Published : 18 Oct 2021 09:29 AM
Last Updated : 18 Oct 2021 09:29 AM

பொருளியல் ஆய்வில் புத்தொளி

பேராசிரியர் ரு. பாலசுப்ரமணியன்
rubalu@gmail.com

"ஆறு பொருளியல் அறிஞர்கள் இருந்தால் அவர்களிடையே ஏழு கருத்துகள் நிலவும்", "ஒவ்வொரு பொருளியல் அறிஞருக்கும் அவருக்குச் சமமான, நேரெதிரான பொருளியல் அறிஞர் ஒருவர் இருப்பார். அவர்கள் இருவருமே தவறாக இருப்பர்"... இதுபோல் பொருளியல் அறிஞர்களைக் கேலி செய்யும் நகைச்சுவைகள் பல உண்டு. இப்படியான கருத்துகள் உருவாவதற்கானக் காரணம், பொருளியல் அறிஞர்களின் ஆய்வு முறைகள், அவர்களது கோட்பாட்டு அணுகுமுறைகள், ஆய்வு பற்றிய அனுமானங்கள் ஆகியவற்றில் காணப்படும் வேறுபாடுகள்தான். எப்படியாயினும், சமகால வாழ்வில் பொருளியல் அறிஞர்களின் கருத்துகள் மிக அவசியமானவையாக உள்ளன. அவர்களின் சிந்தனைகள் உலகின் பொருளாதாரப் போக்கையே மாற்றி அமைக்கும் அளவுக்கு வல்லமை கொண்டவை. ஒவ்வொரு ஆண்டும் பொருளியல் தொடர்பில் வழங்கப்படும் நோபல் பரிசு அதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன.

பொருளியலுக்கான நோபல் பரிசு, இவ்வாண்டு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் கார்ட் (கனடா), மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி மையத்தை (எம்ஐடி) சேர்ந்த ஜோஷ்வா ஆங்கிரிஸ்ட் (இஸ்ரேல் - அமெரிக்கா), ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குய்டோ இம்பென்ஸ் (நெதர்லாந்து) ஆகிய மூவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. இம்மூவரும் பொருளியல் ஆய்வு முறையில் புதிய சாத்தியத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்களின் பங்களிப்பைப் பார்ப்பதற்கு முன்னால், அறிவியல் ஆய்வுமுறையில் உள்ள அடிப்படையான விஷயங்களை சற்று விரிவாகப் பார்த்துவிடலாம்.

அறிவியலும் புள்ளிவிவரங்களும்

காரணி மற்றும் விளைவுக்கிடையிலான உறவை (Cause and Effect relationship) விளக்குவதுன் மூலம் புதிய கோட்பாடுகளை உருவாக்குவது, ஏற்கெனவே நிலவும் அறிவியல் கோட்பாடுகளை நிறுவுவது அல்லது நிராகரிப்பது ஆகியவை ஆராய்ச்சிகளின் முக்கிய நோக்கமாகும். இயற்பியலிலும் வேதியியலிலும் "காரணி - விளைவு" உறவுகளைத் துல்லியமாகக் கண்டறிந்து விளக்கிவிட முடியும். ஆனால், ஏனைய துறைகளில் – குறிப்பாக உயிரியல், பொருளியல் போன்ற துறைகளில் – ‘காரணி – விளைவு’ உறவைக் கண்டறிவது அவ்வளவு எளிதானது அல்ல.

இத்துறைகளில் ஆய்வாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத சில கூறுகள், நாம் அறிய விரும்பும் "காரணி - விளைவு"க்கிடையிலான உறவைப் பாதிக்கக்கூடும். இப்படி சிக்கலான அமைப்பில் காரணி – விளைவு இடையிலான உறவை இயல்பான பரிசோதனைகள் வழியே கண்டறிந்ததே டேவிட் கார்ட், ஜோஷ்வா ஆங்கிரிஸ்ட், குய்டோ இம்பென்ஸ் ஆகிய மூவரின் முக்கியப் பங்களிப்பாக அடையாளப்படுத்தப்படுகிறது. இயல்பான பரிசோதனைகள் என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றால், முதலில் நாம் கட்டுப்படுத்தப்பட்ட பரிசோதனைகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட பரிசோதனைகள்

உடற்பயிற்சியால் உடல் எடை குறைகிறதா, எவ்வளவு குறைகிறது என்பதை அறிவதற்கான பரிசோதனை இது. உயரம், வயது, பாலினம், உணவுப் பழக்கம் போன்றவற்றில் சமமாக உள்ள இரு நபர்களை எடுத்துக்கொண்டு, ஒருவரை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் உடற்பயிற்சி (cause) செய்யச் சொல்ல வேண்டும். இன்னொருவர் எந்தப் பயிற்சியும் செய்யக்கூடாது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் இருவரின் எடையிலுமுள்ள வேறுபாடுதான் பயிற்சியின் விளைவு (effect) எனப்படும். இங்கே குறிப்பிட்ட அளவிலான உடற்பயிற்சிதான் சோதனைப் பொருள்.

