Published : 07 Mar 2016 11:09 AM
Last Updated : 07 Mar 2016 11:09 AM

ஜெனீவா கண்காட்சியில் ஃபோக்ஸ்வேகன் விஸ்வரூபம்!

அமெரிக்காவில் புகையளவு மோசடியில் சிக்கி மீளும் முன்பாக இந்தியாவில் நெருக்கடி என பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருக்கிறது ஃபோக்ஸ்வேகன். ஆனால் ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் நடைபெறும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஃபோக்ஸ்வேகனுக்கா இவ்வளவு பிரச்சினை என யாரும் நம்ப மாட்டார்கள். வேறு ஏதாவது ஒரு நிறுவனமாக இருந்தால், இந்த மோட்டார் கண்காட்சியில் பங்கேற்க தயங்கியிருக்கும். ஆனால் தடைகள் ஒருபக்கம் இருந்தாலும் அதையும் மீறி கண்காட்சியில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது ஃபோக்ஸ்வேகன்.

ஜெனீவா மோட்டார் கண்காட்சி ஆண்டுதோறும் நடைபெறும் ஆட்டோமொபைல் கண்காட்சிகளில் மிகவும் முக்கியமானது. இந்தக் கண்காட்சியில் பங்கேற்பதை பெரும்பாலான நிறுவனங்கள் பெருமையாகக் கருதுகின்றன. அந்த வகையில் இம்மாதம் 3-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன.

புதிய கார்கள் பலவும், கான்செப்ட் கார்கள் பலவும் கண்காட்சியில் காண்போரை வியப்பில் ஆழ்த்துவதாக அமைந்திருந்தன.

ஸ்கோடாவின் விஷன் எஸ் கான்செப்ட் கார், வாக்ஸ்ஹெல் ஜிடி கான்செப் கார்கள் இக்கண்காட்சியில் அனைவரையும் தங்கள் வசம் ஈர்த்தன. ஆஸ்டன் மார்டின் டிபி 11, ஆடி க்யூ2, மாஸெரெடி லெவான்டே, ஹோண்டா சிவிக் கான்செப்ட், நியூ ரெனால்ட் சீனிக், வோல்வோ வி 90 எஸ்டேட் கார்களும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

பிரச்சினைகளில் சிக்கியுள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இக்கண்காட்சியில் அடக்கி வாசிக்கும் என்றிருந்த இத்துறையினருக்கு பெருத்த ஆச்சரியம் காத்திருந்தது. அதிரடியாக புகாட்டி சிரானை காட்சிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது ஃபோக்ஸ்வேகன்.

புகாட்டி சிரான் கார் வழக்கமான கார்களை விட நீளமானதாகவும், அகலமானதாகவும் இந்நிறுவனத்தின் பிரபலமான வெரியான் காரை விட 150 கிலோ எடை அதிகமானதாகவும் பார்ப்பதற்கே பிரமிப்பூட்டும் வகையில் இருந்தது.

கார்பன் காம்போசிட் அமைப்பைக் கொண்டிருந்ததால் இதன் எடை அதிகரித்துள்ளது. டைட்டானியம் பிரேக் காலிப்பர்ஸ், மற்றும் புகையளவை உறுதி செய்ய டைட்டானியம் புகை போக்கி ஆகியன இதன் சிறப்பம்சமாகும். 8 லிட்டர் என்ஜின், நான்கு டர்போக்களைக் கொண்டிருப்பதால் இதன் வேகம் மற்ற கார்களைவிட மிக அதிகம். இது 1,500 பிபிஎஸ் மற்றும் 1,600 நியூட்டன் மிட்டர் டார்க் அளவைக் கொண்டு 2000 ஆர்பிஎம் முதல் 6ஆயிரம் ஆர்பிஎம் வரையிலான இயங்கு சக்தியைக் கொண்டுள்ளது. நான்கு சக்கரங்களும் சுழலும் இன்ஜினின் இயக்கத்தோடு தொடர்பு கொண்டவை. 1,500 ஹெச்பி திறனுடன் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2 விநாடிகளில் இது 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிடும். சரியான சாலையாக இருந்தால் மணிக்கு 420 கி.மீ. வேகத்தில் இதில் பயணிக்கலாம். இதன் விலை 24 லட்சம் யூரோவாகும்.

