Published : 17 Sep 2021 18:01 pm

Updated : 17 Sep 2021 18:01 pm

 

Published : 17 Sep 2021 06:01 PM
Last Updated : 17 Sep 2021 06:01 PM

வாழ்வைத் தேடி வடக்கே போறோம்!

let-s-go-north-in-search-of-life

முன்ன பின்ன அங்க போயி பழக்கம் இல்லைதான். ஆனா எங்களுக்கு வேற வழி இல்லை. அதான் பெண்டு பிள்ளைகளெல்லாம் கூட்டிட்டு வடக்கு பக்கமா போலாம்னு இருக்கோம். நீங்க படிச்சிக்கிட்டு இருக்கிறது சரிதான். வடக்கு பக்கம்னுதான் சொன்னேன். கரோனாவின் ஆரம்ப நாட்களில் வடக்குலதானே பல லட்சக்கணக்கானவர்கள் ஒட்டிய வயிற்றுடன் நடைபயணமாய் வெளியேற்றியது என யோசிக்கிறீர்களா?

எங்களின் துயரம் கரோனா காலத்திற்கும் முந்தையது. எங்களுக்கும் மூச்சு முட்டுது. இனப்பெருக்கத்திற்கான நன்னீரைத் தேடி அலைவதால் மிகவும் சோர்வடைஞ்சிட்டோம். உங்களைப் போல உணவை ஆர்டர் செய்யத் தெரியாததால், அதற்கான தேடலோ இன்னும் கொடுமை. விழியோடு சேர்ந்த சுமார் 30,000க்கும் மேற்பட்ட கண்களும் பிதுங்கித்தான் விட்டன.


எப்படியோ 1970-ன் ஆரம்பக் காலகட்டம் வரை பொறுத்துகொண்டோம். அதற்கு மேல் பொங்கியெழ வேண்டிய கட்டாயம், எங்களின் சிறிய தலைகளின் மீது திணிக்கப்பட்டுவிட்டது. நீங்கள் உருவாக்க நினைக்கும் புதிய இந்தியாபோல அல்லாமல் பல வண்ணங்களில் வடிவ வேறுபாடுகளுடன் மிகவும் அழகாக நாங்கள் அனைவரும் இருப்பதாகப் பலரும் பாராட்டுவதைக் கேட்டுள்ளோம். இப்பொழுதோ இவையனைத்தையும் தக்கவைக்க முடியும் எனத் தோன்றவில்லை.

நாங்கள் பூமியில் வாழ்ந்த இந்த 300 கோடி ஆண்டுகள்ல பல மாறுதல்களைச் சந்தித்திருந்தாலும் வடசென்னை கதாநாயகனைப் போல சண்டை செய்துள்ளோமே தவிர, தூர தேசத்திற்கு ஓடி போகணும்னு நினைச்சதில்லை. உங்களைப் பத்தி தெரியல, ஆனா அவரோட வருகையை அறிவிக்க எங்களைத் தேடி வரும் மழை அண்ணாச்சியை நினைத்தால்தான் கொஞ்சம் வருத்தமாக உள்ளது. இன்னும் நாங்க யாருன்னு தெரியலையா?

எங்களைத் தும்பிகள்னு சொல்லுவாங்க. தட்டான்பூச்சின்னு சொன்னா உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன். சில ஆராய்ச்சியாளர்களும் பூச்சி ஆர்வலர்களும் வானூர்திக்கு (ஹெலிகாப்டர்) நாங்கள்தான் முன்னத்தி ஏர் என்றெல்லாம்கூட எழுதுகிறார்கள். ஆனால், அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. தெரிந்ததெல்லாம் நன்னீர் தேங்கியுள்ள இடங்களில் முட்டையிடுவதும், அதிலும் தாவரங்களிலும் வாழும் கொசுக்களைப் பிடித்துச் சாப்பிடுறதுதான்.

நன்னீர் வாழிடங்களின் மாசுபாடு, வேதி மருந்துகளின் தாக்கம் எனப் பல பாதிப்புகளைச் சமாளித்த எங்களால் காலநிலை மாற்றம் எனும் காலனைச் சமாளிக்க முடியவில்லை. ஏற்கெனவே செய்திகளில் பார்த்திருப்பீர்களே! காலநிலை மாற்றத்தால் பறவைகள் போன்ற சில உயிரினங்கள் தங்கள் உடலமைப்பில் பல மாற்றங்கள் அடைந்துள்ளன. தும்பிகளாகிய எங்களுக்கோ அவ்வளவு கால அவகாசம் இல்லாததால், நாங்கள் வடக்கு நோக்கி எங்கள் எல்லைகளை விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளோம். இதனால் சுற்றுச்சூழல் பன்முகத்தன்மை பாதிப்படையும் என்றெல்லாம்கூட சொல்கிறார்கள். அதனாலென்ன? ஆண்டிற்கு ஒருமுறை ‘சேவ் நேச்சர்’ என நீங்கள் போடும் ஒரு ஹேஷ்டேக் போதாதா, உயர்ந்துகொண்டிருக்கும் புவியின் வெப்பநிலையை ஒரு டிகிரி அளவிற்கு குறைத்து, எங்களையும் மற்ற உயிர்களையும் காப்பாற்றிவிட?

கட்டுரையாளர்: சூரியா.சு,

உதவிப் பேராசிரியர்,

தொடர்புக்கு: suriya.sundararajan1@gmail.com


தவறவிடாதீர்!உயிரினங்கள்பூச்சியினங்கள்சுற்றுச் சூழல்One minute newsNatureஇயற்கைSave natureஇயற்கை பாதுகாப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x