இரு நபர்களும் சோதனைப் பொருளைத் (உடற்பயிற்சி) தவிர மற்ற அனைத்து விதங்களிலும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே சோதனைக்குப் பின் எடையிலுள்ள வேறுபாடு உடற்பயிற்சியால் மட்டுமே ஏற்பட்டதெனக் கூற முடியும். ஆனால், இருவரை வைத்து செய்யப்பட்ட ஆய்வை அடிப்படையாகக்கொண்டு உடற்பயிற்சியின் விளைவை பொதுமைப்படுத்திவிட முடியாது. அதற்கு பரந்த தளத்தில் இந்த ஆய்வை நிகழ்த்தியாக வேண்டும். அதற்கு மாதிரி ஆய்வு (sample study) நமக்கு உதவும். அனைத்து விதங்களிலும் சமமான இரண்டு நபர்களை தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, அப்பகுதியின் மொத்த மக்கள் தொகையிலிருந்து இருநூறு பேரைக் குலுக்கல் முறை (lotteryஅல்லது random) மூலம் தெரிவு செய்ய வேண்டும்.

பிறகு, அந்த இருநூறு பேரிலிருந்து மீண்டும் குலுக்கல் முறை மூலம் தெரிவு செய்யப்பட்ட நூறு பேருக்கு சோதனை (உடற்பயிற்சி) அளிக்க வேண்டும். இவர்கள் சோதனைக் குழு (treatment group) என்றழைக்கப்படுவர். மீதமுள்ள நூறு பேருக்கு சோதனை (உடற்பயிற்சி) அளிக்கப்படக் கூடாது. இவர்கள் கட்டுப்பாட்டுக் குழு (control) எனப்படுவர். ஒவ்வொரு குழுவிலும் உள்ளவர்கள் ஒரே மாதிரியாக இருக்கத் தேவையுமில்லை. ஏனென்றால் இரு குழுக்களிலும் உள்ளவர்கள் புள்ளியியல் ரீதியாக ஒரே மாதிரியாக (statistical similarity) இருப்பர். அதுவே போதுமானது.

அதாவது, ஒரு குழுவின் சராசரிப் பண்புகள் பிற குழுவின் சராசரிப் பண்புகளுடன் (உயரம், வயது, பாலினம், உணவுப் பழக்கம்) சேர்ந்து போவதாக இருந்தால் போதும். இப்போது, குறிப்பிட்ட காலத்திற்குப் பின் சோதனைக் குழுவினரின் சராசரி எடையையும், கட்டுப்பாட்டுக் குழுவினரின் சராசரி எடையையும் ஒப்பிட்டால் அதிலுள்ள வேறுபாட்டை உடற்பயிற்சியினால் ஏற்பட்ட வேறுபாடு எனலாம். அது சராசரிச் சோதனை விளைவு என்றழைக்கப்படும். இதுதான் பரிசோதனையிலிருந்து நாம் எதிர்பார்க்கும் முடிவாகும். மொத்த மக்கள் தொகையிலிருந்து இருநூறு பேரைக் குலுக்கல் முறை மூலம் தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த ஆய்வின் முடிவுகளை மொத்த மக்கள் தொகைக்கும் பொதுமைப்படுத்தலாம்.

இயல்பான பரிசோதனைகள் (Natural Experiments)

இயற்கை அறிவியல் போன்ற அறிவுத்துறைகளில் மிகப் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படும் மேற்கண்ட பரிசோதனை முறையைப் பொருளியல் போன்ற சமூக அறிவியலில் பின்பற்றுவது கடினமாகும். ஏனெனில், ஒவ்வொரு மனிதரும் பிறரிடமிருந்து எண்ணற்ற விதங்களில் வேறுபடுகிறார். எனவே, பொருளியலில் பரிசோதிக்கப்படும் நபரும் கட்டுப்படுத்தப்பட்ட நபரும் அனைத்து விதங்களிலும் சமமாக இருக்கும்படியான கட்டுப்படுத்தப்பட்ட பரிசோதனைகளை நிகழ்த்துவது மிகுந்த பொருட்செலவையும் நீண்ட காலத்தையும் எடுத்துக் கொள்ளும். இம்மாதிரி சமயங்களில் அரசுக் கொள்கைகளில் நிகழும் மாற்றங்கள் அல்லது புதிய தொழில் நுட்பங்களின் செயலாக்கம் ஆகியன ஒரு இயல்பான பரிசோதனையை (natural experiment) உருவாக்கித் தருகின்றன.

