Published : 08 Oct 2021 03:11 AM
Last Updated : 08 Oct 2021 03:11 AM

இயக்குநரின் குரல்: கதாநாயகியை பலிகொண்ட கரோனா!

இஸ்லாமிய வாழ்வியலைக் கதைக் களமாகக் கொண்டு, சிறுகதைகளும் நாவல்களும் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழில் ஒரு முழுமையான இஸ்லாமிய சினிமா இதுவரை எடுக்கப்படவில்லை என்றே சொல்லிவிடலாம். அந்தக் குறையை ‘இன்ஷா அல்லாஹ்’ திரைப்படம் போக்கும் என்று உறுதியாகக் கூறுகிறார் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் பக்கிள் பாண்டியன் பாஸ்கரன். மிலாது நபி திருநாளை முன்னிட்டு அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் ‘இன்ஷா அல்லாஹ்’ வெளியாகவிருக்கும் நிலையில் அவருடன் ஒரு சிறு உரையாடல்..

படத்தின் கதை என்ன?

ஒவ்வொரு இஸ்லாமியரும் ஐந்து கடமைகளைத் தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஐந்து கடமைகளைச் செய்யத் தவறிய ஒருவருடைய இறப்பையும் கடமைகளை முழுமையாக நிறைவேற்றிய ஒருவருடைய இறப்பையும் ஒப்பிட்டுக் காட்டுகிறது கதை. இதற்குள் பல நிலைகளில் பல வயது கதாபாத்திரங்கள் திரைக்கதையைக் கட்டியெழுப்பியிருக்கின்றன.

சில முக்கிய கதாபாத்திரங்களைப் பற்றிக் கூறுங்களேன்..?

ஒரு சிறு கதாபாத்திரத்துக்கும் கூட திரைக்கதையில் முக்கியத்துவம் உண்டு. உதாரணத்துக்கு ஒன்று. ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் ஹஜ் புனிதப் பயணம் செல்வது வாழ்நாள் லட்சியம். அப்படிப்பட்ட லட்சியத்துக்காகச் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த தன்னுடைய வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் ஓர் எளிய இஸ்லாமியப் பெண்ணின் திருமணச் செலவுக்காகத் தந்து உதவுகிறார் ஒரு இஸ்லாமியப் பெரியவர். அந்தக் கதாபாத்திரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மைத்துனர் அப்துல் சலாம் நடித்திருக்கிறார் (திருமதி கமலா சிவாஜி கணேசனின் சகோதரர்).

பெரிய கதாபாத்திரத்துக்கு ஓர் உதாரணம். படத்தில் இரண்டு கதாநாயகிகள். ஒருவர், காண்போர் புறக்கணிக்கும் தோற்றம் கொண்டவர். அதாவது ஒரு பெண்ணின் புற அழகைப் புறக்கணித்து, அவருடைய அக அழகைக் காதலிக்கும் இளைஞர் ஒருவருடைய காதலியாகவும் பின்னர் காதலை ஏற்று அவரைத் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணாகவும் அவர் வருகிறார். கோவைப் பள்ளிவாசலில் படப்பிடிப்பு நடத்தியபோது, எதிரே இட்லிக்கடை வைத்திருந்த ஜபரம்மாவை பார்த்து இவர்தான் அந்த நாயகி என முடிவு செய்து அவரை நடிக்க அழைத்தேன். மறுத்தார். தொடர்ந்து தொந்தரவு செய்து அவரை நடிக்க வைத்தேன். ‘என்னோட மூஞ்சியெல்லாம் கேமராவுல பதியுமுங்களா அய்யா?’ என்றார். வாழ்நாளில் அவ்வளவு மனக்காயம் அவருக்கு. அற்புதமாக நடித்திருக்கிறார். ஆனால், கரோனா கொடுங்காலம் அவரைப் பறித்துக் கொண்டுபோய்விட்டது. படத்தை ஜபரம்மாவுக்குத்தான் அர்ப்பணித்திருக்கிறோம்.

கோவை கதைக் களம் எனும்போது அதை மையப்படுத்தி ஏதேனும்?

கோவியில் ஜீவசாந்தி என்கிற இஸ்லாமியத் தொண்டு அமைப்பு இதுவரை இரண்டாயிரத்துக்கும் அதிகமான ஆதரவற்ற சடலங்களை நல்லடக்கம் செய்திருக்கிறார்கள். இறந்தவர் இந்து எனத் தெரிந்தால் இந்து மதச் சடங்குகளைப் பின்பற்றி நல்லடக்கம் செய்து வருகிறார்கள். ஜீவசாந்தி அமைப்புக்குச் சொந்தமான அமரர் ஊர்தி ஓட்டுநராகக் கதாநாயகன் நடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x