Last Updated : 14 Oct, 2021 05:54 AM

 

Published : 14 Oct 2021 05:54 AM
Last Updated : 14 Oct 2021 05:54 AM

திருமுருகன் என்னும் ராகம்!

இளம் தலைமுறையினரிடையே பக்தி இசையைப் பரப்பும் வகையில் தாசர் பாடல்கள், பகவத் கீதை, விஷ்ணு சகஸ்ரநாமம் போன்றவற்றுக்கு இசையமைத்து அதை யூடியூபில் பதிவேற்றும் பணியில் இசையமைப்பாளர் வி.கே.கண்ணன் ஈடுபட்டு வருகிறார்.

பொள்ளாச்சியைப் பூர்விகமாகக் கொண்ட கண்ணனின் அம்மா வழித் தாத்தா பி.ஜி.ராமச்சந்திரன், அந்நாளைய நாடக மேடைகளில் புகழ்பெற்ற ஹார்மோனியக்காரராக இருந்தவர். `நாடக இசைத் திலகம்’ பட்டம் பெற்ற அவரிடமே கண்ணனின் அம்மா பானுமதி, இசை கற்றுக்கொண்டு பாடகியாகப் புகழ் பெற்றிருந்தார். ``தொடக்கத்தில் அம்மாவிடமே கர்னாடக இசையை முறையாகக் கற்றுக் கொண்டேன்” என்னும் கண்ணனை, பல மேதைகளிடமும் இசை நுணுக்கங்களை அவர் ஆழமாகக் கற்றுக்கொண்டதன் முழுமையே அவரை பக்தி இசையை நோக்கித் திருப்பி யிருக்கிறது. திரைப்பட இசை, மேற்கத்திய இசையிலும் இவருக்கு அனுபவம் உண்டு.

“பக்திப் பாடல்களுக்கு எனது ஆசிரியர்கள் சசிகுமார், சிதம்பரநாதன் ஆகியோர் மெட்டமைக்கும் முறையைப் பார்த்து எனக்கும் பக்தி இசையில் ஆர்வம் ஏற்பட்டது. கர்னாடக இசைப் பாடகி நித்ய மகாதேவன் உள்ளிட்ட பிரபல பாடகர்களைப் பாடவைத்து `தெய்வீகம்’, `தெய்வீக சங்கமம்’ போன்ற பக்திப் பாடல் தொகுப்புகளைத் தயாரித்தேன். அதில் `தெய்வீக சங்கமம்’ பக்தி இசை ஆல்பத்தை எஸ். ஜானகி வெளியிட்டார்.

“இளைஞர்களையும் பக்தி இசையைக் கேட்க வைக்க வேண்டும் என்று விரும்பினேன். அது மிகப் பெரிய சவால். இளைஞர்களுக்கு சரியான தொழில்நுட்பத்தில் துல்லியமான ஒலிக் கலவையில் கொடுத்தால்தான் ரசிப்பார்கள். அதோடு நல்ல பாடகர்களைப் பாடவைத்து அவர்கள் மூலமாக பக்தி இசையைக் கேட்க வைக்கும் நோக்கத்தில்தான் நான் இசை அமைக்கத் தொடங்கினேன். அதனால் இளைஞர்களை வசீகரிக்கும் இசையோடு இசையமைக்கிறேன். பகவத் கீதையின் 80 ஸ்லோகங்களுக்கு இசையமைத்தது மறக்கமுடியாத அனுபவம். அதில் சில ஸ்லோகங்கள் தாளத்தில் அமையும். பல ஸ்லோகங்கள் தாளத்தில் அமையாது. விருத்தமாக இருக்கும். பெரிய சவாலான பணியை இறைவன் அருளால் பரிபூரணமாகச் செய்திருக்கிறோம் என்னும் மனத் திருப்தி கிடைத்திருக்கிறது. விஷ்ணு சகஸ்ரநாமத்துக்கும் இசையமைத்திருக்கிறேன். பகவத் கீதையை சீனிவாசலு, பிரசன்னா, பென்னி கிருஷ்ணகுமார் ஆகியோர் பாடியிருக்கின்றனர். இது இன்னமும் வெளியாகவில்லை.” என்கிறார்.

பாலதேவராய சுவாமிகள் அருளிய கந்தசஷ்டி கவசம் பக்தி உலகில் மிகவும் பிரபலமானது. நாம் கேட்கும் கவசம் திருச்செந்தூர் படைவீட்டுக்கானது. ஆறு படைவீட்டுக்கும் ஒரே படைவீட்டுக்கான மெட்டிலேயே நாம் கவசத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்கிறார். “திருச்செந்தூருக்கான `சஷ்டியை நோக்க’ கவசத்தை மட்டும் தற்போது இருக்கும் ராகத்திலேயே அமைத்திருக்கிறேன். மற்ற படைவீடுகளுக்கான கவசங்களை ராகமாலிகை யாகவும், சிலவற்றை ஷண்முகப்ரியா போன்ற ராகங்களைப் பயன்படுத்தியும் இசையமைத்திருக்கிறேன். `ராகப்பிரவாகம்’ என்னும் இசை நூலில் தேடியபோது `திருமுருகன்’ என்னும் பெயரிலேயே ஒரு ராகம் இருப்பது தெரிந்தது. அந்த ராகத்தைப் பயன்படுத்தியும் ஒரு படை வீட்டுக்கு இசையமைத்திருக்கிறேன். கர்னாடக இசைக் கலைஞர் ஹைதராபாத் சிவா மற்றும் அவரின் இசைப் பள்ளி மாணவர்கள் பாடியிருக்கின்றனர்.”

அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்துவுக்கு இவர் இசையமைத்துள்ளார். அந்தப் பாடல்களில் ஒன்று தாளத்திலேயே அமையாது என்று கருத்தை உடைத்து அதைச் சவாலாக ஏற்று அதற்கும் இசையமைத்துள்ளார்.

“திருக்குறளுக்கு வித்தியாசமாக இசையமைக்க வேண்டும் என்று எண்ணம் இருக்கிறது. அய்யன் அருளால் நடக்கும் என்று நம்புகிறேன்” என்கிறார் கண்ணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x