சேதி தெரியுமா? - பிரஸல்ஸ் குண்டுவெடிப்பு

சேதி தெரியுமா? - பிரஸல்ஸ் குண்டுவெடிப்பு
Updated on
2 min read

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் நகர விமான நிலையத்திலும் மெட்ரோ ரயில் நிலையத்திலும் மார்ச் 22-ல் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பலியானார்கள். இந்த விபத்தில் காயமடைந்த 130-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. கடந்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் பலியாயினர். இதில் தொடர்புடையதாகக் கருதப்படும் சலே அப்தெஸ்லாம் பிரஸல்ஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உசேன் போல்ட் விரைவில் ஓய்வு

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக உலகப் புகழ் பெற்ற ஓட்டப் பந்தய வீரர் உசேன் போல்ட் மார்ச் 22 அன்று தெரிவித்தார். இதுவரை 6 முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற உசேன் போல்ட் ஜமைக்காவைச் சேர்ந்தவர். 2020-ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறுவேன் என முன்பு கூறியிருந்தார். தற்போது ரியோ ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வை உறுதி செய்துள்ளார். “இன்னும் 4 ஆண்டுகளுக்கு இதே உத்வேகத்துடன் போட்டியில் பங்கேற்பது சாத்தியமற்றது என்பதால் ஓய்வு பெறுகிறேன்” எனத் தெரிவித்தார்.

கியூபாவில் ஒபாமா

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 3 நாட்கள் அரசு முறை பயணமாக கியூபா தலைநகர் ஹவானாவுக்கு மார்ச் 21 அன்று சென்றார். 88 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் கியூபாவுக்குச் செல்வது இதுவே முதல் முறை. கியூபாவில் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்த பிடல் காஸ்ட்ரோவுக்கும் அமெரிக்காவுக்கும் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பகை நீடித்தது. 2008-ல் பிடல் காஸ்ட்ரோ அதிபர் பதவியில் இருந்து விலகிய பிறகு, அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே நட்பு மலர்ந்தது. கியூபா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்கியது. இந்நிலையில் இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கியூபா சென்றார். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளது.

யுனெஸ்கோ பட்டியலில் அகஸ்திய மலை

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள அகஸ்திய மலை, யுனெஸ்கோவின் உயிர்க்கோளக் காப்பகப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் இரண்டு நாள் மாநாடு பெரு தலைநகர் லிமாவில் மார்ச் 20 அன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் யுனெஸ்கோ பட்டியலில் 120 நாடுகளில் உள்ள உயிர்க்கோளக் காப்பகங்களின் எண்ணிக்கையை 669 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதில் இந்தியாவின் அகஸ்திய மலையும் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்கோடியில் அகஸ்திய மலை அமைந்துள்ளது. வெப்ப மண்டலக் காட்டுப் பகுதியான இங்கு 2,254 வகையான தாவரங்கள், சுமார் 400 ஓரிட வாழ்விகள் உள்ளன. அகஸ்திய மலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், செந்துருனி, பெப்பாரா, நெய்யாறு ஆகிய சரணாலயங்கள் உள்ளன. கடல் மட்டத்திலிருந்து 1,868 மீட்டர் உயரமுள்ள இந்த மலையில் சிகரமும் உள்ளது.

எல்லோருக்கும் வீடு - மத்திய அரசு

நாடு முழுவதும் வீடில்லாத அல்லது தற்காலிகக் கூடாரங்களில் வசிக்கும் 2.95 கோடி பேருக்கு, ‘அனைவருக்கும் வீடு, திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தர மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மார்ச் 24 அன்று முடிவு செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், “2022-ம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, சமவெளி பகுதியில் வசிப்பவர்கள் வீடு கட்டிக்கொள்ள ரூ.1.2 லட்சமும், மலைப் பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1.3 லட்சமும் அரசு நிதியுதவி வழங்கும். இந்தத் திட்டம் 2 கட்டங்களாக நிறைவேற்றப்படும். இதன்படி முதல் மூன்று ஆண்டுகளில் ஒரு கோடி வீடுகள் கட்டித் தரப்படும்” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in