Last Updated : 05 Oct, 2021 03:11 AM

 

Published : 05 Oct 2021 03:11 AM
Last Updated : 05 Oct 2021 03:11 AM

கதைப்போமா அறிவியல் 03: நடக்கட்டும் நாக்கு ஆராய்ச்சி!

உயிர் வாழத்தேவையான காற்றை அடுத்து நமக்கு அத்தியாவசியம் - உணவு. அதைச் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சிகளையும், தொழில்நுட்ப முன்னேற்றங்களையும்தான் இந்த வாரத்தில் பார்க்கப்போகிறோம்.

நம் உடலின் மரபணுக்களை வரிசைப்படுத்தி அதன் குறியீடுகளில் இருந்து பெறப்படும் தகவல்களை கொடுக்கும் தொழில்நுட்ப சேவைகள் சில வருடங்களுக்கு முன்னால் வெளிவந்தன. https://www.23andme.com/ மற்றும் https://www.ancestry.com/ இரண்டும் அவற்றில் குறிப்பிடத்தக்க வகையில் பயனீட்டாளர்களின் கவனத்தைப் பெற்றன. பதிவுசெய்து கொண்டதும், அவர்கள் அனுப்பும் குப்பியில் உமிழ்நீரை துப்பி அனுப்பிவிடவேண்டும். அதை பயன்படுத்தி நம் மரபணு வரிசையை வகைப்படுத்தி நாம் புரிந்து கொள்ளும் மொழியில் எளிய ரிப்போர்ட் ஒன்றை அனுப்பிவிடுகிறார்கள். அந்த ரிப்போர்ட்டில் நம் மூதாதையர்கள் எங்கிருந்து வந்திருக்கக்கூடும் என்பதுடன் அவர்களது பயனீட்டாளர்கள் எவராவது ஒன்றுவிட்ட சகோதர / சகோதரிகள் இருக்கிறார்களா என்பதையும் காட்டிவிடும்.

ஆன்சஸ்டரி தளச் சேவையை இரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் பரிசோதனையாக செய்து பார்த்தேன். அது கொடுத்த உயர்மட்ட ரிப்போர்ட் மற்றும் மேலதிக தகவல்களுக்கு இந்த கட்டுரையின் ஆன்லைன் பக்கத்திற்குச் செல்லுங்கள்.

விஷயத்திற்கு வரலாம். மூதாதையர் எங்கிருந்து வந்தார்கள், நமக்கு தெரியாத உறவினர்கள் யார் யார், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரிந்து கொள்ளப்பட வேண்டிய விபரங்களே. ஆனால், இந்த விபரங்களால் என்ன பெரிய பயன் நமக்கு ? என்ற கேள்வி உங்களைப்போல எனக்குள்ளும் எழுந்தது. மரபணு சார்ந்த ஆராய்ச்சிகள் கடந்த பல ஆண்டுகளாக பல துறைகளில் முடுக்கிவிடப்பட்டிருப்பது அறிவியல் ஆராய்ச்சி சஞ்சிகைகளில் இருந்து மட்டுமல்ல, இந்த ஆராய்ச்சிகள், தொழில்நுட்பங்களாகி, அதில் இருந்து வரும் தொழில்முனைவுகளுக்கு கொடுக்கப்படும் பணமுதலீடுகளில் இருந்தும் தெளிவாக தெரிய வருகிறது.

கோவிட் போல அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் பெருந்தொற்றிலிருந்து காத்துக்கொள்ளும் தடுப்பூசி ஆராய்ச்சி போன்றவை ஒருபுறமிருக்க, தனி மனித மரபணு வரிசையில் இருக்கும் தகவல்களை எடுத்து பிரத்யேக உடல் நல விபரங்களை கொடுக்கும் சேவைகள் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியிருக்கின்றன. அண்மையில் அப்படி ஒரு சேவை பற்றிய விபரத்தை உயிரியல் ஆராய்ச்சியாளாராக இருக்கும் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். மரபணு சுவை என மொழிபெயர்க்க முடிகிற ‘Genopalate’ என்ற பெயரைக் கொண்ட புதிய நிறுவனத்தின் சேவை இப்படி இயங்குகிறது.

மரபணுக்களை வரிசைப்படுத்தும் நிறுவனம் ஒன்றில் உங்கள் உமிழ்நீரை அனுப்பி அதன் முடிவுகளை வைத்திருந்தால், அதை பதிவேற்றுங்கள். அது இல்லையெனில், ‘Genopalate’ நிறுவனமே இந்த சேவையையும் செய்கிறது.

என்னென்ன உணவு வகைகள் உங்கள் நாவின் சுவை அரும்புகளால் விரும்பப்படுகிறது என்ற விபரங்களை கொடுத்துவிடுங்கள்.

மரபணு வரிசை தயாரான ஓரிரண்டு நாட்களில் அதில் இருக்கும் தகவல்களை எடுத்துக் கொண்டு உங்களது நலத்திற்கும், சுவை விருப்பத்திற்கும் ஏற்ற உணவுகள் என்ன, அவற்றில் எதை அதிகமாகவும், எவற்றை குறைவாகவும் உண்ண வேண்டும் என்ற பரிந்துரையைக் கொடுத்துவிடுகிறது ‘Genopalate’.

