

பட்ஜெட் என்பது நாட்டின் வரவு செலவு விவரங்களையும், அரசின் கொள்கை முடிவுகளையும், நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் அல்லது பின்னடைவுகளையும் சுட்டிக்காட்டும் ஆவணமாகும். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாத இறுதியில் மத்திய அரசு பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்.
கடந்த ஆண்டு எந்தெந்தத் துறைகளுக்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டது, அதில் எவ்வளவு செலவழிக்கப்பட்டது, பணம் போதுமானதாக இருந்ததா, செலவிடப்படாமலே மீந்ததா, பணப் பற்றாக்குறை ஏற்பட்டதா என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டிக்கொடுத்துவிடும். புதிய வரிகள் என்ன, ஏற்கெனவே விதிக்கப்பட்ட வரிகளில் குறைப்பு உண்டா, புதிய சலுகைகள் என்ன, வருமான வரி செலுத்த வேண்டியவர்களுக்கு வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறதா என்பது கவனிக்கப்படும்.
விவசாயம், கல்வி, சுகாதாரம், பழங்குடிகள் நலம், வீடமைப்பு, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் துறை, பாதுகாப்புத் துறை (ராணுவம்), சிறு குறு தொழில்துறைகள், அறிவியல் தொழில்நுட்பம் போன்ற துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யும் தொகை வளர்ச்சிக்கு உதவும் என்பதால் அதை அனைவரும் ஆர்வமாகக் கவனிப்பார்கள். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுவார்கள்.
மூன்று நிலைகள்
நடந்தது, நடப்பது, நடக்க வேண்டியது என்ற 3 நிலைகளைப் பொருளாதார ரீதியாக உணர்த்தும் ஆவணம்தான் பட்ஜெட். இதில் 3 விதப் பற்றாக்குறைகள் விவாதிக்கப்படும். முதலாவது வருவாய் பற்றாக்குறை (Revenue Deficit). அதாவது மறைமுக வரி, நேர்முக வரி மூலம் அரசுக்கு எவ்வளவு ரூபாய் கிடைக்கும் என்று கடந்த பட்ஜெட்டில் கூறியிருப்பார்கள். அதன்படி வருவாய் கிடைத்ததா என்று பார்த்து வரி வருவாய் இனங்களை மட்டும் இதில் கவனிப்பார்கள்.
அடுத்தது, அரசின் நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit). கடந்த பட்ஜெட்டில் அரசு தனக்குக் கிடைக்கும் என்று கூறிய வருவாய் என்ன, உண்மையில் கிடைத்தது என்ன என்பதைக் கணக்குப் பார்த்துக் கூறுவதே இந்த பற்றாக்குறை. இதில் வரி வருவாய் மட்டுமல்லாது அரசுக்கு வர வேண்டிய ராயல்டி தொகை, பங்கு விற்பனை மூலம் திரட்ட உத்தேசிக்கும் தொகை, அரசு நிறுவனங்கள் அளிக்கும் லாபம், அரசின் சொத்துகளிலிருந்து கிடைக்கும் வருவாய், நம்மிடம் கடன் வாங்கிய நாடுகள் செலுத்தும் வட்டி அல்லது அசல் போன்ற இதர வருமானங்களும் சேரும்.
மூன்றாவது, பட்ஜெட் பற்றாக்குறை (Budget Deficit). இது வரும் ஆண்டில் வரவிருக்கிற நிதிப் பற்றாக்குறையைத் தோராயமாகக் கணித்து அதற்கேற்றாற்போல நிதி ஒதுக்கீடு செய்வதாகும். பெரும்பாலும் பட்ஜெட் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை தொடர்கதையாக இருக்கும். எப்போதாவது அபூர்வமாக வருவாய் உபரி ஏற்படக்கூடும். வரவையும் செலவையும் சமப்படுத்தி பட்ஜெட் போடக் கூடாது என்பது மக்கள் நல அரசுகள் கடைப்பிடிக்க வேண்டிய பொருளாதார நெறி. இதுதவிர நேர்முக வரிகளும், மறைமுக வரிகளும் அரசின் கஜானாவைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
வரவை செலவு மிஞ்ச வேண்டும்
அரசாங்கம் திட்டங்களுக்காக ஒதுக்கும் தொகையைச் செலவு என்பார்கள். வரவைவிடச் செலவு குறைவாக இருக்க வேண்டும் என்பது குடும்பங்களுக்குப் பொருந்தும். அரசுகள் அப்படிச் செலவு செய்யக் கூடாது. வரவைவிட அதிகமாகத்தான் செலவுகள் இருக்க வேண்டும். அப்போதுதான் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிப்பு கிடைக்கும்.
