கொள்கின்றன. தரையில் இருக்கும்போது தம் வாய்க்குழிக்குள் ஆக்சிஜனை நிரப்பி செவுள் அறைகளுக்கு அனுப்பி சுவாசத்தைத் தொடர்கின்றன.

சேற்றுப்படுகையே தம் வாழிடமாகக் கொண்டதனால் தம் தலையால் ஒரு மீட்டருக்கும் மேலாக ஆழங்கொண்ட வளையை 'J' அல்லது 'U' வடிவில் சேற்றில் உருவாக்குகின்றன. தாம் உருவாக்கிய வளையில் முட்டைகளைப் பாதுகாக்கின்றன. பெற்றோர் மீன்கள் தங்கள் வாய்க்குழிக்குள் நிரப்பிய புறவெளி ஆக்சிஜனைக் கவனமாக வளைக்குள் செலுத்துகின்றன. அதனால், வளரும் முட்டைக்கு போதிய ஆக்சிஜன் கிடைப்பதை உறுதிசெய்கின்றன.

சேற்றுப்படுகையின் அடையாளம்

எல்லா நேரத்திலும் உணவு உண்ணாத இம்மீன்கள் சேற்றுப்படுகையில் நீர் வடிந்து கொண்டிருக்கும் வேளையில் மட்டுமே உண்கின்றன. குறிப்பாக நுண் பாசியாகிய தாவர மிதவை உயிரி, பல்சுனைப்புழு, சிறுபூச்சிகள் போன்றவை இவற்றுக்கு உணவா கின்றன. அதிகபட்சம் 12 செ.மீ.லிருந்து 25 செ.மீ. வரை வளரக்கூடிய இம்மீன்கள், மூன்று ஆண்டு வரை உயிர் வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மற்ற நிலவாழ் முதுகெலும்பு உயிரிகள் தோன்றிட முன்னோடியாகத் திகழும் இவற்றின் மார்புத் துடுப்பு கால்களாக மாறியது, நிலத்தில் ஊர்ந்து செல்வது, புறவெளி ஆக்சிஜனை தோல்வழியாக உள்வாங்குவது போன்றவை இவற்றின் தனிப்பண்புகள். இப்பண்புகளை நீர்நில வாழ்விகளிலும், சில ஊர்வனவற்றிலும் தொடர்வதைப் பரிணாமச் சான்றுகளாகக் கருதுகிறோம். அதேசமயம் இந்த மீனால்தான் மற்ற முதுகெலும்பு உயிரினங்கள் தோன்றின என்று உறுதிப்படக் கூறிவிட முடியாது என்கின்றன ஆய்வுகள்.

அலையாத்திக் காடுகளும் சேற்று உளுவை மீன்களும் இணைந்தே இருப்பவை. இக்காடுகளின் வனப்பையும் சீரிய தன்மையையும் பாதுகாப்பதில் இம்மீன்கள் சேற்றுப்படுகையிலிருந்தவாறே உதவுகின்றன. அந்தச் சூழலைக் காக்கும் பொருட்டுத் தமது வளைகளில் நீர் நிரப்பி, சேற்றுப்படுகைகளைக் குன்றாத ஈரப்பதத்துடன் காத்து, அப்படுகை கட்டாந்தரையாக மாறிவிடாமல் சேற்று உளுவைகள் தடுக்கின்றன.

கட்டுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர்

தொடர்புக்கு: ravi.velayudham@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x