இதற்குப் பின்னிருக்கும் அறிவியல் என்ன ? பார்க்கலாம்.

வரிசைப்படுத்தப்பட்ட மரபணு நாம் எப்படி உருவாகியிருக்கிறோம் என்பதைப் பற்றிய தெளிவான வரைபடம். நம் ஒவ்வொருவரின் மரபணுவரிசையும் நமக்கே பிரத்யேகமானது. உண்ணும் உணவை எப்படி கிரகித்து, அதன் ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொள்கிறது என்ற உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு (Metabolism) பின்னால் இருப்பது மரபணுக்களின் அமைப்புதான். காலை முதல் இரவு வரை இனிப்புகளை தின்று தீர்க்கும் ஒருவருக்கு சர்க்கரை நோய் வராமல் இருப்பதும், மிகக் கவனமாக உணவுகளை உண்பவருக்கு அந்த நோய் வந்து சேர்வதும் அவரவர்களின் மரபணு சார்ந்ததே!

‘Genopalate’ தொழில்நுட்பம் உங்களது மரபணு வரிசையை எடுத்துக் கொண்டு அதிலிருக்கும் பொதுவான மரபணுக்களின் தன்மையை அலசுகிறது. உதாரணத்துக்கு, G6PC2 என்ற மரபணுவில் இருக்கும் குறியீடுகள் சர்க்கரையால் பாதிப்பு நேருமா என்பதை காட்டிவிடும். அதுபோல, பிறழ்வு நிகழ்ந்த மரபணுக்கள் இருந்தால், அவற்றிற்கு தேவையான வைட்டமின்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளமுடியும். இப்படி வரிசைக்கிரமமாக உடலின் ஊட்டச்சத்து பண்புகளை தொகுத்தெடுத்த பின்னர், உங்களது சுவை விருப்பங்களுடன் ஒப்பிட்டு என்ன உணவுகளை நீங்கள் உண்ணலாம் என்ற பட்டியலை தயாரித்துவிடுகிறது.

என்னுடைய மரபணு வரிசையின்படி எண்பது சதவீத உணவு தாவரங்களில் இருந்து நேரடியாக வந்ததாக இருக்க வேண்டும் என்கிறது ‘Genopalate’ ரிப்போர்ட். மாமிச உணவிற்கு பழகிப்போன என் போன்றவர்களின் உணவுப் பழக்கத்தை எப்படி மாற்றுவது என்ற கேள்விக்கு மாற்று மாமிசம் (Alternate meats) என்றதொரு தொழில்நுட்பம் பதிலளிக்கிறது. படு வேகமாக வளர்ந்து வரும் இந்தத் துறை தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் புரதத்தை, இயற்கையாகப் பதனப்படுத்தி மாமிசத்தின் சுவைக்கு நிகராக கொண்டுவரும் உத்திகளில் கவனம் செலுத்துகிறது.

கோழி, மீன், மாட்டிறைச்சி எனப் பலவற்றை உருவாக்க இந்தத் துறையின் ஆராய்ச்சியாளர்கள் மெனெக்கெடுவதை கட்டுரையின் ஆன்லைன் பக்கத்தில் பார்க்கலாம். இந்த உணவுப் பிரிவில் இருக்கும் நிறுவனங்களான Impossible Foods (https://impossiblefoods.com/) , Beyond Meat (https://www.beyondmeat.com/) போன்றவற்றின் மீது முதலீட்டாளர்களுக்கு இருக்கும் ஆர்வம் அவர்களது சந்தை மதிப்பு கூடிக்கொண்டே செல்வதில் தெரிகிறது. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தில் கூகுள் போக்கு (Google Trends) தளத்தில் “Veganism” என்ற பதத்திற்கு இருக்கும் பாப்புலாரிட்டி என்னவாக இருக்கும் என்பதை பார்த்தேன். கடந்த ஐந்து+ வருடங்களாக மேற்படி பதத்தை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருப்பது தெரிகிறது.

மாமிசம் சாப்பிடுவதில் உடல்நல சிக்கல் எதுவும் இல்லை, ஆனால், கொல்வதிலிருந்து உணவு தயாரிப்பது என் அறநெறிக்கு உகந்ததல்ல என்ற கொள்கைப் பிடிப்பு இருப்பவர்களுக்கு, விலங்குகளின் உடலில் இருந்து எடுக்கப்படும் செல்களை பரிசோதனை கூடங்களில் வளர்த்து உணவிற்கு பயன்படுத்தும் ஆராய்ச்சி பயனீட்டாளர்களை சென்றடையும் அளவிற்கு வந்துவிட்டது. தண்ணீர் தேவை, விலங்குகளில் இருந்து வெளியாகும் கரியமில வாயு போன்ற காரணங்களால், கால்நடைகளை பண்ணைகள் போன்ற அமைப்பில் வளர்ப்பது பூமிக்கு ஆரோக்கியமானது அல்ல என்ற சூழலியலாளர்களின் பார்வையும், இந்த செல்-சார்ந்த மாமிச வளர்ப்பை ஊக்குவிக்கிறது. இப்படி செயற்கையாக வளர்க்கப்படும் மாமிசத்தின் சுவை அப்படியே இருக்கிறது என்றாலும், விலங்கிலிருந்து வருவதால் அது யூத மத கோஷர் அல்லது இஸ்லாமிய வழக்கத்தின் படியான ஹலால் வகையா போன்ற கலாசார கேள்விகள் எழுவதை பார்க்கமுடிகிறது.

