Published : 22 Oct 2021 03:05 am

Updated : 22 Oct 2021 06:08 am

 

Published : 22 Oct 2021 03:05 AM
Last Updated : 22 Oct 2021 06:08 AM

அஞ்சலி: ஸ்ரீகாந்த்- முழுமை பெற்ற கலைஞன்!

actor-srikanth
‘வெண்ணிற ஆடை’

ராஜா ராணிக் கதைகள் குறைந்துபோய்விட்ட 60-களில், சமூகப் படங்களுக்கு மக்கள் அதிக ஆதரவைக் கொடுத்தார்கள். வாழ்க்கையின் சாயலைக் கொண்ட சினிமாக்களை சிறந்த பொழுதுபோக்காகக் கருதத் தொடங்கியதே இதற்குக் காரணம். சமூக படங்களைப் போலவே, சமூக நாடகங்களைப் பார்ப்பதிலும் ஆர்வம் அப்போது அதிகரித்திருந்தது. அதனால், வெற்றிபெற்ற நாடகங்கள் வெள்ளித்திரைக்கு இடம்பெயர்ந்தன. அன்று, தலைநகர் சென்னையில் பதினைந்துக்கும் அதிகமான சமூக நாடகக் குழுக்கள் இயங்கின. அவற்றில் ‘ராகினி ரெக்கிரியேஷன்ஸ்’ என்கிற நாடகக் குழு நடத்தும் நாடகங்களுக்கு கூட்டம் அலைமோதியது. சமூகத்தை விமர்சித்து, பகடி செய்து, பாலு என்கிற கே.பாலசந்தர் எழுதிய நாடகங்கள் அவை. அக்கவுண்டன்ட் ஜெனரல் (ஏஜிஎஸ்) அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டே இளைஞர் கேபி எழுதி, இயக்கி, நடிக்கவும் செய்த அந்த நாடகங்களில் வேடம் ஏற்ற பலரும் பல்வேறு அரசு அலுவலகங்களில் பணியாற்றியவர்கள்.

சென்னையில் ‘டெட் லெட்டர்ஸ்’ அலுவலகத்தில் குமாஸ்தாவாகப் பணியாற்றி வந்த பாலக்காட்டினைச் சேர்ந்த ராமனும் (பின்னால் கேபியின் ‘எதிர்நீச்சல்’ நாடகத்தில் ‘நாயர்’ வேடம் ஏற்று நடித்து புகழ்பெற்ற அதே ராமன்), அதே அலுவலகத்தில் பணிபுரிந்த கோவிந்தராஜனும் (பின்னால் ‘கலாகேந்திரா கோவிந்தராஜன்) நாடகத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் நண்பர்களாக ஆனவர்கள். எங்கே புதிய நாடகம் என்றாலும் போய்விடுவார்கள். ‘சினிமா ஃபேனடிக்'’ என்கிற ஓரங்க நாடகத்தை எழுதி, நடித்துக்காட்டி, நொடிக்கு நொடி கைத்தட்டலை பெற்று ஆச்சர்யப்படுத்திய கேபியை ராமனும் கோவிந்தராஜனும் ஆரத் தழுவிக்கொண்டார்கள்.

தோப்புத் தெருவின் தயாளன்

அதே காலகட்டத்தில் கஸ்டம்ஸ் அலுவலகத்தில் குமாஸ்தாவாகப் பணியாற்றி வந்தார் ஈரோட்டில் பிறந்து, கோவையில் படித்து, வளர்ந்த வெங்கி என்கிற வெங்கட்ராமன். திருவல்லிக்கேணியின் தோப்புத் தெருவில் எண்: 14-ல் 8 அடிக்கு 10 அடி அகலம் கொண்ட ஒரு தரைத்தள அறைக்கு, மாதம் 35 ரூபாய் வாடகை கொடுத்துத் தங்கியிருந்தார். அதே கட்டிடத்தில்தான், அன்றைய பிரதமர் நேரு வருகை தந்து பெருமைப்படுத்திய ‘சரஸ்வதி கான நிலையம்’ செயல்பட்டது. வெங்கி சிறந்த கலா ரசிகர். நண்பர்கள் சினிமாவுக்கு அழைத்தால் செல்லமாட்டார். வாரத்தில் 4 நாட்களாவது நாடகங்கள் பார்க்காவிட்டால் தூக்கம் வராது. நாடகம் முடிந்ததும் காத்திருந்து நடிகர்களைப் பாராட்டிவிட்டுத்தான் அறைக்கு வருவார். அப்படித்தான் வி.எஸ்.ராகவனின் நாடகக் குழுவில் நடிகராக இருந்த ‘நாயர்’ ராமனுக்கு நண்பரானார் வெங்கி.

