பெண்கல்வி: பறக்கத் துடிக்கும் பறவைகள்

பெண்கல்வி: பறக்கத் துடிக்கும் பறவைகள்
Updated on
1 min read

பாகிஸ்தானில் கல்வி உரிமைக்காகப் போராடும் பெண்கள் குறித்து ஷெஹ்சாத் ஹமீது எடுத்த ஆவணப்படம், சிறந்த சமூகச் சித்திரிப்புக்கான படப்பிரிவில் நியூயார்க் திருவிழாவில் விருது பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் கடந்த ஆண்டின் இறுதியில் ஆசியா பசிபிக் குழந்தைகள் உரிமைக்கான விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இந்த விருதுப் பரிந்துரைகளை விட, தனது தேசத்தில் மகளிர் கல்வி தொடர்பான விவாதத்தை இந்த ஆவணப்படம் மூலம் உருவாக்கியிருப்பதே தனக்கு திருப்தியைத் தருவதாக கூறியுள்ளார் ஷெஹ்சாத் ஹமீது கூறியுள்ளார்.

ஆண் என்பதால் வசதிகள்!

ஹமீது தனது ஆவணப்படத்தில் காட்டிய ஸெபானியன் இலவசக் கல்வி மையம் நடத்தும் ஓர் அறைப் பள்ளிக்கு தற்போது கூரை வசதிகளும், பெண் குழந்தைகளுக்கு கணிப்பொறிகளும் கிடைத்துள்ளன.

உலகிலேயே ஐந்தாவது கிரேடு கூட முடிக்காமல் பள்ளியை விட்டு 5.3 மில்லியன் குழந்தைகள் வெளியேறும் நாடு பாகிஸ்தான். உலக நாடுகளில் அதிக குழந்தைகள் வெளியேறும் நாடுகளில் இரண்டாம் இடத்தை பாகிஸ்தான் பெற்றுள்ளது.

“மிகவும் கட்டுப்பாடுகள் மிக்க தந்தைவழிச் சமூகத்தில் பிறந்த நான், ஒரு ஆணாக பெண் குழந்தைகளுக்குக் கிடைக்காத அத்தனை வசதிகளையும் அனுபவித்தேன். நான் அமெரிக்காவுக்கு வந்தபின்னர் தான், அங்குள்ள பெண் குழந்தைகளின் நிலை எத்தனை துயரமானது என்பதை உணர்ந்துகொண்டேன். அதுவே இந்த ஆவணப்படத்தை எடுப்பதற்கான காரணம்” என்கிறார் ஹமீது.

கேமரா எடுக்கவைத்த மலாலா

பெண்குழந்தைகளுக்குக் கல்வி எத்தனை அவசியமானது என்பதை உணர்ந்த ஹமீதை, மலாலா யூசுப்பை தலிபான்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் மிகவும் பாதித்தது. ஹமீது காமிராவைத் தூக்கிய கதை இதுதான். பாகிஸ்தான் தேசத்தில் பொது இடங்களில் பெண்களுக்கு நடக்கும் துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மீதும் ‘ப்ளைட் ஆப் தி பால்கன்ஸ்’ கவனத்தைக் குவித்துள்ளது.

பாகிஸ்தான் போன்ற ஒரு நாட்டில், பெண்கல்வி குறித்து ஒரு ஆவணப்படத்தை எடுப்பது அத்தனை எளிதானதல்ல. கிராமப்புறங்களுக்குப் பயணம் செய்து, அங்குள்ள பெண்களின் அடையாளங்களை மறைத்தே தனது ஆவணப்படத்தை மிகுந்த சங்கடங்களுக்கிடையில் அவர் பதிவுசெய்துள்ளார்.

“குழந்தைகளையும் பெண்களையும் படமெடுக்கும்போது, அவர்களுக்கு எனது இருப்பு மிகுந்த ஜாக்கிரதையுணர்வை அளித்தபடியே இருந்தது. சிலர் என்னிடம் பேசுவதற்கே மறுத்துவிட்டனர். ஏனெனில் அவர்களை வெளியிலிருந்து வந்து சந்தித்த முதல் நபர் நான்தான்” என்கிறார்.

பால்யத் திருமணம், சமூக அழுத்தங்கள், உடல் ரீதியான தண்டனைகள் ஆகிய பிரச்சினைகளைத் தாண்டி கல்வியால் மேலெழும் பாகிஸ்தான் பெண்களின் கதை இது. நாகரிகமும் தன்னிறைவும் அடைவதற்குப் போராடும் பெண்களின் கதை என்பதால் இது நவீன உலகின் கதையும் கூட.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in