Last Updated : 20 Feb, 2016 12:10 PM

 

Published : 20 Feb 2016 12:10 PM
Last Updated : 20 Feb 2016 12:10 PM

வில்லங்கச் சான்றிதழை எளிதாகப் பெற...

இன்று எந்த ஒரு வேலையையும் சுலபமாக முடிக்க ஆன்லைன் சேவைகள் வந்துவிட்டன. இடத்தில் இருந்தபடியே எதையும் ஆன்லைன் மூலமாக அறியவும் பெறவும் முடிகிறது. ஈ.சி. (என்கம்ப்ரன்ஸ் சர்டிபிகேட்) எனப்படும் வில்லங்கச் சான்றிதழைகூட எளிதாக ஆன்லைனில் பெற முடிகிறது. ஆனால், இதுபற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இன்னும் குறைவாகவே உள்ளது. இப்போதும்கூட வில்லங்கச் சான்றிதழ் கேட்டு பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நடையாய் நடக்கிறார்கள். ஆன்லைனில் வில்லங்கச் சான்றிதழை பெற என்ன வழி?

சொத்துகளை வாங்குவதற்கு முன்பு அந்தச் சொத்துகள் குறித்த ஆவணங்களைச் சரிபார்ப்பது மிக அவசிய தேவையாகிவிட்டது. ஆவணங்கள்தான் சொத்துக்கு யார் உரிமை உள்ளவர் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு சான்றாக உள்ளது. அப்படிச் சொத்துக்கு உரிமை உள்ளவரை அறியப் பயன்படும் ஓர் ஆவணம்தான் வில்லங்கச் சான்றிதழ். வில்லங்கச் சான்றிதழ் என்பது ஒரு சொத்து யாருடைய கைகளில் இருந்து எப்படி மாறி வந்துள்ளது, சொத்து உரிமை யாருக்கு மாற்றப்பட்டது போன்ற விவரங்களை அறிந்துகொள்ளும் ஆவணமாக உள்ளது. எனவே சொத்து வாங்குவதில் வில்லங்கச் சான்றிதழ் எப்போதுமே முக்கியத்துவம் பெறுகிறது.

ஒரு சொத்தை வாங்க விரும்புவர்கள், அந்தச் சொத்தில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா, சொத்தை விற்பவர் பெயரில்தான் அந்தச் சொத்து உள்ளதா என்பதை அறிவதற்காகச் சொத்து விவரத்தைத் தெரிவித்து வில்லங்கச் சான்றிதழ் எடுத்துப் பார்ப்பார்கள். ஆன்லைன் வசதி வருவதற்கு முன்பாகப் பத்திரப்பதிவு அலுவலகத்துக்குச் சென்று வில்லங்கச் சான்றிதழுக்காக விண்ணப்பித்து காத்திருக்க வேண்டிய நிலை முன்பு இருந்தது. இப்போது அதை எளிதில் ஆன்லைனிலேயே நொடிப் பொழுதில் பார்க்கவும் முடிகிறது. தேவைப்பட்டால் அதை பதிவிறக்கமும் செய்துகொள்ள முடிகிறது.

வில்லங்கச் சான்றிதழில் குறிப்பிட்ட சொத்து பதிவு செய்யப்பட்ட தேதி, எந்த ஆண்டுகளில் யார் பெயரில் இருந்தது?, யார் யாரிடம் கைமாறி வந்திருக்கிறது? உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். ஆன்லைனில் வில்லங்கச் சான்றிழைப் பெற அதில் கேட்கப்பட்ட விவரங்களைச் சரியாக நிரப்ப வேண்டும். அதைச் சரியாகச் செய்தாலே வில்லங்கச் சான்றிதழை மிக எளிதாகப் பெற்றுவிடலாம். இந்த வில்லங்கச் சான்றிதழைப் பெற பத்திரப் பதிவு இணையதளத்தில் விண்ணப்பித்து, வில்லங்கச் சான்றிதழைப் பெறலாம். மேலும் இணையதளம் மூலம் நேரடியாக வில்லங்கச் சான்று விவரங்களைத் தெரிந்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.

ஆன்லைனில் வில்லங்கச் சான்றிதழைப் பார்க்க/பெற என்ன செய்ய வேண்டும்? அதற்கு முதலில் http://ecview.tnreginet.net என்ற இணையதள முகவரிக்குச் செல்ல வேண்டும். தமிழ்நாடு முழுவதும் இருக்கும் 9 பத்திரப்பதிவு மண்டலங்களில் குறிப்பிட்ட சொத்து எந்த மண்டலத்தில் உள்ளது என ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கும். அந்த மண்டலத்தின் பெயரைச் சொடுக்கினால் அடுத்ததாக அந்தச் சொத்து எந்தப் பத்திரப்பதிவு மாவட்டத்தில் வருகிறது என்ற விவரத்தைக் குறிப்பிட வேண்டும்.

இதன்பிறகு அந்தக் குறிப்பிட்ட சொத்துக்கு எத்தனை வருடங்களுக்கு வில்லங்கம் பார்க்க வேண்டும் என்று கேட்கப்பட்டிருக்கும். அதை தேதியுடன் குறிப்பிட வேண்டும் ( இணையதளத்திலேயே எத்தனை வருடங்கள் வரை வில்லங்கம் பார்க்கலாம் என்ற விவரம் ஆண்டுகளுடன் குறிப்பிடப்பட்டுள்ளது). பின்னர் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகம், அது எந்தக் கிராமத்தை உள்ளடக்கியது போன்றவற்றை நிரப்ப வேண்டும்.

எந்தச் சொத்துக்கு வில்லங்கம் பார்க்கப் போகிறோமோ, அந்தச் சொத்துக்குரிய புல எண்ணை (சர்வே எண்) குறிப்பிட வேண்டும். அந்த சர்வே எண்ணுக்கு உட்பிரிவு (சப் டிவிஷன்) எண் கேட்கப்பட்டிருக்கும். அதையும் சரியாக நிரப்ப வேண்டும். இந்தக் கேள்விகளைச் சரியாக நிரப்பிவிட்டால் கம்ப்யூட்டர் திரையில் வில்லங்கச் சான்று விவரம் தோன்றும். அதைப் பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம். இந்த வேலையைச் செய்து முடிக்க அதிகபட்சம் இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஆகாது. ஆனால் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான விவரங்களை நிரப்ப வேண்டும்.

இதில் ஏதேனும் சந்தேகம், விசாரணை இருந்தால் அந்தக் குறிப்பிட்ட சார் பதிவாளர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x