Last Updated : 11 Oct, 2021 11:57 AM

 

Published : 11 Oct 2021 11:57 AM
Last Updated : 11 Oct 2021 11:57 AM

விவசாயத்துக்கு மரியாதை அளிக்கும் தரணி வேந்தன்

விவசாயம் மனித இனத்தின் பழந்தொழில். தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்புவரை, மனிதரின் பெரும் விருப்பத்துக்கும் மதிப்புக்கும் உரிய தொழிலாக விவசாயமே இருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சியும், பெரும் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட மனித உழைப்பும், 19ஆம் நூற்றாண்டில் மனிதர்களின் இந்த எண்ணப்போக்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. இதன் விளைவு, பெரும்பாலோனோர் விவசாயத்தைக் கைவிட்டு தொழிற்சாலைகளை நோக்கிப் படையெடுத்தனர்.

இதனால், ஏற்பட்ட மனித உழைப்பின் போதாமையை ஈடுகட்ட விவசாயத்திலும் தொழில்நுட்பம் புகுந்தது. மகசூலை அதிகரிக்கவும் விளையும் காலத்தையும் சுருக்கவும் ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்பட்டன. மாடுகளுக்கு மாற்றாக டிராக்டர்கள் வந்தன. மனித உழைப்பின் தேவையை நடவு இயந்திரங்களும், அறுவை இயந்திரங்களும் நீர்த்துப்போகச் செய்தன. இதன் விளைவாக, விளைநிலங்கள் மலடாகின, நாட்டு மாட்டு இனங்கள் அருகின. உடல் உழைப்புக் குறைவும் ரசாயன உரங்களின் பயன்பாடும் மனிதர்களின் உடல்நலத்தைப் பெரிதும் பாதித்தன.

இந்தப் பாதிப்பிலிருந்து விவசாயத்தை மீட்டு, அதை மீண்டும் இயற்கையை நோக்கி மடைமாற்றும் புரட்சி ஒன்று உலகெங்கும் நிகழ்ந்துவருகிறது. மண்ணின் மீதும், மனித இனத்தின் மீதும் பிடிப்பும் கொண்ட படித்த இளைஞர்கள் அந்தப் புரட்சியில் பெருமளவில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆரணிக்கு அருகமைந்த கிராமங்களில் இயற்கை விவசாயத்தைத் தொய்வின்றி முன்னெடுத்துச் செல்லும் தரணி வேந்தன் அத்தகைய இளைஞர்களில் ஒருவர்.

ஆரணிக்கு அருகிலுள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்து, வளர்ந்தவர் தரணி வேந்தன். வயல்வெளிகளில் விளையாட்டு, ஆற்றங்கரையில் குளியல், குளங்களில் மீன்பிடிப்பு எனக் கிராமத்து வாழ்க்கையால் ஆசிர்வதிக்கப்பட்டிருந்த குழந்தைப் பருவம் அவருக்குள் இயற்கை மீது பெரும் காதலை விதைத்தது. கல்லூரிப் படிப்புக்காக வெளியூர் செல்லும்வரை, அவருடைய வாழ்க்கை இயற்கையைச் சுற்றியே கழிந்தது.

கல்லூரியில் படித்த நாட்களில் அவருக்கு இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. படிப்புக்குப் பின்னர், அவர் இயற்கை விவசாயத்தைக் கற்றுக்கொள்ளும் நோக்கில், இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு இருப்போரை நோக்கிப் பயணப்பட்டார். ஒரு இடத்துக்குச் சென்றால், அங்கேயே அவர்களுடன் தங்கி, விவசாயத்தை நேரடியாகக் கற்றுக்கொள்வது அவருடைய வழக்கம். அந்தப் பயணங்களும், அந்தப் பயணங்களில் அவருக்குக் கிடைத்த அறிமுகங்களும், அனுபவங்களும் இன்று தரணியை வெற்றிகரமான இயற்கை விவசாயியாக நிலைநிறுத்தியுள்ளது.

தரணியின் விவசாயக் கனவுக்கு அவருடைய குடும்பம் முதலில் தடையாகவே இருந்தது. தரணியின் விடாமுயற்சியும், நேர்மையான நோக்கமும் குடும்பத்தினரின் மனத்தை மாற்றியது. இயற்கை விவசாயத்தில் தரணிக்கு ஒத்தாசையாகவும் இருக்க வைத்தது. கீரைகளையும் காய்கறிகளையும் விளைவித்துத் தன்னுடைய இயற்கை விவசாயப் பயணத்தைத் தொடங்கிய தரணி, விரைவிலேயே கருப்புக் கவுனி, தூயமல்லி போன்ற பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிடும் அளவுக்கு முன்னேறினார்.

இன்று அந்தப் பகுதியில், மானாவாரி நிலக்கடலை பயிரை அதிக அளவில் பயிரிட்டுவருகிறார். நிலக்கடலையை அப்படியே விற்காமல், அதில் எண்ணெய் தயாரித்து விற்பதன் மூலம் லாபத்தை அதிகரித்துள்ளார். உபரியாக இதன் மூலம் அவருக்குப் புண்ணாக்கு கிடைக்கிறது, அதன் காரணமாகக் கூடுதல் வருமானமும் கிடைக்கிறது. நிலக்கடலை பருவம் சார்ந்த பயிர் என்பதால், தினசரி லாபம் எடுக்கும் நோக்கில், கீரை போன்றவற்றைப் பயிரிடுகிறார். மேலும், தான் விளைவிக்கும் காய்கறிகளை அருகில் உள்ள ஊர்களுக்கு அனுப்புவதன் மூலம் நிரந்தர வருமானத்தைப் பெற்று வருகிறார். நாள், வார, மாத வருமானம் கொடுக்கும் பொருட்களை விளைவித்து அதை மதிப்புக் கூட்டி விற்பதன் மூலம் வெற்றிகரமான இயற்கை விவசாயியாகத் திகழும் தரணி வேந்தன், இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கான வழிகாட்டியும்கூட.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x