1959-ம் வருடம் அது. சுக்ருத லட்சுமி விலாச சபா சென்னையில் சமூக நாடகங்களுக்கான மாநிலம் தழுவியப் போட்டியை நடத்தியது. அதில் வி.எஸ்.ராகவன் குழுவினரின் வெற்றிபெற்ற நகைச்சுவை நாடகமான ‘புஷ்பலதா’வும் போட்டியிட்டது. ஏற்கெனவே அந்த நாடகத்தைப் பார்த்திருந்த வெங்கி, மீண்டும் அதைக் காணச் சென்றார். நாடகம் தொடங்கும்முன் அதில் முக்கிய வேடம் ஏற்றிருந்த ராமனைப் பார்த்து வாழ்த்துத் தெரிவிக்க ஒப்பனை அறைக்குப் போனார். அங்கே, ‘இவர்தான் இந்த நாடகத்தோட ரைட்டர்.’ என்று கேபியை வெங்கிக்கு அறிமுகப்படுத்தினார் ராமன். அன்று ராமனுக்கு சிறந்த நடிகருக்கான பரிசு கிடைத்தது.

ஒருமுறை திருவல்லிக்கேணியில் புகழ்பெற்ற ‘ரத்னா கஃபே’யில் காபி சாப்பிட்டுக்கொண்டிருந்த ராமனையும் கேபியையும் பார்த்த வெங்கி, அருகிலிருந்த தன்னுடைய அறைக்கு அழைத்துக்கொண்டுவந்தார். வெங்கியுடைய அறையின் தனிமை, அதை அவர் தூய்மையாக வைத்திருந்த ஒழுங்கு ஆகியவற்றைப் பார்த்து அசந்துபோனார் கேபி. இருந்த ஒரு அலமாரி முழுவதும் புத்தகங்கள். அவற்றில் ரஷ்ய மொழிபெயர்ப்புப் படைப்புகள். ராமனிடம், ‘நான் வெங்கி ரூமை எழுதுறதுக்குப் பயன்படுத்தலாமா? வீட்ல எனக்குச் சுத்தமா பிரைவசி இல்ல; ஸ்மோக் பண்ண முடியல.. நீ ஒரு வார்த்தை அவன்கிட்டே கேட்டுப் பாரேன்' என்றார் கேபி. வெங்கியோ, ‘பாலு எப்பவேணா வரட்டும்.. எங்கூடவே தங்கட்டும்.. இந்தா சாவி’ என்று தூக்கிக் கொடுத்துவிட்டார். நாடக வசனங்களைச் சந்தம்போட்டுப் பேசிப் பார்த்து எழுதுவதை வழக்கமாக வைத்திருந்த கேபிக்கு, வெங்கியின் தோப்புத் தெரு அறை, வேடந்தாங்கல் ஆகிப்போனது. வெங்கியின் அறையிலிருந்துதான், தன்னுடைய ‘மேஜர் சந்திரகாந்த்’ (தமிழ்), ‘எதிர்நீச்சல்’, ‘சர்வர் சுந்தரம்’ ‘மெழுகுவர்த்தி’, ’நீர்க்குமிழி’ ஆகிய ஐந்து நாடகங்களை எழுதியிருக்கிறார்.

