Last Updated : 19 Sep, 2021 04:13 AM

 

Published : 19 Sep 2021 04:13 AM
Last Updated : 19 Sep 2021 04:13 AM

முகங்கள்: ஆயிரத்தில் ஒருவர்!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட 24 வகையான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நாடு முழுவதும் இருந்து ஒவ்வொரு வருடமும் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இந்தத் தேர்வுகளை எழுதுகின்றனர். அவர்களில் ஆயிரக்கணக்கானவர்களே தேர்வு செய்யப்படுகின்றனர். திவ்யா, ஆயிரத்தில் ஒருவர்!

கோவையைச் சேர்ந்த திவ்யா 2018-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, தற்போது டெல்லியில் ஐபிஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் பெற்றோருடன் வசித்துவரும் திவ்யா படுகர் இனத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை தேவேந்திரன், கோவை மாநகரக் காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவருகிறார். மூன்று முறை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி அதில் தோல்வியடைந்தாலும், மனம் தளராமல், நான்காம் முறையாக மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார் திவ்யா.

கோவை மணி மேல்நிலைப்பள்ளியிலும், கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியிலும் படித்தார். 2014-ம் ஆண்டு முதல் முறையாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். அதில் முதல்நிலைத் தேர்விலேயே தோல்வியடைந்தார். 2015, 2016-ம் ஆண்டுகளில் தேர்வு எழுதியும், அவற்றிலும் முதல்நிலைத் தேர்விலேயே தோல்வியடைந்தார். மூன்று அடியைப் பொறுமையாக வாங்கிக்கொண்டு நான்காம் அடி தன் மேல் விழுவதற்குள் சீறிப்பாய்கிற நம் திரை நாயகர்களைப் போலத்தான் திவ்யாவின் வாழ்க்கையிலும் நான்காம் தேர்வு அமைந்தது. “தோல்விடையந்தது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தினாலும், நான் மனம் தளரவில்லை. சோர்ந்துவிடவில்லை. என்னால் முடியும் என என்னை நானே ஊக்கப்படுத்திக்கொண்டேன். தோல்விகளைத் துடைத்தெறிய நான்காம் முறையும் தேர்வு எழுதினேன். அதில் முதல் நிலை, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என அனைத்திலும் தேர்ச்சி பெற்றேன். அகில இந்திய அளவில் 560ஆவது இடத்தைப் பிடித்தேன்” என்கிறார் திவ்யா. அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம், ஜம்மு காஷ்மீர், யூனியன் பிரதேசங்கள் ஆகிய இடங்களில் பணிபுரிகிற வகையில் ‘அர்முத்’ நிலையில் இவருக்குப் பணி ஒதுக்கப்பட்டது. அதையொட்டி தற்போது டெல்லியில் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருப்புதல் முக்கியம்

சிவில் சர்வீஸ் தேர்வின் அடிப்படை தெரிய வேண்டும் என்பதற்காக சென்னையில் ஓராண்டு தங்கி, ஒரு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார். தன்னை மேம்படுத்த, வேறு பல போட்டித் தேர்வுகளையும் எழுதிவந்தார். அப்போது ஆடிட்டிங் தேர்வில் வெற்றி பெற்று, கோவையில் பணி கிடைத்தது. அந்தப் பணியைத் தொடர்ந்துகொண்டே, சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தன்னைத் தயார்படுத்திவந்தார். “என் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அளப்பரியது. அவர்களது ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்தத் துறைக்குள்ளேயே நான் சென்றிருக்க முடியாது. பொதுவாக சிவில் சர்வீஸ் தேர்வுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் இடம்பெறும். அதற்கான புத்தகங்களைத் தேடித் தேடி வாங்கினேன். சென்னையிலும், இத்தேர்வுக்கு தேவையான புத்தகங்களை வாங்கினேன். சிலர் 18 மணி நேரம் படித்தேன், 20 மணி நேரம் படித்தேன் என்பர். அது சாத்தியம் இல்லாத விஷயம். மேலும், நான் வேலைக்குச் சென்றுகொண்டு இருந்ததால், தினமும் சராசரியாக 4 முதல் 6 மணி நேரம் படித்தேன். தேர்வு சமயங்களில் பணிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு, 12 மணி நேரம் வரை படித்தேன். நான் எந்தப் பாடத்தைப் படித்தாலும், படித்த பாடங்களை அந்த வாரத்தின் இறுதியில் ஒருமுறை எழுதிப் பார்த்துக்கொள்வேன். ரிவிஷன் எனப்படும் படித்த பாடங்களைத் திரும்பப் படிப்பதும் எழுதுவதும் மிகவும் முக்கியம்” என்று வெற்றிக்கான குறிப்புகளைத் தருகிறார் திவ்யா.

கிரண்பேடியிடம் பாராட்டு

திவ்யாவின் தந்தை 30 ஆண்டுகளாகக் காவல்துறையில் பணியாற்றி வருவதால் அந்தத் துறை குறித்த அறிமுகம் இவருக்கு உண்டு. அதனாலேயே சவால்கள் நிறைந்த இந்தத் துறையை திவ்யா விரும்பி ஏற்றார். “ஒரு பெண்ணால் எப்படி காவல்துறை பணியை மேற்கொள்ள முடியும், மீண்டும் தேர்வு எழுதி வேறு பணிக்குச் சென்றுவிடு என நிறைய பேர் எனக்கு அறிவுரை கூறினர். ஆனால், அவற்றை நான் ஏற்கவில்லை. என்னைப் பொறுத்தவரை பெண் என்பவள் ஆணுக்கு நிகரானவள். பெண்களால் நிச்சயம் சிறப்பாகப் பணிபுரிய முடியும். ஹைதராபாத்தில் உள்ள நேஷனல் போலீஸ் அகாடமியில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றுள்ளேன். சவால்கள் நிறைந்த பல்வேறு பயிற்சிகள் அதில் அளிக்கப்பட்டன. அந்தப் பயிற்சிகள் என்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தயார்படுத்தின. ஆறு மாதம் பாண்டிச்சேரியில் களப் பயிற்சியில் ஈடுபட்டபோதும், பல்வேறு அனுபவங்களைப் பெற்றேன். பாண்டிச்சேரியில் களப் பணியில் இருந்தபோது, அப்போதைய துணைநிலை ஆளுநரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கிரண்பேடியின் கீழ் பணியாற்றினேன். அவரது ஆலோசனை களைப் பெற்றேன். ஒரு போக்சோ வழக்கில் சிறப்பாகப் பணியாற்றியதால் என்னை அவர் பாராட்டினார்” என்று புன்னகைக்கிறார்.

கவனச் சிதறல் வேண்டாம்

போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள், தோல்வியைக் கண்டு மனம் தளரக் கூடாது என்று சொல்லும் திவ்யா, தன் வாழ்க்கையையே அதற்கு உதாரணமாகச் சொல்கிறார். “தற்போதைய சூழலில் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பலவும் கவனச்சிதறல்களை ஏற்படுத்துகின்றன. நமக்குக் கிடைத்திருக்கும் தொழில்நுட்ப வசதியை நாம் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர நம் நேரத்தை அவற்றுக்கு இரையாக்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக நம்மால் எல்லாம் முடியும் என்கிற நம்பிக்கை அவசியம். காரணம் நம்பினார் கெடுவதில்லை” என்று உற்சாகத்தோடு விடைகொடுத்தார் திவ்யா.

படங்கள்: ஜெ.மனோகரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x