Last Updated : 22 Mar, 2016 11:23 AM

 

Published : 22 Mar 2016 11:23 AM
Last Updated : 22 Mar 2016 11:23 AM

இப்படியும் பார்க்கலாம்: தைரியமாகப் பயப்படுங்கள்!

பேய்ப் படங்கள் என்றாலே நிச்சயமாகப் படம் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்தான்! நிச்சயம் லாபம் அள்ளலாம் என்பதால் சமீபகாலமாக நகைச்சுவைப் பேய்கள், பழி வாங்கும் பேய்கள், பாசப் பிசாசுகள்,காதல் மோகினிகள் எக்கசக்கமான பேய்கள் திரை உலகில் உலாவுகின்றன. இப்படங்கள் வெற்றி அடைய மூலப்பொருள் மனிதனின் பயம்தான்.

பயத்தைக் கண்டால் பயமா?

பேய்கள் கிளப்பும் பயம் ஒரு வகை. இன்னொன்று, தெனாலி திரைப்படக் கமலுக்கு இருப்பதுபோன்ற, கொஞ்சம் திறந்த கதவும் பயம், முழுவதுமாய் மூடிய கதவும் பயம், சபிக்க பயம், சுகிக்க பயம் என விதவிதமான பயங்கள். இதை ஃபோபியா என உளவியல் அடிப்படையில் சொன்னாலும், எல்லா மனிதர்களிடமும் நுட்பமாகவும், அற்பமாகவும் ஒன்றோ, ஒன்றுக்கு மேற்பட்டோ பயங்களோ இருக்கத்தான் செய்கின்றன.

அஞ்சுவது இழிவு என்று சொல்லியே வளர்க்கப்பட்டிருக்கிறோம். பயம் கொள்ளும்போது உடலில் மோசமான ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன; ரத்த நாளங்கள் சுருங்கி விரிகின்றன; கண் பாwவை விரிவாகிப் பார்வை பாதிக்கப்படுகிறது எனப் பயமுறுத்துகிறது மருத்துவம்.

“வீரனுக்கு ஒருமுறைதான் சாவு. கோழையோ தன் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியைத் தானே தினமும் ஒட்டிக்கொள்கிறான்” எனச் சொல்லப்படுகிறது. வாழ்வில் வெற்றி பெற வீரம் அவசியமானது. அதற்குத் தடையாக இருப்பது பயம் என்கிறார்கள் நிபுணர்கள். ஆக, பயம் கொள்வது இழுக்கு; கோழைத்தனம்; பயம் கொள்ளாதவர்களே சிறந்தவர்கள் எனத் தொடர்ந்து சொல்லப்படுகிறது.

பயம் இயற்கைதான்

இவை கேட்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால் ரத்தமும், சதையுமாக இருக்கும் மனிதனை “உன் உடலில் இரத்தம் ஓடுவது அசிங்கம்! ஹார்மோன்கள் இருப்பது அவமானம்!”என்று யாராவது சொன்னால் அவரை ஒரு முட்டாள் பார்வை பார்த்து “அதெல்லாம் இயற்கையானது” என்பீர்கள் இல்லையா!

அதைப் போலத்தான் பயமும் அனைவரிடமும் இயற்கையாகவே இருக்கிறது!

உதாரணமாக, 90% குழந்தைகள் இருட்டுக்கும், தனியே செல்லவும் பயப்படுகிறார்கள். இருட்டில் இடறி விழுவோம், பேய்கள் பிடித்துக்கொள்ளும், பூச்சாண்டியால் கடத்தப்படுவோம் போன்ற அச்சுறுத்தல்கள் சமூகத்தால் நம்மிடம் தொடர்ந்து திணிக்கப்படுபவை. ஆனால் சமூகத் தாக்கமோ, அறிவு முதிர்ச்சியோ ஏற்படாத நிலையிலும் ஒரு குழந்தைக்குப் பயம் ஏற்படுகிறதே! அப்படியானால் அந்த உணர்வை இயற்கை என்றுதானே கருத வேண்டியுள்ளது!

செல்லப் பிராணிகள் முதல் காட்டு விலங்குகள்வரை பயப்படாத ஜீவன் உண்டா? கிளி, குருவி, முதல் யானை வரை கிறீச்சிட்டு அலறுவதைக் கவனித்திருக்கிறீர்களா? தாவரங்களைக்கூடத் தாக்கும் நோக்கத்துடன் அணுகினால், நடுங்குவதாகத் தாவரவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தீர்வுக்கான வழி

கி.மு.நான்காம் நூற்றாண்டிலேயே இந்திர விழா கவியரங்கங்களில் கலந்து கொண்ட தொல்காப்பியர் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை இப்படி மனிதரிடம் இயல்பாக ஏற்படும் எட்டு வகை மெய்ப்பாடுகளைப் பட்டியலிடுகிறார். இதில் ‘அச்சம்’ கேவலமானது என்று அவர் ஒளித்து வைக்கவில்லை. இது இயற்கையாகவே ஏற்படும் உணர்ச்சி என்பதால், இயற்கை ஏதேனும் ஒரு காரணத்தோடுதான் அவற்றை ஏற்படுத்தியிருக்க முடியும். பயத்தின்போது, இதயம் கூடுதல் வேலை செய்து களைப்படைகிறது. ஹார்மோன்களும் படபடக்கின்றன.