நிதி ஆண்டு என்பது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 31-ல் முடிவடையும். பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகையை 12 மாதங்களுக்குள் செலவழித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அத்தொகை கஜானாவுக்குத் திரும்பச் சென்றுவிடும். திட்டமிட்டபடி செலவழிக்காவிட்டால் அது நிர்வாகத் திறமையின்மை எனக் கருதப்படும்.
அரசின் ரேங்க் கார்டு
ஜனநாயக நாட்டில் நாடாளுமன்றம்தான் மிக உயர்ந்த அதிகார பீடம். அதன் அனுமதி இல்லாமல் சட்டங்களை இயற்றுவதும் செலவுகளைச் செய்வதும் கூடாது. எனவே பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அதை விரிவாக விவாதிக்க வேண்டும். உறுப்பினர்கள் கூறும் யோசனைகளைக் கேட்க வேண்டும். ஆட்சேபங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் செலவுகளையும் வரி விகிதங்களையும் மாற்றியமைக்க வேண்டும். மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெற வேண்டும். அப்படிப் பெறத் தவறினால் அரசு பதவி விலக வேண்டும். பட்ஜெட்டை மக்களவை ஏற்றுக்கொண்ட பிறகு மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும். அங்கும் ஏற்றுக்கொண்ட பிறகுதான் பட்ஜெட் நிறைவேறியதாக அர்த்தம்.
அரசின் வரவு, செலவு திட்டங்களைக் கண்காணிக்கவும் தணிக்கை செய்யவும் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (C.A.G.) என்ற சுயேச்சையான அதிகாரி இருக்கிறார். அவர் ஒவ்வொரு ஆண்டும் திட்டமிட்டபடி செலவு செய்தார்களா, வீணடித்தார்களா என்றெல்லாம் ஆராய்ந்து நாடே அறியும்படியாக அறிக்கை அளிப்பார்.
பள்ளிக்கூட மாணவருக்கு ‘ரேங்க் கார்டு’ எப்படியோ அப்படித்தான் ஒரு அரசுக்கு அதன் பட்ஜெட். அதில் கடன் சுமையும், தண்டச் செலவுகளும் அதிகம் இருந்தால் அது கையாலாகாத அரசு என்று கண்டிக்கப்படும். மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது, வறியவர்களின் எண்ணிக்கை குறைந்தது என்றால் சிறப்பான அரசு என்று பாராட்டப்படும்.
வரிகள் பல
வருமான வரி, கார்ப்பரேட் வரி, செல்வ வரி, சொத்துகள் கைமாறும்போது செலுத்தும் எஸ்டேட் வரி போன்றவை நேர்முக வரிகளாகும். இவை உயர் வருவாய்ப் பிரிவினர் மீது விதிக்கப்படுபவை. ஆனால் இவற்றின் மூலம் திரட்டப்படும் தொகை மொத்த வருவாயில் பாதிக்கும் குறைவாகத்தான் இருக்கும். மறைமுக வரிகள்தான் அரசுக்குக் காமதேனு போன்றவை. இது பொருள்கள் மீதான விற்பனை வரி, சேவை வரி, உற்பத்தியாகும் பண்டங்கள் மீதான உற்பத்தி வரி (இதை கலால், எக்சைஸ் என்றும் அழைப்பார்கள்), வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பண்டங்கள் மீதான சுங்க வரி.
# சில பண்டங்களின் இறக்குமதியைத் தவிர்க்க இறக்குமதித் தீர்வை (Import Duty) விதிப்பதுண்டு. சில வகைப் பண்டங்களின் இறக்குமதியால் உள்நாட்டு நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அதைத் தடுக்க விதிக்கப்படுவது பொருள்குவிப்பு தடுப்பு வரி (Anti Dumping Duty).
# சுங்கவரி என்பது துறைமுகங்கள், விமான நிலையங்கள் வழியாகக் கொண்டுவரப்படும் சரக்குகள் மீது விதிக்கப்படுவது.
# வரிகள் மீது குறிப்பிட்ட சில செலவு களுக்காகக் கூடுதல் வரியும் (சர்-சார்ஜ்) விதிப்பதுண்டு. இதை ‘செஸ்’ என்றும் அழைப்பார்கள். சாலை அமைக்க, நூலகம் நிறுவ என்று குறிப்பிட்ட செலவுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.