லம்போர்கினி சென்டினாரியோ

கண்காட்சியில் லம்போ்கினியின் சென்டினாரியோ கார் அனைவரது கவனத்தையும் கவர்ந்ததில் வியப்பில்லை. இதுவும் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தைச் சேர்ந்ததுதான். நிறுவனத்தின் நிறுவனர் பெரூசியோ லம்போர்கினியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மேல் பகுதி அனைத்தும் கார்பன் ஃபைபரால் ஆனது. இதனால் இதன் எடை ஒட்டுமொத்தமாக 1,520 கிலோவாகக் குறைந்துள்ளது. 100 கி.மீ. வேகத்தை 2.8 விநாடிகளில் எட்டிவிட முடியும். 23 விநாடிகளில் 300 கி.மீ. வேகத்தைத் தொடும். இதன் அதிகபட்ச வேகம் 350 கி.மீ ஆகும்.

போர்ஷே 911 ஆர்

சிரான், சென்டினாரியோ ஆகிய கார்கள் உருவத்தில் பிரம்மாண்டமாக உள்ளன. ஆனால் இக்குழுமத்தின் மற்றொரு வரவான போர்ஷே 911 ஆர், பார்ப்பதற்கு சிறியதாகவும் அழகாகவும் இருந்தது. இது எடை குறைவானது. விலையும் குறைவானது. காரின் முன்புற பானட் மற்றும் சக்கர பகுதிகள் கார்பன் ஃபைபரால் ஆனவை. இதனால் இக்காரின் எடை 50 கிலோ வரை குறைந்துள்ளது. இது 3.7 விநாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டிவிடும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 325 கிலோ மீட்டராகும்.

ஃபோர்டு கேஏ பிளஸ்

சிறிய ரகக் கார்களுக்கான சந்தை விரிவடைவதைக் கருத்தில் கொண்டு அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனமும் கேஏ பிளஸ் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. 2013-ல் கான்செப்ட் காராக கண்காட்சியில் இடம்பெற்றிருந்த இந்த ரகக் கார் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விரைவிலேயே இது சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோர்டு பியஸ்டா தயாரிக்கும் பிரிவில் இதைத் தயாரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. பியஸ்டாவின் சக்கரங்களின் அளவில் இதன் சக்கரமும் அமைந்துள்ளது. ஐரோப்பிய சந்தையில் மிகவும் விரும்பப்படும் கேஏ கார்களுக்கு மாற்றாக கேஏ பிளஸ் அமையும். இது ஹூண்டாய் ஐ10 மாடல் கார்களுக்கு சவாலாக இருக்கும் என நிறுவனம் கருதுகிறது.

நிசான் பேட்டரி கார்

பேட்டரி கார்களில் நிசானின் தயாரிப்புகள் நடு நாயகமாக விளங்கின. புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பேட்டரி (60 கிலோவாட்) உள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 550 கி.மீ. தூரம் ஓடக் கூடியது. ஏற்கெனவே உள்ள இந்நிறுவன பேட்டரி கார்களை விட இது அதிக செயல் திறன் மிக்கதாகும். பேட்டரி நீண்ட காலம் உழைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. வயர்லஸ் முறையில் பேட்டரி சார்ஜ் செய்யும் கார்களைத் தயாரிக்க நிசான் தீவிரம் காட்டி வருகிறது. சிக்னல் விளக்குகளில் நிற்கும்போது கூட பேட்டரி சார்ஜ் ஆகும் வகையில் இந்த கார்கள் இருக்குமாம்.

பொதுவாக ஆட்டோமொபைல் கண்காட்சிகள் இத்துறை நிறுவனங்களின் தயாரிப்புகளை களமிறக்க ஒரு பொது வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பை இம்முறை ஃபோக்ஸ்வேகன் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளது.

பிரச்சினைகளில் சிக்கியுள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இக்கண்காட்சியில் அடக்கி வாசிக்கும் என்றிருந்த ஆட்டோமொபைல் துறையினருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதிரடியாக புகாட்டி சிரானை காட்சிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது ஃபோக்ஸ்வேகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x