அப்படி அட்ரீனலின் சுரப்பிகள் வேலை செய்தால்தான் பயத்திற்குக் காரணமான பிரச்னையிலிருந்து தப்பிப்பது எப்படி என்று யோசிப்பீர்கள். அது தாக்குவதற்காக இருக்கலாம், பதுங்குவதற்காக இருக்கலாம், ஓடுவதற்காக இருக்கலாம், யோசிப்பதற்காக இருக்கலாம். தீர்வு ஏற்பட நீங்கள் கொஞ்சம் பயந்துதான் ஆக வேண்டும்! பறக்கிற விமானத்திலிருந்து கீழே விழுந்தால் என்ன ஆகும் என்ற பயம்தானே பாராசூட்டைக் கண்டுபிடித்தது?

அவமானம் அல்ல

எல்லா உயிர்களையும் வீரம் மட்டும் வாழ வைக்கவில்லை. பயமும்தான் வாழ வைக்கிறது. வீரம் பயத்திலிருந்துதான் துவங்க முடியும். பயத்திலிருந்து விடுபடும் நேரம், பயங்களின் எண்ணிக்கை இவை மனிதருக்கு மனிதர் வேறுபடலாமே, தவிரப் பயமற்றவர் என்ற இனமே பூமியில் இல்லை. தன்னுடைய பயத்தை அறிந்து சமாளிப்பவன் வீரன் எனப்படுகிறான். தன்னிடம் வீரமும் இருக்கிறது என்பதை அறியாதவன் கோழை எனப்படுகிறான்.

தாகம், பசி, கோபம் போலப் பயமும் ஒரு இயற்கையான உணர்வுதான் எனும்போது அதை அவமானமாகவோ, இழிவாகவோ நினைத்து வருத்திக்கொள்ள வேண்டியதில்லை. “பயமற்ற நிலை” என்பது அலங்காரமான வார்த்தை. எனவே பயம் என்னும் ஒப்பனையற்ற, இயல்பான உணர்வை நினைத்து நீங்கள் அவமானப்பட வேண்டியதில்லை.

உங்களுக்குப் பயம் ஏற்படுகிறது என்றால் பாசம், அன்பு, கருத்து, காசு, கற்பனை இப்படி ஏதோ ஒன்றை இறுக்கப் பற்றிக்கொண்டிருக்கிறீர்கள் எனப் பொருள். அந்த இறுக்கத்தைப் பொறுத்துப் பயம் கூடும். அதை இழக்கத் தயாரானால், அதன் தளர்வைப் பொறுத்து உங்களின் பயம் குறையும்.

பயம் தேடும் மனம்

சரி, இந்தப் பயத்தையும் மனிதன் அனுபவிக்க விரும்புகிறான் என்றால் ஏற்பீர்களா? எதிர்காலப் பயம், இனம் புரியாத பயம் போன்ற பயங்களை மீறி மனிதன் இன்னும் பய உணர்ச்சியை ஆழமாக அனுபவிக்க விரும்புகிறான். அதனால்தான் திகில் காட்சிகளும், தூக்கிவாரிப்போடும் சப்தமும், நிசப்தமும் பயமுறுத்தும் என்று தெரிந்திருந்தும் காசு கொடுத்து மனிதன் அதைத் திரையில் பார்த்துப் பயந்துவிட்டு வருகிறான். இன்பத்தை, நகைச்சுவையை, சோகத்தை அனுபவிப்பது போலப் பயத்தையும் மனிதன் அனுபவிக்கும் முயற்சிதான் இது!

இதுதவிர, மனிதன் தனக்குப் பிடித்த பயத்தைத் தேர்ந்தெடுத்து, அதிலேயே உலாவ விரும்புகிறான். வயதிற்கும், சூழலுக்கும் தகுந்தபடி பயங்களும் மாறிக்கொண்டே இருக்கும் என்ற வாழ்வியல் உண்மையையும் புரிந்து தன்னைப் பயம் தொடர்பான குற்ற உணர்வில் வைக்காதவன் பயங்களை இயல்பாகக் கடந்துபோகிறான். பயங்கள் குறித்த அணுகுமுறைதான் தோல்விக்கு வழி வகுக்கிறதே தவிர, தோல்விக்கும், அவமானத்திற்கும் பயம் ஒரு காரணமே அல்ல.

பயத்தை நேர்மறையாக எடுத்துக்கொண்டவரின் பயங்கள் அவருக்கு நன்மையே செய்கின்றன.

தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x