Published : 09 Oct 2021 03:10 am

Updated : 09 Oct 2021 06:53 am

 

Published : 09 Oct 2021 03:10 AM
Last Updated : 09 Oct 2021 06:53 AM

நல்ல பாம்பு 4: விரியன் அல்ல, வரியன் :

nalla-pambu

மாலையிலிருந்தே மழை தூறிக்கொண்டி ருந்தது. குளிரின் இதம், உடற்சோர்வு காரணமாகச் சீக்கிரமாகவே தூங்கி விட்டேன். திடீரென்று அலைபேசி ஒலித்தபோது இரவு ஒன்பது மணியைத் தாண்டியிருந்தது. பக்கத்துத் தெருவிலிருக்கும் தெரிந்த அண்ணன் அழைத்திருந்தார். ‘தம்பி கொஞ்சம் வீட்டுக்கு வரமுடியுமா? இங்கே வெளிச்செவுருகிட்ட ஒரு பாம்பு, குட்டி போட்டுகிட்டு இருக்கு’ என்றார் பதற்றத்துடன். என் தூக்கம் சட்டெனக் கலைந்தது. இரவாடிப் பாம்பினம் ஒன்று குட்டியிட்டுக்கொண்டிருக்கிறது. நிச்சயம்! இது ஒரு புது அனுபவமாக இருக்கும் என்கிற பேராவலுடன் விரைந்தேன்.

அங்கே எனக்கு வேறொரு ஆச்சரியம் காத்திருந்தது. ஒரு கட்டு வரியன் (Common Krait - Bungarus caeruleus), ஓர் ஓலைப்பாம்பைக் (Oligodon taeniolatus) கடித்து இரையாக்க முயன்றுகொண்டி ருந்தது. ஓலைப்பாம்போ தன் உடலைப் புற்களோடு பிணைத்துக்கொண்டு தப்பிக்க வழி தேடியது. ஒருவேளை தப்பித்தாலும்கூட, அதனால் உயிர்வாழ முடியாது. ஏனென்றால் வரியன் ஒரு நஞ்சுப் பாம்பு. இதன் நஞ்சு (Venom) நரம்பு மண்டலத்தைத் தாக்கக்கூடியது. இந்திய நிலப்பரப்பில் காணப்படும் நான்கு முக்கிய நஞ்சுப் பாம்புகளில் ஒன்றான இது, மற்றவற்றைவிட வீரியமிக்க நஞ்சைக் கொண்டுள்ளது.

தனி அடையாளங்கள்

தெரு விளக்கின் ஒளியில் தெரிந்த பாம்பின் உடல் கறுத்த நிறத்தில் வழவழப்பான, மென்மையான செதில்களோடு காணப்பட்டது. உடலில் ஆங்காங்கே மிதமான கருநீல நிறத்தில் மிளிர்ந்தது. உடலின் குறுக்கே வெள்ளை நிற வரிகள் கழுத்துப் பகுதிக்குச் சற்று கீழே வெள்ளைப் புள்ளியாக ஆரம்பித்து, தெளிவான வரிகளாக வாலின் கடைசிவரை காணப்பட்டன.

தலைப் பகுதி மழுங்கி, சிறிய வட்டவடிவ கரு நிறக் கண்ணைக் கெண்டிருந்தது. கழுத்தைவிடத் தலை சற்றே பெரிது, தலையில் எந்தக் குறியீடும் இல்லை. நடு முதுகில் அறுங்கோண () வடிவச் செதில்கள் கழுத்தில் ஆரம்பித்து வால் நுனி வரை இருந்தன. பக்கவாட்டுச் செதில்களைவிட இது பெரியது. இச்செதில் அமைப்பு இப்பாம்பிற்கே உரித்தானது. இவை பொதுவாக 4 முதல் 5 அடி நீளம் வரை வளர்ந்தாலும், நீளத்துக்கு ஏற்றபடி உடல் பருமனாக இல்லை. வாலும் சிறியது.

