Published : 30 Sep 2021 07:44 AM
Last Updated : 30 Sep 2021 07:44 AM

அணியார் பொழில் சூழ் அரங்கநகரப்பா

மு.இசக்கியப்பன்

ஸ்ரீரங்கத்தில் 13ஆம் நூற்றாண்டில் வைணவ ஆசார்யராக திகழ்ந்த சுவாமி மணவாள மாமுனிகளுக்கு, `அஷ்டதிக் கஜங்கள்’ என்ற பெயர் கொண்ட குழுவில் எட்டு பேர் முக்கியச் சீடர்களாக இருந்தனர்

இவர்களில், பொன்னடிக்கால் ஜீயர் முதலாமவர். திருநெல்வேலி மாவட்டம் நாங்கு நேரியில் பிறந்தவர். நாங்குநேரி வானமாமலை மடத்தின் முதல் ஜீயரும் ஆவார். `திருப்பாவை ஸ்வாபதேசம்’ முதலிய கிரந்தங்களை அருளிய வர். இந்தியாவிலும், நேபாளத்திலும் பல இடங்களில் வானமாமலை மடங்களை நிறுவி வைணவ சம்பிரதாயத்தைப் பரப்பியவர். நாங்குநேரி, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி உட்பட பல்வேறு திவ்யதேசங்களிலும் பொன்னடிக்கால் ஜீயரின் அவதாரத் திருநாள் செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பொன்னடிக்கால் ஜீயர் சுவாமிகளின் பூர்வாஸ்ரம பெயர் அழகியவரதர். ஆழ்வார் திருநகரியில் சுவாமி மணவாள மாமுனிகள் குடும்பத்துடன் வாழ்ந்திருந்தபோதே, இவர் அவருக்குச் சீடரானார். மாமுனிகளுக்கு சிறந்த சீடர்கள் அமைவதற்கு இவர் முதலடி அமைத்ததால், இவருக்கு பொன்னடிக்கால் ஜீயர் என்ற திருநாமம் ஏற்பட்டது. நாங்குநேரியில் இவருக்குத் திருமண ஏற்பாடுகளை, பெற்றவர்கள் செய்துகொண்டிருக்க, இவரோ மிகவும் வருத்தமுற்று, காஷாயம் தரித்து சந்நியாசியானார். ஆசார்யன் குடும்பஸ்தராக இருந்தாலும், சீடர் சந்நியாசியாக வாழ்ந்தார்.

மாமுனிகள் முதல்முறையாக திருமலை திருப்பதிக்கு யாத்திரை சென்றபோது, பொன்னடிக்கால் ஜீயரும் உடன் சென்றார். இருவரும் அடிவாரத்தில் (அலிப்ரி) தங்கியிருந்தனர். அன்றிரவு திருப்பதி கோயில் ஜீயர் சுவாமியான பெரிய கேள்வியப்பன் ஜீயரின் கனவில், ஒரு குடும்பஸ்தர் படுத்திருக்க, அவரது திருவடியில் ஒரு சந்நியாசி அமர்ந்திருப்பது போன்று கண்டார். மறுநாள், கேள்வியப்பன் ஜீயர் இது குறித்து விசாரிக்க, மணவாள மாமுனிகளும், பொன்னடிக்கால் ஜீயரும் திருமலைக்கு வந்திருப்பது தெரியவந்தது.

சீடனைச் சிறப்பித்த குரு

`தனக்குக் கிடைத்திருக்கும் எல்லாப் பெருமைகளும் பொன்னடிக்கால் ஜீயருக்கும் கிடைக்க வேண்டும்’ என்று, தமது சீடர்களிடம் மாமுனிகள் அருள்வது வழக்கம். அப்பாச்சியாரண்ணா என்பவர் மாமுனிகளை அணுகி சிஷ்யராக ஏற்றுக்கொள்ள வேண்ட, மாமுனிகள் பொன்னடிக்கால் ஜீயரை அழைத்துத் தன் ஆசனத்தில் அமரச்செய்து, அப்பாச்சியாரண்ணாவுக்கு சமாச்ரயணம் (பஞ்சசம்ஸ்காரம்) செய்யுமாறு கட்டளை இட்டார். அதனை, பொன்னடிக்கால் ஜீயரும் பூர்த்தி செய்தார்.

