Published : 05 Feb 2016 12:26 PM
Last Updated : 05 Feb 2016 12:26 PM

சினிமா ரசனை 34: துயரத்தின் காதலன்

‘காதல்’ என்ற வஸ்துபோல வேறு எதுவும் இத்தனை தமிழ்ப் படங்களில் கையாளப்பட்டதே இல்லை. எந்தக் கதையாக இருந்தாலும் அதில் எப்படியாவது ஒரு காதல் நுழைந்துவிடும். அப்படி நுழையும் காதல் பெரும்பாலும் ஊறுகாய் போலத்தான் தொட்டுக்கொள்ளப்பட்டிருக்கும். நாயகனும் நாயகியும் சந்தித்ததும் காதல்; உடனேயே ஒரு பாடல்; இவர்கள் காதலில் பிரச்சினை; பின்னர் மறுபடியும் சேருதல்; அந்த நேரத்தில் ஒரு குத்துப்பாட்டு; பின்னர் சுபம். இதுதான் பெரும்பாலான தமிழ்ப் படங்களின் காதல்.

இயக்குநர்களின் பார்வையில்

எப்போதாவதுதான் ஸ்ரீதர், பாரதிராஜா, மணி ரத்னம் போன்றவர்கள் வந்தார்கள். பாலசந்தரின் ஒரு சில படங்களையும் எடுத்துக்கொள்ளலாம். பாரதிராஜா காதலின் கொண்டாட்டத்தையும், சிறுசிறு அழகான பரிமாற்றங்களையும் காட்டினார். மணி ரத்னத்தின் காதல், எல்லாப் பக்கங்களிலும் இனிமை, மகிழ்ச்சி ஆகியவை பொங்கி வழியும் குறும்பான காதலாக இருந்தது. ஸ்ரீதரின் காதல் இயல்பானது.

இவர்களை ஆதர்சங்களாகக் கொண்ட கதிர், வஸந்த், சரண், ஜீவா, கௌதம் போன்ற இயக்குநர்கள் ஒன்று, மணி ரத்னம் படங்கள் போலவோ, அல்லது பாலசந்தர் படங்களைப் போலவோ காதலைக் காட்டினர். காதலுக்கு வெளியே நின்று காதலைக் கவனிப்பதுபோன்ற படங்கள் இவர்களுடையவை. நல்ல படங்களை எடுத்தாலும், இவர்களின் காதலில் ஆழம் சற்றே குறைவுதான்.

காதல் என்ற ஒன்று நம்மைத் தாக்கும்போது அதில் மகிழ்ச்சி மட்டுமே இல்லையல்லவா? அந்த மகிழ்ச்சியோடு நெருங்கிய தொடர்புடைய சோகமும் துயரமும் காதலின் இரண்டு முக்கியமான விளைவுகள். இவை ஒரு மனிதனை எப்படி ஆட்டிப்படைக்கின்றன என்பது பற்றிய மிக இயல்பான சித்தரிப்புகளை உள்ளது உள்ளபடி எந்த ஜோடனைகளும் இல்லாமல் இவர்களில் யாரும் காட்டியதில்லை என்றே தோன்றுகிறது. என்னவெனில், பல உணர்வுகளால் தாக்குறும் மனம், இந்த உணர்வுகள் ஒவ்வொன்றையும் எப்படிக் கையாள்கிறது? எப்படி ஒரு மனிதனைச் செலுத்துகிறது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இவர்களிடம் பதில் இருக்காது.

செல்வராகவனின் உலகம்

அப்படிப்பட்ட இருண்ட பகுதியை மிகவும் வெளிப்படையாக, உள்ளது உள்ளபடி செல்வராகவனைப் போன்று வேறு யாருமே காட்டியதில்லை. காதலை அழுத்தமாகக் கையாண்ட இவரது படங்களில், கதாநாயகனே இருண்ட தன்மை உடையவனாகவும் இருப்பான். தனியாக வில்லன் என்று ஒரு கதாபாத்திரம் இருக்காது. இந்தக் கதாநாயகன் உளவியல் ரீதியாக, மனதில் ஒரு பெண்ணை விரும்பத் தொடங்கியதும் ஏற்படும் மாற்றங்களால் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறான் என்பதே செல்வராகவனின் பெரும்பாலான படங்களின் கருத்தாக இருக்கிறது. ‘துள்ளுவதோ இளமை (எழுத்து மட்டும்)’, ‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெய்ன்போ காலனி’, ‘யாரடி நீ மோகினி’ (தெலுங்கு), ‘மயக்கம் என்ன’, ‘மாலை நேரத்து மயக்கம்’ (எழுத்து மட்டும்) ஆகிய படங்களை எடுத்துக்கொண்டால், இப்படங்களின் நாயகர்கள், அவர்களது மனதில் ஏற்படும் சலனங்கள், அந்தச் சலனத்துக்குக் காரணமாக இருந்த பெண்கள், அந்தச் சலனத்தால் இவர்களின் மனதில் ஏற்படும் விளைவுகள் ஆகிய உணர்வுகள் மிகவும் இயல்பாகக் கையாளப்பட்டிருப்பதை உணர முடியும்.