வேறுபடுத்தி அறிய வேண்டும்

புதரிலிருந்து நகர்ந்து மண்ணிற்கு வந்தது வரியன். ஓலைபாம்பின் பிடியை அது விட்டிருக்கவில்லை. அங்கிருந்த பாட்டி, “இது கட்டு விரியனுல” என்றார். இப்பாம்பு அக்காலத்திலிருந்து ‘கட்டு விரியன்’ என்றே தவறாக அழைக்கப்பட்டுவருகிறது. விரியன் என்பது ‘viper’ இனப் பாம்புகளைக் குறிக்கும் சொல். அவற்றை விரியன் என்று தவறாக விளிப்பது ஒருபுறம், மற்றொருபுறம் உடலில் வரிகளோடு காணப்படும் நஞ்சற்ற பாம்பினங்களான கருவிரலிப் பாம்பு, வெள்ளிக்கோல் வரையன், பட்டை ஓலைப்பாம்பு, ஓடுகாலிப் பாம்பு போன்றவற்றைப் பார்த்து மக்கள் அச்சம் கொள்வதுடன், அடித்தும் கொல்கிறார்கள். இந்த பயம் தேவையற்றது

எலாப்பிடே (Elapidae) குடும்பத்தைச் சேர்ந்த பங்காரஸ் ‘Bungarus’ பேரினத்தில் எட்டுக் கட்டு வரியன் இனங்கள் உள்ளன. இவற்றில் ‘caeruleus‘ சிற்றினம் இந்தியா முழுவதும் வாழ்ந்துவருகிறது. தரைவாழ் பண்பைக் கொண்டுள்ளதால் எலி வளை, கறையான் புற்று, கற்குவியல், கல் இடுக்கு ஆகிய வற்றில் தனக்கான வாழ்விடத்தைத் தேர்வுசெய்கிறது. வெப்பத்தன்மை குறைந்த பகுதிகளையே விரும்புகிறது.

நாங்கள் அருகில் இருப்பதை வரியன் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஓலைப்பாம்பைச் சிறிது சிறிதாக விழுங்க ஆரம்பித்தது. இப்படிப் பாம்பினங்களை உண்பவையாக இவை இருந்தாலும் பல்லிகள், எலிகள், பறவைகள் என மற்றவற்றையும் உண்கின்றன. சிறிது நேரத்தில் ஓரடி நீளம் கொண்ட ஓலைப்பாம்பின் உடல் முழுவதும் வரியனுக்குள் சென்றது. பாம்பு மெல்ல அங்கிருந்து நகர்ந்தபோது, கூட்டத்திலிருந்த ஒருவர் அதை வழிமறித்தார். அப்பொழுது சட்டென உடலைச் சுருட்டி தலைப்பகுதியை உடலின் கீழே மறைத்தது. இது ஓர் தற்பாதுகாப்பு நடவடிக்கை. சாதுவாகவோ மந்தமாகவோ இருப்பதுபோலத் தோன்றலாம். ஆனால், எதிர்பாராத வேளையில் சட்டென்று கடித்துவிடும், எச்சரிக்கை அவசியம்.

வலியற்ற கடி

இரவாடியான இப்பாம்பு நமக்கு அருகிலேயே வாழ்ந்து வந்தாலும் நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை. மனிதக் குடியிருப்புகளுக்கும் இரை தேடி வரும். மனிதர்கள் தூங்கும் நேரத்தில்தான் வரியன்கள் இப்படி வரும். அவற்றின் மீது நம் உடல் தெரியாமல் பட்டுவிட்டால், தற்பாதுகாப்புக்காக வலியற்ற வகையில் கடிக்கும். கடிவாயில் எந்த அறிகுறியும் தெரியாது. பெரும்பாலும் இறுதி நிமிடத்தில்தான் கடியின் அறிகுறிகளான கடுமையான வயிற்றுவலி, முடக்குவாதம், கண் இமை செயலற்றுப்போதல், மூச்சுத் திணறல் ஆகியவற்றைத் தொடர்ந்து நுரையீரல் வீக்கம் ஏற்பட்டு, சுவாசம் தடைப்பட்டு இறக்க நேரிடும். சில நேரம் உறக்கத்திலேயே உயிர் பிரிந்துவிடலாம். இரவில் இது போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், பிற உடல் உபாதை எனக் குழப்பிக்கொள்ளாமல், உடனே உரிய சிகிச்சை பெற வேண்டும்.

நாங்கள் பார்த்துக்கொண்டிருந்த வரியன், உண்ட திருப்தியுடன் மெல்ல நகர்ந்து தன்வழியில் போய்க் கொண்டிருந்தது. வீட்டுக்கு வந்து அந்த வரியனைப் பற்றி அசைபோட்டுக் கொண்டிருந்தபொழுதுதான், அது ஓர் ‘முட்டையிடும் பாம்பு’ என்பது என் நினைவுக்கு வந்தது.

கட்டுரையாளர், ஊர்வன ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: oorvanapalli@gmail.com

நல்ல பாம்புNalla pambuSnakesபாம்புகள்கட்டு வரியன்Common KraitBungarus caeruleus

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x