Published : 09 Jun 2014 12:06 PM
Last Updated : 09 Jun 2014 12:06 PM

கல்லூரியைத் தேர்வுசெய்வது எப்படி?

பிளஸ்-2 முடித்த பெரும்பாலான மாணவ, மாணவிகள் பொறியியல் படிப்பில் சேர ஆசைப்படுகிறார்கள். பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் பி.இ., பி.டெக். படித்துவிட்டு எப்படியாவது ஐ.டி., அல்லது சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு பி.இ., பி.டெக். பட்டதாரி என்றால் சற்று வியப்போடு பார்ப்பார்கள். காரணம், அப்போது பொறியியல் கல்லூரிகள் மிக மிகக் குறைவாக இருந்தன. ஆனால், இப்போது கலை அறிவியல் கல்லூரிகளில் பி.எஸ்சி., பி.காம்., பி.ஏ. படிப்புகளுக்கு இடம் கிடைக்கிறதோ இல்லையோ பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தால் இடம் நிச்சயம். காரணம் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து இடங்களும் அதிகமாக உள்ளன.

தமிழ்நாட்டில் தற்போது 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இதில் ஏறத்தாழ 2 லட்சம் பி.இ., பி.டெக். இடங்கள் பொது கவுன்சலிங் மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. சிங்கிள் விண்டோ சிஸ்டத்தில் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியே விண்ணப்பிக்கத் தேவையில்லை. ஒரு விண்ணப்பம் போட்டால் போதும். எந்தக் கல்லூரியில் வேண்டுமானாலும் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரலாம்

இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 70 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். பொதுக் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஜூன் 11-ம் தேதி அன்று ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து, ஜூன் 16-ல் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். பிடித்தமான கல்லூரியை, பிடித்தமான பாடப்பிரிவைத் தேர்வுசெய்வதற்கான கவுன்சலிங் ஜூன் 23-ம் தேதி தொடங்கி ஜூலை 28-ம் தேதி வரை ஒரு மாதத்துக்கு மேல் நடைபெற உள்ளது.

மொத்தமுள்ள 2 லட்சம் இடங்களுக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். எனவே, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் பி.இ., பி.டெக்., இடம் கிடைப்பது உறுதி. ஆனால், பிடித்த கல்லூரி, பிடித்தமான பாடப்பிரிவு கிடைக்குமா என்பதில்தான் பிரச்சினை வரும். அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகளிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் அவற்றை விட்டால் புகழ்பெற்ற தனியார் பொறியியல் கல்லூரிகளிலும் சேர வேண்டும் என்ற ஆசை அனைத்து மாணவர்களின் மனதிலும் எழுவது இயல்பு. ஆனால், அந்த விருப்பத்தைப் பூர்த்திசெய்வது அவர்களின் கட் ஆப் மதிப்பெண்தான்.

கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் தான் ஒவ்வொருவரும் கவுன்சலிங்கிற்கு அழைக்கப்படுகிறார்கள். ஏழை-பணக் காரன், அரசு அதிகாரி வீட்டு பிள்ளை, கூலித்தொழிலாளியின் மகன் என யாராக இருந்தாலும் சரி கவுன்சலிங் வரிசையை முடிவுசெய்வது கட் ஆப் மதிப்பெண் தானே ஒழிய, எந்த விதமான சிபாரிசும் அங்கு எடுபடாது. குறைந்த கட் ஆப் மார்க் வைத்துக்கொண்டு முன்வரிசையில் இடையில் புகுந்துவிட முடியாது. இழுத்து வந்து உரிய வரிசையில் நிற்க வைத்துவிடுவார்கள். குறிப்பிட்ட நாளில் இன்னும் சொல்லப்போனால் அந்த கவுன்சலிங்கிற்குச் செல்லும் நேரத்தில் என்னென்ன கல்லூரிகளில் எந்தெந்தெந்தப் பாடப்பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளனவோ அவற்றையே தேர்வுசெய்ய முடியும்.

பிடித்தமான கல்லூரிகளில் காலி இடங்கள் இருக்கும். ஆனால், விரும்பும் பாடப்பிரிவுகள் அங்கு இல்லாமல் இருக்கலாம். அதேபோல், பிடித்த பாடப் பிரிவில் காலியிடங்கள் இருக்கும். ஆனால், காலியிடங்கள் உள்ள கல்லூரியில் சேரவா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்படலாம். இது போன்ற குழப்பம் எழும் நிலையில், கவுன்சலிங்கின் போது கல்லூரியை, அல்லது பாடப் பிரிவை எப்படித் தேர்வுசெய்ய வேண்டும், கவுன்சலிங் சமயத்தில் மனதில் வைத் திருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்த ஆலோசனைகளை அடுத்த வாரம் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x