Published : 15 Sep 2021 03:10 AM
Last Updated : 15 Sep 2021 03:10 AM

கதை: கடைக்குட்டிச் சிங்கம்

எஸ்.அபிநயா

தாய் சிங்கம் ஈன்றெடுத்த மூன்று பெண் குட்டிகளில், கடைக்குட்டியின் மீதான கவனம் அதிகமாக இருந்தது. எந்நேரமும் தன் காலைச் சுற்றிக்கொண்டு, வெளியில் எங்கும் செல்லாமல் ஒருவிதப் பய உணர்வுடன் அருகிலேயே இருக்க வேண்டும் என்று அது அடம்பிடிப்பது கவலையாக இருந்தது.

மற்ற இரண்டு குட்டிகளுடன் விளையாட போகச் சொன்னாலும், ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்துவிடுகிறது. வேட்டைக்குச் செல்லும் நேரத்தில் குகையை விட்டு வெளியே வருவதில்லை. வீரம் என்பதை அறியாமல் பயந்தாங்கொள்ளியாகக் கடைக்குட்டி வளர்கிறாளே என்று வருந்தியது தாய் சிங்கம்.

பிறந்தபோது மூன்று குட்டிகளுமே ஒன்றாகத் தாய்ப்பால் அருந்தி, விளையாடிக் கொண்டுதான் இருந்தன. ஒருமுறை தாய் சிங்கம் வேட்டையாடச் சென்றிருந்த நேரத்தில், கடைக்குட்டி தனியாக உலவிக்கொண்டிருந்தபோது, காட்டு எலி ஒன்று இதனைக் கண்டு பயந்து விழிக்க, இது எலியின் பயந்த முகத்தைக் கண்டு பயந்து குகைக்கு ஓடிவந்துவிட்டது. அம்மா வந்த பிறகு நடந்ததைக் கூறியது.

‘‘ஒரு எலிக்கு, சிங்கம் பயப்படலாமா?” என்று சிரித்த தாய் சிங்கம், சிறு விலங்குகள் பெரிய விலங்குகளைப் பார்த்தால் பயப்படும் என்பதைப் புரியவைத்தது. ஆனால், கடைக்குட்டிக்கு எதுவும் காதில் விழவில்லை. பயத்துடன் அமர்ந்திருந்தது.

அன்றிரவு காடு முழுவதும் பலத்த காற்றுடன் மழை பொழிந்தது. உணவு எதுவும் கிடைக்காமல் குகைக்குள்ளேயே அடைந்து இருந்த தாய் சிங்கம், பொழுது விடிந்ததும் குட்டிகள் எழுவதற்கு முன்பே உணவைத் தேடிக் கிளம்பிவிட்டது.

தூங்கி எழுந்ததும் அம்மாவைக் காணோமே என்கிற தவிப்பில் மற்ற இரண்டு சிங்கக்குட்டிகள் வெளியில் வந்து தேட ஆரம்பிக்க, கடைக்குட்டியும் பின்னாலேயே வந்தது.

எதிர்பாராமல் ஒரு பூச்செடியின் மேல் மோதிவிட்டது. முன்னிரவு பெய்திருந்த மழையில் நனைந்திருந்த இலைகளிலிருந்து நீர்த்திவலைகள் கீழே சிந்தின. அதிர்ச்சி அடைந்த கடைக்குட்டி, உடல் சிலிர்க்க செடியை நிமிர்ந்து பார்த்தது. அங்கே ஒரு வண்டு ஊர்ந்துகொண்டிருந்தது.

வண்டு தன்னைக் கொட்டுவதற்காக மழை நீரைத் தெளித்ததாக நினைத்த கடைக்குட்டி, ‘‘அக்கா, காப்பாற்றுங்கள்” என்று அலறியது.