இத்தகைய பரிசோதனை முறையைப் பயன்படுத்தி உழைப்புச் சந்தையின் செயல்பாடு பற்றிப் பொருளியலில் நிலவும் இரு முக்கியமான கோட்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கினார் டேவிட் கார்ட். குறைந்தபட்சக் கூலி நிர்ணயம் வேலையின்மையை அதிகரிக்கும் என்கிற கோட்பாட்டையும் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்தால் உள்நாட்டவரின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன என்ற கோட்பாட்டையும் தவறு என தனது ஆய்வின் வழியாக அவர் நிரூபித்திருக்கிறார்.

குறைந்த பட்சக் கூலிச் சட்டம் (cause) அமல்படுத்தப்பட்ட ஒரு மாநிலத்தை அச்சட்டம் அமலில் இல்லாத பக்கத்து மாநிலத்துடன் ஒப்பிட்டு, குறைந்தபட்சக் கூலிச் சட்டம் வேலையின்மையை (effect) அதிகரிக்கிறது என்கிற கோட்பாட்டை தவறு என்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளார். அதேபோல கியூபாவிலிருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவின் மியாமி நகரில் குடியேறிய பெரும் எண்ணிக்கையிலான கியூபர்களினால் மியாமி நகரிலுள்ள அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புப் பறிபோனதா, இல்லையா என்பதை ஆராய்ந்து குடியேற்றத்தால் உள்நாட்டினரின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் கண்டறிந்துள்ளார்.

ஆனால், இத்தகைய இயல்பான பரிசோதனைகளிலும் பெரும் சிக்கல்கள் உள்ளன. யார் யார் சோதனைக் குழுவில் (treatment) உள்ளனர், யாரெல்லாம் கட்டுப்பாட்டுக் குழுவிலுள்ளனர் (control) என்பதை ஆராய்ச்சியாளர் குலுக்கல் முறையில் தீர்மானிப்பதில்லை. அதை அவரவர்களே தீர்மானித்துக் கொள்கின்றனர். அதிக ஆண்டுகள் கல்வி பெறுபவர்களின் சராசரி வருவாயைக் குறைந்த காலம் கல்வி பெறுபவர்களின் சராசரி வருவாயுடன் ஒப்பிட்டு அவர்களுக்கிடையிலான ஊதிய வேறுபாடு கல்வி கற்ற காலத்தின் அளவினால் நிகழ்ந்தது எனக் கூற முடியுமா? சிக்கலானது. ஏனெனில் இவ்விரு குழுவினரும் வெவ்வேறு பகுதியிலிருந்து வருவதால் அவர்கள் சமமானவர்களல்லர். அதிக காலம் கற்பவர்கள் பணக்காரப் பிள்ளைகளாகவும் அறிவுக்கூர்மை மிக்கவர்களாகவும் இருக்கலாம்; மாறாக, குறைந்த காலம் கற்பவர்கள் அறிவுக்கூர்மை குறைந்தவர்களாகவும், ஏழைப்பிள்ளைகளாவும் இருந்தால் ஊதிய வேறுபாடு கல்விக் காலத்தை மட்டும் சார்ந்தது என்று துல்லியமாக அறிய முடியாது.

அப்படியாயின், இத்தகைய ஒப்பீட்டு ஆய்வே சாத்தியமில்லையா? சாத்தியம்தான் என்று நிரூபித்துள்ளனர் ஜோஷ்வா ஆங்கிரிஸ்ட் மற்றும் குய்டோ இம்பென்ஸ். கற்கும் கால அளவு,படிக்கும் கல்லூரியின் தரம் ஆகியன ஊதியத்தை எந்த அளவு அதிகரிக்கிறது என்பதைத் துல்லியமாகக் கணிப்பதற்கான வழிமுறையை அவர்கள் கண்டறிந்துள்ளனர். ஓராண்டு கூடுதலாகக் கல்வி கற்பதால் ஊதியம் ஒன்பது சதவீதம் அதிகரிக்கிறது என்று அவர்கள் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர். அவ்வகையில் இவ்வாண்டு பொருளியலுக்கான நோபல் விருதை வென்றிருக்கும் மூவரும் சமகாலப் பிரச்சினையை அணுகுவது தொடர்பாகவும், பொருளியல் சார்ந்த ஆய்வு முறையிலும் புதிய சாத்தியத்தைக் காட்டியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x