பல சமயங்களில் வெங்கியிடம் எழுதியவற்றைப் படித்துக் காட்டுவார் கேபி. வெங்கி, வசனப் பேப்பர்களை வாங்கிக் கதாபாத்திரங்கள்போல் படித்துக் காட்டும்போது ‘டேய்.. யூ ஹாவ் எ ஆக்டிங் டேலண்ட்.. அதை எக்ஸிபிட்டு பண்ணு. ’ என்று சொல்லி, ‘திருமண நாடகங்க’ளில் வெங்கியை முதலில் நடிக்க வைத்தார் கேபி. அப்போதெல்லாம் சென்னையில், செல்வந்தர் வீட்டுத் திருமணங்களில் மகிழ்ச்சியூட்டும் நாடகங்கள் நடத்தப்படுவது உண்டு. கேபி, ‘நாயர்’ ராமன், ஹரிகிருஷ்ணன், கோபி ஆகியோர் மிதிவண்டியில் சென்று 1 மணி நேர நாடகம் நடத்திவிட்டு, சுளையாக 600 ரூபாயை வாங்கிக்கொண்டு வந்துவிடுவார்கள். அந்தத் திருமண நாடகக் குழுவில் வெங்கியையும் இணைத்துகொண்டார் கேபி. பின்னர், வி.எஸ்.ராகவன் குழு பிரபலமடைந்தபோது அதில் வெங்கிக்கு வேடங்கள் பெற்றுக்கொடுத்தார். இதன்பின்னர், ‘ராகினி ரெக்கிரியேஷன்ஸ்’ நாடகக் குழுவை கேபி தொடங்கியபோது, அதில் வெங்கி நிரந்தரமாக இடம்பிடித்தார்.

வெங்கியிலிருந்து ‘ஸ்ரீகாந்த்’ பிறந்தார்

கேபியின் தொடக்கக் கால நாடகங்களில் நாகேஷ்தான் நாயகன். அவரைச் சுற்றிப் பின்னப்படும் முக்கிய துணைக் கதாபாத்திரங்களில் ‘மேஜர்’ சுந்தர்ராஜன், வெங்கி, ‘நாயர்’ ராமன், மனோரமா, ஷோபா, எஸ்.என்.லட்சுமி ஆகியோர் கட்டாயம் இடம்பெற்றுவிடுவார்கள். கேபி, ‘மேஜர் சந்திரகாந்த்’ (தமிழ்) நாடகத்தை மேடையேற்றியபோது, அதில், சுந்தர்ராஜனின் நெடு நெடு உயரமும் கம்பீரத் தோற்றமும் கண்டு, அவரை மேஜர் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அவருக்கு ஸ்ரீகாந்த், ரஜினிகாந்த் என்று இரண்டு மகன்கள். அவர்களில் ஸ்ரீகாந்தின் கதாபாத்திரத்தை வெங்கிக்குக் கொடுத்திருந்தார். கிடைத்த பெரிய வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துகொண்டார் வெங்கி. சென்னையில் மட்டுமே 170 முறை மேடையேறிய அந்த நாடகத்தில் நடித்து, புகழ்பெற்றபோது, வெங்கி என்கிற பெயர் மறைந்து ஸ்ரீகாந்த் பிறந்தார்.

‘மேஜர் சந்திரகாந்த்’ நாடகத்தை பார்க்க வந்திருந்தார் பத்துக்கும் அதிகமான சூப்பர் ஹிட்களைக் கொடுத்திருந்த இயக்குநர் ஸ்ரீதர்.‘மேஜர் சந்திரகாந்த்’ நாடகத்தில் ஸ்ரீகாந்தின் நடிப்பை கூர்ந்து கவனித்த ஸ்ரீதர், தன்னுடைய உதவியாளர் என்.சி.சக்கரவர்த்தியை அனுப்பி ‘வெண்ணிற ஆடை’ படத்தின் ஆடிஷனுக்கு ஸ்ரீகாந்தை அழைத்துவரச் சொன்னார். ஜெயலலிதாவுடன் இணைத்து ‘டெஸ்ட் ஷூட்’ நடத்தி ஸ்ரீகாந்தை தேர்வு செய்தார். ‘வெண்ணிற ஆடை’ வெளியான பின்பு, தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நட்சத்திரம் ஆகிப்போனார் ஸ்ரீகாந்த். ஆனால், சினிமாவுக்காக நாடக மேடையை அவர் உதறிவிடவில்லை. படங்களில் பிஸியாக நடித்துகொண்டே, மேஜர் சுந்தர்ராஜனுடன் இணைந்து, தூயவன் எழுதிய ‘தீர்ப்பு’ என்கிற நாடகத்தில் நடித்தார். 100 காட்சிகளை கடந்து நடத்தப்பட்ட அந்த நாடகமும் படமானபோது அதில் நடிக்க ஸ்ரீகாந்திடம் கால்ஷீட் இல்லை. அவ்வளவு பிஸி! ஸ்ரீகாந்தைப் போலவே அழகான நடிகராக இருந்த சிவகுமார், ஸ்ரீகாந்தின் வேடத்தில் நடித்தார். கேபியின் ‘எதிர்நீச்சல்’ உள்ளிட்ட நாடகங்கள் படமானபோது, நாடகத்தில் நடித்த வேடங்களைத் திரையிலும் ஏற்றார் ஸ்ரீகாந்த். ஆனால்,அவருக்கு ‘ஸ்ரீகாந்த்’ என்கிற பெயரைப் பெற்றுக்கொடுத்த ‘மேஜர் சந்திரகாந்த்’ நாடகம் படமானபோது ஸ்ரீகாந்த்வேடத்தில் முத்துராமன் நடித்தார். ‘எதிர்நீச்சல்’ திரைப்படத்தின் தீவிரரசிகர்கள் மட்டுமல்ல; அதை நாடகமாகப் பார்த்து வியந்து, இன்று 80-களைக் கடந்து வாழும் கேபியின் நாடக ரசிகர்கள், ‘பட்டு மாமி' சௌகார் ஜானகியையும் ‘கிட்டு மாமா' ஸ்ரீகாந்தையும் மறக்கத் தயாராக இல்லை.