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் கைங்கர்யத்துக்காக, ரங்கத்தில் இருந்து ஜீயர் புறப்பட எண்ணினார். அப்போது, பொன்னடிக்கால் ஜீயர் உட்பட மாமுனி களின் சீடர்கள் தினம் 100 பாசுரங்களாக, திவ்ய பிரபந்தத்தை சேவித்தனர். “அணியார் பொழில் சூழ் அரங்கநகரப்பா” என்று அவர்கள் சேவிப்பதைக்கேட்டு ரங்கநாதபெருமான் மனம் குளிர்ந்து, தனது சந்நிதியில் இருந்த அரங்க நகரப்பனை ( லக்ஷ்மிநாராயண விக்ரஹம்), பொன்னடிக்கால் ஜீயருக்கு வழங்கி, அதனை நாங்குநேரிக்கு எழுந்தருளச் செய்யுமாறு பணித்தார். இந்த விக்கிரகத்தையும் இப்போது நாங்குநேரி வானமாமலை மடத்தில் தரிசிக்கலாம்.

வானமாமலையில் மட்டுமின்றி, வில்லிபுத்தூர், திருக்குறுங்குடி மற்றும் நவ திருப்பதிகளிலும் பல்வேறு கைங்கர்யங்களை ஏற்றார். பொன்னடிக்கால் ஜீயர் வடதேச யாத்திரை சென்றிருந்தபோது, மாமுனிகள் இந்த நில உலகைத் துறந்தார். இதையறிந்து பொன்னடிக்கால் ஜீயர் மிகவும் கலக்கமுற்றார். மாமுனிகளின் ஆணைப்படி அவருடைய உபதண்டம் (தன் தண்டத்தின் மீதம்), திருவாழி மோதிரம் மற்றும் பாதுகைகள் பொன்னடிக்கால் ஜீயரிடம் வழங்கப்பட்டன. வானமாமலை மடத்து ஜீயர்கள் உற்சவ காலங்களில் மாமுனிகளின் திருவாழி மோதிரத்தை அணிவது இப்போதும் வழக்கமாக இருக்கிறது.

கனவில் வந்த நாச்சியார்

அக்காலத்தில் வானமாமலையில் வரமங்கை நாச்சியாருக்கு உற்சவ விக்கிரகம் இல்லை. பொன்னடிக்கால் ஜீயர், திருமலை திருப்பதிக்கு யாத்திரை சென்றிருந்தார். அப்போது, திருமலை நாச்சியார் அவர் கனவில் தோன்றி, “அப்பா, எம்மை வானமாமலைக்கு எழுந்தருளச் செய்து, அத்தலத்து எம்பெருமானான தெய்வநாயக னோடு திருக்கல்யாணம் செய்து வையும்” என தெரிவித்தாள். இதேபோல் திருமலைக் கோயில் ஜீயர்களின் கனவிலும் கூறினாள். இதையேற்ற ஜீயர்கள், அவ்வாறே பொன்னடிக்கால் ஜீயரிடம், நாச்சியாரின் விக்கிரகத்தை ஒப்படைத்தனர். பொன்னடிக்கால் ஜீயர் தானே நாச்சியாரை, எம்பெருமானுக்குக் கன்னிகாதானம் செய்து கொடுத்தார். தெய்வநாயகனும் பொன்னடிக்கால் ஜீயரை பெரியாழ்வாரைப்போல “மாமனாராக” கொள்கிறார். இன்றும் இந்த வைபவம் வானமாமலையில் கொண்டாடப்படுகிறது.

ஏராளமான உபதேசங்களை அருளிய, பொன்னடிக்கால் ஜீயர் சுவாமியின் திருவரசை நாங்குநேரியில் தரிசிக்கலாம். அவர் நியமித்தபடி வானமாமலையில் ஆச்சார்ய பரம்பரை தொடர்ந்து வருகிறது. தற்போது, 31ஆவது பட்டம் மதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமிகள், வானமாமலை மடத்தை நிர்வகிக்கிறார்.

30.09.21 பொன்னடிக்கால் ஜீயர் அவதார நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x