விவாதம்: தற்கொலைகளைத் தடுக்க முடியாதா?

விவாதம்: தற்கொலைகளைத் தடுக்க முடியாதா?
Updated on
3 min read

ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் மாணவர் ரோஹித் வெமுலா சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு முன்னாலும் அங்கே 9 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்களில் தலித் மற்றும் பழங்குடி மாணவர்கள் 7 பேர். தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் எஸ்.வி.எஸ். யோகா மருத்துவக்கல்லூரியில் அதிகக் கட்டணக் கொள்ளை மற்றும் சித்ரவதை எனும் காரணங்களால், பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மூன்று மாணவிகள் தற்கொலைகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அன்றாட நிகழ்வாய்...

அரசாங்கங்கள், அரசியல் கட்சிகள், முற்போக்கான மக்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தத் தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன.

அரசியல் கட்சிகளும் அரசாங்கங்களும் தங்களின் கடமையைச் சரியாகச் செய்திருந்தாலும், சமூகத்தின் முன்னேறிய பகுதியினர் இத்தகைய பிரச்சினைகளின் மீது மனிதநேயத்தோடு அக்கறை காட்டி உடனே செயல்பட்டிருந்தாலும் இந்தத் தற்கொலைகளைத் தவிர்த்திருக்கலாம்.

ஆனால், தீண்டாமை, சாதி மற்றும் மனிதத் தன்மையில்லாமை தொடர்பான குரூரங்கள் நமக்கு அன்றாடம் நடக்கிற வழக்கமாகத் தோன்றுகின்றன. தற்கொலைகள் நடந்தால் மட்டும்தான் நாம் அவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம்.

திருத்தமும் சட்டமும்

தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை அமலாக்க அரசியல் சாசனத்துக்குப் போதுமான வலிமையில்லை என்பதைச் சரிசெய்யவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 93-வது அரசியல் சாசனத் திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அதன்படி அரசியல் சாசனத்தின் சட்டக்கூறு 15-ல் சட்ட உட்பிரிவு (5)-ல் 2005-ம் ஆண்டு 93-வது திருத்தம் செய்யப்பட்டது.

அதனை அமலாக்கும் விதமாக ஒரு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றி, அரசாங்கத்திலும் தனியாரிலும் உள்ள அனைத்து வகையான கல்விநிறுவனங்களிலும் தலித், பழங்குடியினர் , பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியிருந்தால் தமிழகத்தின் இந்தத் துயர நிகழ்வைத் தடுத்திருக்கலாம்.

பதில் கிடைக்குமா?

அரசியல் சாசனத் திருத்தம் நிறைவேறியதும் அப்போதைய மனிதவள அமைச்சர் அர்ஜுன்சிங், செயலர் சுதீப் பானர்ஜி ஆகியோர் அரசு மற்றும் தனியார் கல்விநிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஒரு சட்ட மசோதாவைத் தயாரித்தனர்.

அந்தச் சட்ட மசோதாவில் இருந்த தனியார் கல்வி நிறுவனங்கள் பற்றிய பகுதியை நீக்கியது ஏன் என்பதற்கான பதிலைப் பிரதமர் அலுவலகமும் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கும் தற்போது தற்கொலை செய்துள்ளவர்களின் குடும்பங்களுக்குச் சொல்வதற்குக் கடமைப்பட்டுள்ளார்கள்.

தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு தருவதற்கான தனியான ஒரு சட்டத்தை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்தன. சட்டம் உருவாக்குவதைக் காலவரையறை இல்லாமல் ஒத்திவைக்கும் நிலை அந்தப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டதற்கு அதில் பங்கேற்ற அமைச்சர்கள் சிதம்பரமும் கபில்சிபலும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.

தமிழகச் சட்டமும் சீர்குலைவும்

தமிழ்நாட்டில் இத்தகைய ஒரு சட்டம் உள்ளது. அதன்படியான கட்டண நிர்ணய கமிட்டியும் உள்ளது. ஆனால் இது தனியார் கல்லூரிகளில் உள்ள 50 சதவீத இடங்களுக்கு மட்டும்தான்.