இந்த நாயகர்களுக்கு இருக்கும் உளவியல் பிரச்சினைகள், அவர்களின் மனதில் எழும் காதலைப் புரிந்துகொள்வதில் அவர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்துகின்றன. ‘துள்ளுவதோ இளமை’யின் நாயகன் மகேஷ் தன் பெற்றோரை எப்படிப் புரிந்துகொள்கிறான்? இவனைப் பொறுத்தவரையில் அவர்கள் எப்போதும் சண்டையிட்டுக்கொண்டிருப்பதையோ, அல்லது தந்தை குடித்துக்கொண்டி ருப்பதையோ, உறவு கொள்வதையோதான் படத்தின் தொடக்கத்தில் பார்க்கிறான். ‘காதல் கொண்டேன்’ படத்தில், அநாதையாக இருக்கும் ஒருவன், தனது குழந்தைப் பருவத்தில் துன்புறுத்தப்படுவதனால் மனம் பாதிக்கப்பட்டு, கல்லூரியில் சேரும்போது அங்கே பிறர் இவனைப் புரிந்துகொள்ளாததன் பிரச்சினை பேசப்படுகிறது. ‘7ஜி ரெய்ன்போ காலனி’யில், தந்தையுடன் எப்போதும் சண்டையிட்டுக்கொண்டே இருக்கும் கதிர், அவனது குடும்பப் பின்னணி ஆகிய விஷயங்கள் காட்டப்படுகின்றன. மயக்கம் என்ன படத்தில், பெற்றோர்கள் இல்லாத கதிர், அவனது நண்பர்கள், அவனது நண்பனின் காதலியின்மேல் ஏற்படும் காதல், அவனது ஆதர்சமான நபர் ஒருவர் இவனை ஏமாற்றுவதன் வலி ஆகியவை பேசப்படுகின்றன.

இப்படிப்பட்ட நாயகர்களை எழுதுவதோ, அவர்களுக்கு ரத்தமும் சதையுமான குணாதிசயங்களை அளிப்பதோ எளிது அல்ல. இவர்களை போகிறபோக்கில் உருவாக்கிவிட முடியாது. மனதில் இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் உருவாகி, அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போதுதான் இவை இயல்பான கதாபாத்திரங்களாக மாறுகின்றன. இவைகளுக்குள் நிகழும் காதலோ, அதன் பின் அதனால் இவர்களின் மனதில் ஏற்படும் மாற்றமோ - எதுவாக இருந்தாலும் அவைகளையும் இயல்பாகக் காட்டுவது கடினமான செயலே. அதையும் தாண்டி அவைகளை நிஜ வாழ்க்கையில் நாம் காணும் மனிதர்களைப்போல் உருவாக்கி உலவவிடுவது பலராலும் முடியாது. அதை செல்வராகவனின் படங்கள் பெரும்பாலானவற்றில் காண முடியும்.

வெளிப்படையும் பூடகமும்

முக்கியமான கதாபாத்திரங்களை உருவாக்கும் அதே வகையில் பிற கதாபாத்திரங்களையும் செல்வராகவன் படங்களில் காண முடியும். உதாரணமாக, ‘காதல் கொண்டேன்’ படத்தில், ஒரு காட்சியின் பின்னணியில், அனாயாசமாக, ‘இத்தோட நாலஞ்சாயிடுச்சு… பார்த்து டீல் பண்ணு’ என்பதுபோன்ற ஒரு வசனம் உருவமற்ற ஒலியாக வரும். அந்த வசனம் பூடகமாகக் கொடுக்கும் தாக்கம் மறக்கமுடியாதது. குழந்தைகளைப் பாலியல் அத்துமீறல் செய்யும்போது அவை இறந்துவிடுவதை விளக்கும் ஒரே வரி வசனம் அது.

