வேலை வேண்டுமா? - உதவி கமாண்டன்ட் ஆகலாம்!

வேலை வேண்டுமா? - உதவி கமாண்டன்ட் ஆகலாம்!
Updated on
2 min read

இளைஞர்களில் பலருக்கும் காவல்துறையில் சேர வேண்டும் என்பது ஓர் லட்சியக் கனவாக இருக்கிறது. மாநிலக் காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி போன்ற பணிகளிலும் அகில இந்திய அளவில் உயர் பணியாக கருதப்படும் ஐபிஎஸ் பணியிலும் சேர ஆசைப்படுபவர்கள் இருப்பீர்கள். இவை மட்டுமின்றி மத்திய போலீஸ் படைகளில் சப்-இன்ஸ்பெக்டர், உதவி கமாண்டன்ட் பணிகளும் இளைஞர்களை பெரிதும் ஈர்க்கின்றன.

மத்திய தொழில் பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, இந்திய-திபெத்திய போலீஸ் படை உள்ளிட்ட மத்திய போலீஸ் படைகளில் உதவி கமாண்டன்ட் பதவியானது ஐபிஎஸ் பணிக்கு இணையாக கருதப்படுகிறது. உதவி கமாண்டன்ட் பணி, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மூலமாக நேரடியாக நிரப்பப்படுகிறது.

பெண்களுக்கும் வாய்ப்பு

அந்த வகையில், இந்த ஆண்டு எல்லைப் பாதுகாப்புப் படை, ரிசர்வ் போலீஸ் படை, இந்திய திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை, எஸ்எஸ்பி படை ஆகியவற்றில் 270 உதவி கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. எழுத்துத்தேர்வு, உடல்திறன் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.

உதவி கமாண்டன்ட் பணிக்கு ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது 20 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படித் தயாராகலாம்?

எழுத்துத்தேர்வைப் பொருத்தமட்டில், 2 தாள்கள் இருக்கும். முதல் தாளில் (250 மதிப்பெண்) பொது விழிப்புத்திறன், நுண்ணறிவு பகுதியில் இருந்து

அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் இடம்பெறும். 2-வது தாள் (200 மதிப்பெண்) விரிவாக விடையளிக்கும் வகையில் அமைந்திருக்கும். இதில், பொது அறிவு, கட்டுரை எழுதுதல், காம்ப்ரிஹென்சன் ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக உடல்திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதில் 100 மீட்டர் ஓட்டம், 800 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் இருக்கும். உடல்திறன் தேர்வில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் இறுதியாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். இதற்கு 150 மதிப்பெண்.

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு-இவற்றில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். உதவி கமாண்டன்ட் பணிக்கு என்சிசி-யி்ல் பி அல்லது சி சான்றிதழ் வைத்திருப்பது விரும்பத்தக்க தகுதியாக கருதப்படும். அவர்களுக்கு நேர்முகத்தேர்வின்போது உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும். எழுத்துத்தேர்வு தமிழகத்தில் சென்னை, மதுரை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஜூன் மாதம் 26-ம் தேதி நடத்தப்படவிருக்கிறது. இதற்கு ஆன்லைனில் (>www.upsconline.nic.in) ஏப்ரல் மாதம் 8-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை, தேர்வுமுறை, பாடத்திட்டம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை யுபிஎஸ்சி இணையதளத்தில் (>www.upsc.gov.in) விளக்கமாகத் தெரி்ந்துகொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in