தாய் சிங்கத்திற்கு இது பெரிய கவலையாகத் தோன்ற, எலிக்கும் வண்டுக்கும் பயப்படும் கடைக்குட்டியை எப்படியாவது வீராங்கனையாக மாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் கரடியை வரச் சொன்னது. விஷயத்தைக் கேட்ட கரடி தன்னுடன் கடைக்குட்டியை அழைத்துச் சென்றது.

சிறிது தொலைவு சென்ற பின், ‘‘குட்டிப் பெண்ணே, என் முதுகில் ஏறி என் தலையை நன்றாகப் பிடித்துக்கொள். உயரமான ஒரு விலங்கு உன்னைப் பார்த்தவுடன் மிரண்டு ஓடுவதைப் பார்” என்று கூறியது. கடைக்குட்டியும் அப்படியே செய்தது. அருகில் வந்த ஒட்டகச்சிவிங்கி, மிரட்சியுடன் அந்த இடத்திலிருந்து ஓட்டமெடுத்தது.

தன்னால்தான் ஓடுகிறது என நினைத்துக்கொண்ட கடைக்குட்டிக்கு இப்போது கொஞ்சம் தைரியம் வந்தது. உண்மையில் கரடிக்காக ஓடிய விஷயம் இதற்கு தெரியவில்லை.

அடுத்ததாக நீரோடைக்கு அழைத்துச் சென்றது கரடி. கடைக்குட்டியைக் கரையில் நிற்க வைத்துவிட்டு, மீன்களைப் பிடிப்பதற்காகச் சென்றது கரடி. அங்கும் இங்குமாகச் சென்று ஒன்றிரண்டு மீன்களைச் சுவைத்தபின், நீரோடைக்குள் கடைக்குட்டியை வரவழைப்பதற்காக, ‘‘என்னைக் காப்பாற்று... வெள்ளம் பெருக்கெடுக்கிறது” என்று அலறியது கரடி.

உண்மை என்று நம்பிய கடைக்குட்டிக்குத் தைரியம் வந்தது. கரடியைக் காப்பாற்ற வேண்டும் என்கிற உந்துதலில் தண்ணீரில் இறங்கி வேகமாகக் கரடியைச் சென்றடைந்தது.

‘‘குட்டிப் பெண்ணே, தண்ணீரின் வேகம் தெரியாமல் எனக்குப் பாதிப்பு என்றவுடன், காப்பாற்றுவதற்காக நீந்தி வந்துவிட்டாயே... துணிச்சல் என்பதைக் கற்றுக்கொண்டுவிட்டாய். எங்களுக்கு வெள்ளத்தின் அறிகுறி தெரியும். நன்றாக நீந்தவும் செய்வோம். வேண்டுமென்றே உன்னை நீருக்குள் வரவழைப்பதற்காக நாடகமாடினேன்” என்று சிரித்த கரடி, துள்ளி விழும் மீன்களைப் பிடித்து, கடைக்குட்டிக்குக் கொடுத்து உண்ணச் சொன்னது.

நான்கு வாரங்களுக்குப் பிறகு, ‘‘அம்மா, மான்ளைத் துரத்தப் போகிறேன்” என்ற கடைக்குட்டியிடம், ‘‘கரடி மாமா வரட்டும். அதுவரை பொறுமையாக இரு” என்றது தாய் சிங்கம்.

‘‘என்னை இன்னும் சின்னப் பெண்ணாகவே நினைச்சுட்டு இருக்காதே அம்மா. இப்போதெல்லாம் எந்த விலங்கைக் கண்டும் நான் பயப்படுறதில்லை. கர்ஜனை எழுப்பியவுடன் அவை திக்குத்திசை தெரியாமல் பயந்து ஓடுகின்றன. நான் வளர்ந்துவிட்டேன்” என்றவாறு மற்ற குட்டிகளின் துணை இல்லாமல் தனியாகச் செல்லும் கடைக்குட்டியைப் பெருமையாகப் பார்த்தது தாய் சிங்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x