கதாபாத்திரங்களின் மனதில் நிகழும் சிக்கல்கள், அந்தச் சிக்கல்களால் அவை பாதிக்கப்பட்டுத் துயரம் அடைவது, அதனால் வேறு பல சம்பவங்கள் நடப்பது ஆகிய காட்சிகளை செல்வராகவன் படங்களில் கண்டதுபோல வேறு தமிழ்ப் படங்களில் இத்தனை இயல்பாக நான் பார்த்ததில்லை. மிகச் சிறிய ஷாட்களிலேயே உணர்ச்சிகளின் அழுத்தத்தை செல்வராகவன்போல உணர்த்தியவர்களும் மிகச் சொற்பமே. உதாரணமாக, ‘மயக்கம் என்ன’ படத்தில் நாயகி யாமினி, நாயகன் கார்த்திக்கை அவ்வப்போது கவனிக்கும் காட்சிகள். அவன் அவளைக் காதலிக்கிறான் என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். அந்த உணர்ச்சியை அவளது பார்வை ஆங்காங்கே மின்னல்வெட்டைப் போல் வெளிப்படுத்தும். இதைப் போலப் பல ஷாட்கள் அவரது எல்லாப் படங்களிலும் உண்டு.

இதைத் தாண்டி, ஒட்டுமொத்தமாகப் பார்க்கையிலும், ‘மயக்கம் என்ன’ படத்தில் கார்த்திக்கால் யாமினி பாதிக்கப்படும் காட்சிகள், ‘காதல் கொண்டே’னில் வினோத் திவ்யாவை ஊட்டியில் பார்த்துக்கொள்ளும் காட்சிகள், ‘7ஜி ரெய்ன்போ காலனி’ படத்தில் கதிரும் அனிதாவும் வீட்டை விட்டு ஓடிய பின்னர் வரும் காட்சிகள் என்று பல காட்சிகளில் உணர்வுகளை மிக இயல்பாகக் கையாண்டிருப்பார் செல்வராகவன். கதை என்பதைத் தாண்டி, இத்தகைய உணர்வுகளை வெளிப்படையாகவும், அப்பட்டமாகவும் காட்டுவதில் செல்வராகவன் கைதேர்ந்தவர். ‘புதுப்பேட்டை’ படத்தையுமே இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

திடமான பெண்மை

செல்வராகவனின் படங்களில் இடம்பெறும் பெண் கதாபாத்திரங்கள் மிக முக்கியமானவர்கள். மனதளவில் மிகவும் திடம் மிகுந்தவர்கள். படங்களின் நாயகர்களின் மனப் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு, அவர்களுக்குத் தைரியம் கொடுத்து, அவர்களை ஒரு தாயைப்போல் கவனித்துக்கொள்ளும் தேவதைகள் இவர்கள். ‘மயக்கம் என்ன’ படத்தில் வரும் யாமினியின் கதாபாத்திரத்தை யாரால் மறக்கமுடியும்?

‘7ஜி’ படத்தில் வரும் அனிதா, கதிருக்கு எப்படிப்பட்ட பக்கபலமாக இருக்கிறாள் என்று யோசித்துப்பாருங்கள். ‘காதல் கொண்டேன்’ படத்தில் திவ்யாதான் நாயகன் வினோத்தை முதன்முதலில் புரிந்துகொள்கிறாள். இப்படியாக, மனது முழுதும் சிக்கல் நிறைந்த நாயகர்களை இயல்பாக ஒரு குழந்தையைப்போல் புரிந்துகொள்ளும் நாயகிகள் செல்வராகவன் படங்களில் தவறாமல் இடம்பெறுவார்கள். இந்த நாயகர்களின் கோபம் அவர்களை எதுவும் செய்யாது. ’பிறைதேடும் இரவிலே’ பாடலின் வரிகளில் சித்தரிக்கப்படும் உணர்வுகள்தான் அவரது நாயகிகளின் உணர்வுகள்.

செல்வவராகவனின் மற்றொரு பலம், இசை. யுவன் ஷங்கர் ராஜாவிடமும் ஜி.வி.பிரகாஷிடமும் அற்புதமான பாடல்களை வாங்கியிருக்கிறார். அவரது படங்களின் பின்னணி இசையும் கவனிக்கத்தக்கது. இப்படிப்பட்ட அவரது இயல்பான களத்தில் படங்கள் எடுக்காமல், அவ்வப்போது ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் போன்ற படங்களையும் அவர் எடுக்க நேர்கிறது. செல்வராகவனின் இயல்பான களத்தில் வேறு யாருமே இல்லை. அங்கே அவர்தான் சக்கரவர்த்தி. ஆனால் பிற களங்களில் படங்கள் எடுக்கக்கூடியவர்கள் பலர் உண்டு. அப்படிப்பட்ட அம்சங்களை விடவும், மனம், உணர்வுகள், அவற்றின் வெளிப்பாடு என்ற களம்தான் செல்வராகவன் நின்று விளையாடக்கூடிய களம். இப்படிப்பட்ட படங்களை இனியும் செல்வராகவன் எடுக்க வேண்டும். தமிழ் சினிமாவுக்கு இந்த வகையில் செல்வராகவனின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x