வாசிப்பும் நேசிப்பும்

ஸ்ரீகாந்த், தனக்கென தனித்த பாணி நடிப்பையும் வசன உச்சரிப்பையும் உருவாக்கி பின்பற்றி அதில் வெற்றிகண்டவர். ‘என்னுடைய நடிப்பும் வசன உச்சரிப்பும் ரசிகர்களால் கவனித்துப் பாராட்டப்பட்டதற்கு எனது வாசிப்பு முக்கிய காரணம். கதைகளை வாசிக்கும்போதே அதில் வரும் கதாபாத்திரங்களில் வாழ்ந்து பார்ப்பது போன்று உணர்ந்திருக்கிறேன். கதாநாயகனாக மட்டும்தான் நடிப்பேன் என்று என்றும் நான் கூறியதில்லை. வில்லன், குணசித்திரம் என்று எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்கும்போதுதான் ஒரு நடிகன் முழுமை பெறுகிறான்’ என்று கூறியிருக்கும் ஸ்ரீகாந்த், மாபெரும் எழுத்தாளுமை ஜெயகாந்தனுக்கு நெருங்கிய நண்பராக விளங்கியவர். அவருடைய சினிமா பயணத்தில் ‘தங்கப் பதக்கம்’ படத்தை வலிந்து குறிப்பிடுவது அப்படத்தின் வணிக வெற்றியால் உருவான தாக்கம். ஸ்ரீகாந்துடைய நடிப்பாளுமை உச்சத்தைத் தொட்ட படமென்றால் அது, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. ‘அக்னிப்பிரவேசம்’ என்கிற சிறுகதை உருவாக்கிய அதிர்வுகளைத் தொடர்ந்து, ஜெயகாந்தன் எழுதிய தொடர்கதையை பீம்சிங் திரைப்படமாகத் தயாரித்து இயக்கினார். இதற்காக முத்துராமனிடமும் ஜெயலலிதாவிடம் கால்ஷீட் பெற்றார். ஆனால், பிரபாகர் கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த்தும் கங்காவாக லட்சுமியும்தான் நடிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார் ஜெயகாந்தன். நண்பர் தன் மீது வைத்த நம்பிக்கையை 200 மடங்கு நிறைவேற்றியிருப்பார் ஸ்ரீகாந்த். அந்தப் படத்தில் நடித்ததற்காக லட்சுமிக்கு ஊர்வசி விருது கிடைத்தது. தனது முந்தைய கதாபாத்திரங்களின் சாயலோ பாதிப்போ இல்லாமல், பிரபாகராக தன்னை உருமாற்றிக் காட்டிய ஸ்ரீகாந்த் எனும் நடிப்பாளுமையை நாம் கொண்டாடத் தவறிவிட்டோம்.

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

படங்கள் உதவி: ஞானம்

ஸ்ரீகாந்த்முழுமை பெற்ற கலைஞன்Actor Srikanthமேஜர் சந்திரகாந்த்தோப்புத் தெரு அறைவெண்ணிற ஆடை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x