Published : 16 Oct 2021 06:11 am

Updated : 16 Oct 2021 09:50 am

 

Published : 16 Oct 2021 06:11 AM
Last Updated : 16 Oct 2021 09:50 AM

பாறுக் கழுகைக் கண்டா வரச்சொல்லுங்க!

eagle

உயிரினங்கள் அழிவது இயற்கை யான நிகழ்வு என்று விட்டுவிட முடியாது. மனிதர்களின் அழிச்சாட்டியத்தால் உயிரினங்களின் அழிவு1,000 மடங்கு வேகத்தில் கைமீறி போய்க்கொண்டிருக்கிறது என்பது முகத்தில் அறையும் உண்மை. ‘அழிவுக்கு ஆட் பட்டிருக்கும் உயிரினங்களின் தகவல் நூல்’ உலகெங்கும் 16,306 வகை உயிரினங்கள் மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்வா சாவா என்று போராடிக்கொண்டு இருக்கின்றன என்கிறது. இப்பட்டியல் நாள்தோறும் நீண்டுகொண்டே செல்கிறது.

இந்தப் பட்டியலில் 40 ஆண்டுகளுக்கு முன்புவரை பட்டிதொட்டியெங்கும் காணக்கூடிய பறவையாய் இருந்த பாறுக் கழுகுகளும் இடம்பெற்றுவிட்டன. பாறு சிறப்பினத்தில் நான்குவகைகள் (வெண்முதுகுப் பாறு, கருங்கழுத்துப் பாறு, செந்தலைப் பாறு, வெண்கால் பாறு ஆகியன) அற்றுப்போகும் நிலையிலுள்ளதாக ஐயுசிஎன் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஓர் உயிரினம் இல்லாமல் போனால் ஏற்படும் பாதிப்பு கணக்கிலடங்காதது. ஆனால், அதை உடனே நம்மால் உணர முடியாது, நம் கவனத்திற்கும் வராது. காரணம், இவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் நமது அடிப்படைத் தேவைக்கோ பகட்டு வாழ்வுக்கோ நேரடியாகப் பெரிய பாதிப்பு ஏதும் உடனடியாக ஏற்படப்போவதில்லை. அதனால், நாம் கவலையின்றி வாழ்ந்துகொண்டிருக்கிறோம்!

ஆனால், எல்லா உயிரினங்களும் ஏதேனும் ஒரு வகையில் ஒன்றோடொன்று ஏனைய உயிரினங்களோடு பிணைக்கப்பட்டுள்ளன. பூவுலகக் காட்டுயிர்ப் பாதுகாப்பு அமைப்பைச் (Global Wildlife Conservation) சேர்ந்த உயிரியலாளர் ராபின் மர்ரே தலைமையில், பூண்டோடு அற்றுப்போய்விட்டதாகக் கருதப்பட்டுள்ள 25 உயிரினங் களை உள்ளடக்கி முதல் கட்டமாகத் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதில் 10 பாலூட்டிகள், 3 ஊர்வன, 3 பறவைகள், 2 நீர்நில வாழ்விகள், 3 மீனினம், தலா ஒரு பூச்சி வகை, இறால் வகை, பவழ உயிரி, செடி ஆகியன இடம்பெற்றுள்ளன. 18 நாடுகளைச் சேர்ந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த இமயமலைக் காடையும் காட்டு ஆந்தையும் இடம்பெற்றுள்ளன.

நினைவுகளில் பாறு

இன்னும் 50 ஆண்டுகள் கழித்துப் பாறுக் கழுகுகளைத் தேடி இதேபோல யாரும் புறப்பட வேண்டிய நிலை வராது என்று நம்புவோம். அந்த நிலை வராமல் இருக்க இந்திய அரசு ஐந்தாண்டு திட்டம் வகுத்துச் செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது. ஆசிய அளவிற்கான செயல்திட்டமும் ‘சேவ் - வல்சர்ஸ்’ (Saving Asia’s Vultures from Extinctions) என்கிற அமைப்பால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நம் வீட்டில், ஊரில் உள்ள வயதான பெரியவர்களிடம் பாறு எனப்படும் பிணந்தின்னிக் கழுகைப் பாரத்ததுண்டா எனக் கேட்டுப் பாருங்கள். நிறையச் சொல்லக்கூடும்.