அண்டன் பிரகாஷ்

இறப்பில் இருந்து உணவை தயாரிப்பதற்கு பதில் உயிர்ப்பில் இருந்து அதே சுவையுடன் தயாரிக்கலாமே என்ற உயரிய மானுட சிந்தனை மேற்படி ஆராய்ச்சிகளுக்கு பின்னால் இருப்பது உண்மைதான் என்றாலும், இந்த உணவு வகைகளின் தயாரிப்பு செலவு, விலங்குகளின் மாமிசத்தைவிட அதிகம் என்பதுதான் இன்றைய நிலை. புதுமையாக்கங்களை உட்புகுத்தி, தயாரிப்பு செலவினங்களை குறைக்கும் பட்சத்தில் இதன் விலையை சாமானியர்களும் வாங்கும்படி கொண்டுவரலாம். இந்த நூற்றாண்டில் பாதியை நெருங்கும்போது உலகின் மக்கள்தொகை தொண்ணூறு கோடியை தொட்டிருக்கும். இந்த பெரும் மக்கள் பரப்பின் புரதத்தேவையை சூழலியலைக் கெடுக்காமல் எப்படி மேற்கொள்வது என்ற கேள்வி மற்றொரு புரத மூலத்தை (Protein source) நோக்கி இட்டுச் சென்றபடி இருக்கிறது.

அது - Entomophagy என அழைக்கப்படும் பூச்சிகளை உண்ணும் முறைமை. கோழி அல்லது கால்நடைகள் போல் அல்லாமல் பூச்சிகளை வளர்ப்பது மிகவும் எளிது. பூச்சிகளை சாப்பிடுவதா என அஷ்டகோணலாக முகம் சுளிக்கிறீர்களா? தாவரங்களுக்குள் ஒளிந்திருக்கும் பல்வேறு வகை சிறிய பூச்சிகளை நாம் தெரியாமலேயே சாப்பிட்டுதான் வருகிறோம். அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அமைப்பு காய்கறி மற்றும் பழங்களில் எவ்வளவு பூச்சிகள் இருக்கலாம் என்பதைப்பற்றிய விளக்கமான அட்டவணையே கொடுத்திருக்கிறது. உதாரணத்துக்கு, ஆஸ்பரகஸ் காயில் நூறு கிராமிற்கு நாற்பது வரை சிறிய இறகுகள் கொண்டு திரிப்ஸ் பூச்சி வகை இருக்கலாம் என்கிறது.

வெட்டுக்கிளிகளை வறுத்து, எலுமிச்சை சாறு சேர்த்து செய்யப்படும் பிரபல உணவு வகையை மெக்சிகோவில் பயணம் செய்கையில் சுவைத்திருக்கிறேன். கீழை ஆசிய நாடுகளிலும், ஆப்பிரிக்காவிலும் பல வகை பூச்சி உணவு வகைகள் உண்டு. அதன் பலன்களை அறிந்த மேலை நாடுகளும் பூச்சி சார்ந்த புரதத்தில் கவனம் செலுத்த தொடங்கியிருப்பது தெரியவருகிறது. உதாரணத்துக்கு, https://chapul.com/ என்ற நிறுவனம் புரதப் பவுடர் ஒன்றை விற்கிறது. காயவைக்கப்பட்ட சில் வண்டுகளை அரைத்து பெறப்பட்டதுதான் அந்த பவுடர்.

இப்படியெல்லாம் ஏன் சிரமப்படவேண்டும். நேரடியாகத் தாவரங்களையே உண்டு கொள்ளலாமா என்ற கேள்வி மனதில் எழலாம். அதிலும், சூழலியல் சிக்கல்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் உண்டு. அதை அடுத்த வாரத்தில் ஆழமாகப் பார்க்கலாம். இந்தக் கட்டுரைக்கான பிரத்யேக முகநூல் பக்கம் - https://www.facebook.com/LetsTalkSTEM . அதில் இணைந்து, தொடர் பற்றிய பின்னூட்டங்களையும், எந்த டாப்பிக்குகளை அலச வேண்டும் என்பதையும் கமெண்ட் பகுதியில் தெரிவியுங்கள். வாட்ஸப்பில் அனுப்ப வேண்டுமென்றால் +1 (628) 240-4194 என்ற எண்ணில் அனுப்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x