Published : 17 Oct 2021 03:07 AM
Last Updated : 17 Oct 2021 03:07 AM

தேவதாசிமுறை ஒழிப்பின் முதல் குரல்

ஜான்சி பால்ராஜ்

தேவதாசி முறை என்பது பெண்களைத் தெய்வத் தொண்டுக்கு அர்ப்பணிக்கும் சமயம் சார்ந்த வழக்கம். இதன்படி எட்டு வயது முதல் 11 வயதுடைய பெண் குழந்தைகள் கோவில்களில் ‘பொட்டுக்கட்டுதல்’ என்னும் சடங்கின் மூலம் தெய்வத்துக்கு மனைவியாக்கப்பட்டு அக்கோவில்களிலேயே விடப்படுவார்கள். இப்பெண்கள் தேவதாசியர் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் இறக்கும் வரைக்கும் தீர்க்க சுமங்கலிகளாகவும் சமூகத்தில் மிகுந்த மரியாதைக்குரியவர்களாகவும் வாழ்ந்தனர்.

காலப்போக்கில் கோவில் நிர்வாகம், மன்னர்களின் நேரடிப் பார்வையிலிருந்து விடுபட்டு, ஊர்ப் பெரியவர்களின் பொறுப்பில் வந்தது. இதனால், தேவதாசியர் அவர்களது அனைத்துத் தேவைகளுக்கும் அப்பெரிய மனிதர்களையே எதிர்நோக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இத்தகைய சூழல்களால் தேவதாசியர் மெல்ல மெல்லத் தங்கள் தனித்தன்மையை இழந்து மக்களால் பொது மகளிராகவே பார்க்கப்படும் நிலையை அடைந்தனர். நாளடைவில் ‘தேவரடியாள்’ என்று அழைக்கப்பட்ட அவர்கள், பின்னர் ‘தாசி’ என்ற வசைச் சொல்லுக்கும் ஆளாகினர்.

சமயப் பணியிலிருந்து பொதுப் பணிக்கு

இந்நிலையில் கிறித்தவ சமயப் பணிக்கென்று இந்தியா வந்த ஏமி கார்மைக்கேல், தேவதாசியர்களின் நிலைமை மிகவும் இழிவானதாக இருப்பதை அறிந்தார். 1901இல் திருநெல்வேலி மாவட்டம் பெருங்குளம் என்கிற ஊரிலுள்ள ஒரு கோவிலில் இருந்து தப்பிவந்த தேவதாசியான லட்சுமி (பரீனா) மூலம் தேவதாசியரின் உண்மையான முகத்தை அறிந்து அதிர்ந்தார். அந்தப் பெண் குழந்தையே தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்பது அவரது லட்சியமாக உருப்பெறக் காரணமானாள்.

தனது பேச்சாலும் எழுத்தாலும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தாம் மீட்டெடுத்த தேவதாசிகளுக்கென்று காப்பகம் ஒன்றை ஏற்படுத்தி அவர் களோடு வாழ்ந்தார். அந்தக் காப்பகம் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் உள்ள டோனாவூர் என்கிற ஊரில் இன்றுவரை அவரது சீரியப் பணிகளுக்கு சாட்சியாக உள்ளது.

தேவதாசியரால் பயனடைந்தோர் ஏமி கார்மைக்கேலைச் சமயத் துரோகம் இழைப்பதாகவும் கலாச்சார சீரழிவுக்கு வித்திடுவதாகவும் குற்றம்சாட்டினர். அவர் மீது பொய்யான வழக்குகளும் போடப்பட்டன. அவற்றையெல்லாம் தனது துணிச்சலாலும் நேர்மை குலையாத உண்மைத் தன்மையாலும் வெற்றிகொண்டார்.

பல நூற்றாண்டுகளாக இருந்துவந்த தேவதாசி முறையை எதிர்த்துப் போராடிய அயல்நாட்டுப் பெண்ணான ஏமி கார்மைக்கேலுக்குச் சுமார் கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகே டாக்டர் முத்துலட்சுமி, மூவலூர் ராமாமிர்தம் ஆகிய இந்தியப் பெண்களின் குரல்களும் இணைந்து ஒலித்தன.

சமூகத்தைச் சீரழித்தும் சமூகத்தால் சீரழிக்கப்பட்டும்வந்த தேவதாசிகள் என்கிற ஒரு சமூக அமைப்பையே வேரறுக்க முழுமுதற் காரணமாக அமைந்த ஏமி கார்மைக்கேலின் சமூகப் பணியைப் பாராட்டி அன்றைய ஆங்கிலேய அரசு அவரைக் கௌரவித்து, பதக்கம் அளித்தது. தாம் மீட்டெடுத்த, கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் தேவதாசியராக அர்ப்பணிக்கப்பட்டு மீட்கப்பட்ட பெண் குழந்தைகளை வாழ்வளிக்கத் தனது முழு வாழ்வையும் ஏமி அர்ப்பணித்தார். தனக்கென்று குடும்ப வாழ்வை ஏற்படுத்திக்கொள்ளாத அபூர்வப் பெண்ணாகத் திகழ்ந்தார் ஏமி கார்மைக்கேல்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x