எனக்கு ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது. எனக்குப் பத்து வயதானபோது வீட்டில் எருமை ஒன்றை வளர்த்துவந்தோம். அதன் கொம்புகள் ‘தோடர் எருமையின’க் கொம்புகள்போல் பெரிதாக இருக்கும். அந்த எருமை இறந்தபோது ஆற்றோரத்தில் கொண்டுபோய்க் கிடத்தினோம். அதன் தோலைப் பெரியவர் ஒருவர் கிழித்து எடுத்துக்கொண்டிருந்தார். நான் அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தபோது, வானிலிருந்து பறவைகள் ஒவ்வொன்றாய்த் தரையிறங்கிச் சடலத்தின் அருகே வந்து அமர்ந்தன. அதற்கு முன் அப்பறவைகளை நான் பார்த்ததில்லை. அவை என் உயரத்திற்கு இருந்தது அச்சத்தை ஏற்படுத்தியது. வீட்டுக்கு ஓடி வந்துவிட்டேன். அப்பாவிடம் கேட்டு, அதன் பெயரைத் தெரிந்து கொண்டேன்.

பறவைகளை நோக்குவதில் ஆர்வம் ஏற்பட்டபோது 1991 மே மாதத்தில் திண்டுக்கல்லில் உள்ள தோல் தொழிற்சாலைகளைச் சுற்றிலும் அமைந்திருந்த குத்தாங்கல்லில் ஏறக்குறைய 15 பாறுக் கழுகுகள் அமர்ந்திருந்ததைப் பார்த்தேன். 1994 நவம்பரில் மஞ்சள்முகப் பாறு ஒன்றை மதுரைக்கு அருகிலுள்ள திருபுவனத்தில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது.

அதற்குப்பின் 1996 நவம்பரில் மத்திய பிரதேசத்திலுள்ள ‘பன்னா புலிகள் காப்பகம்’ சென்றிருந்தபோது சுமார் 30 பாறுக் கழுகுகள் இறந்த மாட்டின் சடலத்தைத் தின்றுகொண்டும் அருகிலிருந்த இலுப்பை மரத்தில் ஓய்வெடுத்துக்கொண்டும் இருந்தன. அன்று மாலையில் கரடி ஆராய்ச்சியாளர் யோகானந்த், ‘காட்டுயிர்’ ச. முகமது அலி, பறவை ஆர்வலர் அம்சா ஆகியோர் உடன்வர ‘கென்’ ஆற்றைப் பார்க்கச் சென்றிருந்தபோது எதிர்புறத்திலிருந்த குத்துப்பாறையில் பாறுக்கழுகுக் கூட்டம் தங்கியிருந்தது என் மனக்கண் முன் நிழலாடியது. அதுவே கடைசி, அதன் பின்னர் இவ்வகைப் பறவையை நான் பார்க்கவில்லை.

ஆச்சரியம் தந்த நிகழ்வு

பத்தாண்டுகளுக்கு முன் திடீர்ப் பயணமாகக் கிழக்கு மலைத்தொடரும் மேற்கு மலைத்தொடரும் சந்திக்கும் மாயாறு சமவெளியில் பறவைகளை நோக்குவதற்காக ச. சந்திரசேகருடன் சென்றேன். பறவைகள் ஏதும் வானத்தில் பறக்கின்றனவா என அவ்வப்போது அண்ணாந்து பார்த்தபடியே மெதுவாக நடந்துசென்றோம். அப்போது வானில் புள்ளியாக ஏதோ ஒன்று வடமேற்குத் திசையில் தென்பட்டது. தொலைநோக்கியைத் திருகி உற்றுநோக்கியபோது புருவம் உயர்ந்தது. ஆம், பாறுக்கழுகுதான். எண்ணத் தொடங்கினோம். அவற்றின் எண்ணிக்கை 105-தைத் தொட்டது. வியப்பில் திளைத்தோம். ஏனெனில் 12 ஆண்டுகள் கழித்து அப்போதுதான் இந்தப் பறவை இனத்தை மீண்டும் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. தமிழகம் முழுவதும் காண முடியாத பறவையினம் இப்பகுதியில் தென்பட்டதைக் கண்ணுற்ற இந்நிகழ்வுதான் இவ்வினத்தைக் காக்க, களப்பணியாற்ற என்னைத் தூண்டியது.

இந்தத் தூண்டுதலில் தமிழகத்தில் கழுகுப் பாறை, கழுகு மொட்டை, கழுகு மலை என எங்கெல்லாம் கழுகு பெயரைத் தாங்கிய ஊர்களோ இடங்களோ இருக்கின்றனவோ அங்கெல்லாம் பயணம் செய்து பாறு இனப்பறவைகள் தென்படுகின்றனவா என்று பார்த்துவந்தோம். எங்குமே தென்படவில்லை. திருக்கழுக்குன்றத்தில் பூசாரி தரும் படையலை உண்ணவந்த மஞ்சள் முகப் பாறு என்ன ஆனது என்பது குறித்துத் தெரிந்துகொள்ளச் சென்றபோது, மஞ்சள் முகப் பாறு மனிதர் ஒருவர் கையிலிருந்த உணவை உண்பதுபோன்ற ஓவியம் மட்டுமே எஞ்சியிருந்தது.

தற்போதைய நிலை?

உலகெங்கும் பெருங்கழுகு இனத்தில் 23 சிறப்பினங்கள் உள்ளன. இந்தியாவில் ஒன்பது வகையும் தமிழகத்தி்ல் வெண்முதுகுப் பாறு, கருங்கழுத்துப் பாறு, செம்முகப் பாறு, மஞ்சள்முகப் பாறு ஆகிய நான்கு சிறப்பினங்களும் காணப்படுகின்றன. இவ்வினத்தில் ஏறக்குறைய 99 சதவீதம் அழிந்துவிட்டது. தமிழகத்தில் காணப்படும் 4 வகையுமே அழிவபாயத்தில், அற்றுப்போகும் தறுவாயில் இருந்துவருகின்றன.

இவை இறந்த விலங்குகளை மட்டுமே உண்ணக்கூடியவை. நோய் கண்ட கால்நடைகளையும் விலங்குகளையும் உண்டு மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்கும் நோய் பரவாமல் காக்கின்றன. இதனால், அடைப்பான் நோய் (ஆந்த்ராக்ஸ்), வெறிநோய் (ரேபிஸ்) உள்ளிட்டவையும்கூடப் பரவாமல் தடுக்கப்படுகின்றன. இவை காட்டின் சுகாதாரப் பணியாளர் என அழைக்கப்படுகின்றன.

அழிவுக்குக் காரணம்?

மாடுகளுக்குச் செலுத்திய வலிநிவாரணி மருந்துகள், இறந்த விலங்குகளின் மீது தெளிக்கப்படும் நஞ்சுகள், இரை பற்றாக்குறை ஆகியவை இவற்றின் அழிவுக்குப் பெரிதும் காரணமாய் அமைந்துவருகின்றன. இவற்றின் அழிவுக்கு முதன்மைக் காரணம் மாடுகளுக்குச் செலுத்திய டைக்ளோபினாக் வலிநிவாரணி மருந்துதான். மத்திய அரசு அம்மருந்தைக் கால்நடை பயன்பாட்டிற்குத் தடைசெய்தது. ஆயினும் இம்மருந்து மட்டுமின்றி அசிக்ளோபினாக், கீட்டோபுரோபேன், புளூநிக்சின், நிமுசிலாய்ட்ஸ் ஆகிய மருந்துகளும் இதே போன்ற பாதிப்பை ஏற்படுத்துகின்றன என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு அரசு கீட்டோபுரோபேன் மருந்தைக் கால்நடைப் பயன்பாட்டிலிருந்து விலக்கி முன்னோடியாகத் திகழ்கிறது.

மாடு செத்தால் கசாப்புக்கடைக்குத்தானே போகிறது, பாறுக் கழுகா தின்கிறது என்கிற அலட்சியம் வேண்டாம். தற்போது டைக்ளோபினாக் மருந்திற்குப் பதிலாகக் கேடு பயக்கும் மருந்துகள் மெல்லத் தலைகாட்டி வருவதாகத் தகவல்கள் வருகின்றன. எனவே, அவற்றைப் புறக்கணித்து மரபுவழி மருத்துவமுறைகளையும் இந்தியக் கால்நடை ஆராய்ச்சி மையம் (ஐவிஆர்ஐ) பாதுகாப்பான மருந்தாகப் பரிந்துரைத்துள்ள மெலாக்சிகம் மருந்தையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இயற்கையாக இறந்த கால்நடைகளையும் கேடு பயக்கும் எந்த மருந்தும் செலுத்தப்படாத கால்நடைகளையும் புதைக்காமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாய் கால்நடைகளுக்கு இரையாகப் போட்டுவிடலாம். முதல்கட்டமாகக் காடுகளுக்கு அருகே உள்ள ஊர்களில் இதைச் செயல்படுத்தலாம்.

முன்பு தமிழகம் முழுவதும் வாழ்ந்த இந்தப் பறவையினம் தற்போது நீலகிரி உயிர்க்கோளத்தில் மட்டுமே தென்படுகிறது. எனவே, நீலகிரியின் பெருமைகளில் ஒன்றாக விளங்கும் பாறுக் கழுகுகளை அழிய விடாமல் காப்போம்.

கட்டுரையாளர், எழுத்தாளர்,

பாறுக் கழுகு பாதுகாப்பு செயற்பாட்டாளர்

தொடர்புக்கு: arulagamindia@gmail.com

பாறுக் கழுகுநினைவுகளில் பாறுதற்போதைய நிலைஅழிவுEagle

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x