தனியார் கல்லூரிகளில் தலித், பழங் குடி, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் குறைவான கட்டணங்களை வசூலிக்கவும் தமிழக அரசு ஆணைகளை வழங்கியுள்ளது. ஆனால், அவை எப்படி அமலாகின்றன என்பதைக் கண்காணிக்கும் குழுக்களை அரசு அமைக்காததால் இத்தகைய மாணவர் உரிமைகள் சீர்குலைக்கப்படுகின்றன.

எங்கே அரசியல் உறுதி?

மத்தியக் கல்வி நிறுவனங்கள் (சேர்க்கையில் இடஒதுக்கீடு) சட்டம்- 2006 ஐ நீதிமன்றத்தில் பாதுகாப்பதற்காக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் எனது ஆலோசனையைக் கேட்டுப் பெற்றது. நான் அளித்த விவரங்களால் உச்சநீதிமன்றம் இந்தச் சட்டம் அரசியல் சாசனப்படி செல்லுபடியாகக்கூடியது என்பதை உயர்த்திப் பிடித்தது.

தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தைக் கொண்டுவருவதற்காக நான் அடுத்தடுத்து வந்த மூன்று மத்திய அரசுகளிலும் முயற்சிக்கிறேன். தனிப்பட்ட கடிதங்கள், விவாதங்கள், கூட்டங்கள் பங்கேற்றல்கள் மூலமாக, மத்திய அமைச்சர்களாக இருந்த கபில் சிபல், பல்லம் ராஜூ, தற்போதைய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் நான் வலியுறுத்திவருகிறேன்.

இத்தகைய சட்டத்தை உருவாக்குவதற்கான எல்லாமும் தயாராக இருக்கின்றன. ஆனால் அத்தகைய செயலைச் செய்வதற்கான அரசியல் உறுதி மட்டும் இல்லை.

தேவை தண்டனைகள்

பிரமாதி கல்வி மற்றும் பண்பாட்டு அறக்கட்டளையும் இதரரும் இந்திய அரசுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் 2014-ல் உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் வழங்கிய தீர்ப்பு 93-வது அரசியல் சாசனத் திருத்தத்தை உயர்த்திப் பிடிக்கிறது. அதன் பிறகும் நாடாளுமன்றத்தின் வாக்குறுதி கமிட்டிக்கு ‘இந்தப் பிரச்சினை நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது’ என்று தவறான பதில்கள் அளிக்கப்படுகின்றன. தாமதப்படுத்தல்கள் மூலம் இன்னமும் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படாமல் இழுத்துக்கொண்டுபோகிறது.

மாணவர்களின் தற்கொலைகள் உள்ளிட்ட துயரங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும் என்றால் தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக ஒரு சட்டத்தை மத்திய அரசு இந்தியா முழுமைக்குமான முறையில் இயற்ற வேண்டும். அதை எல்லாத் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்துமாறு இயற்ற வேண்டும்.

அந்தச் சட்டத்தின்படியான கட்டணங்களை முறைப்படுத்தவும் கண்காணிக்கவும் போதுமான ஏற்பாடுகள் வேண்டும். தலித், பழங்குடி மாணவர்களுக்கும் பல்வேறு வகையான பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் உரிய பாதுகாப்புகள் அதில் வேண்டும். அதை உரியமுறையில் அமலாக்க வேண்டும். அவற்றை மீறும் கல்வி நிறுவனங்களுக்குக் கடுமையான தண்டனைகள் வேண்டும்.

வேண்டாம் தாமதம்

பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) திருத்தச் சட்டம் 2015-ன்படி பொருளாதாரப் புறக்கணிப்பும் சமூகரீதியான புறக்கணிப்பும் தண்டனைக்குரிய குற்றங்கள். தவறிழைத்தவர்களைத் தண்டிக்க இந்தச் சட்டமும் பயன்படும்.

மத்திய அரசுகளும் மாநில அரசுகளும் சாதியும் தீண்டாமையும் மிகவும் பரந்துபட்ட அளவில் உள்ளன என்பதை உணர வேண்டும். பிரதமரும் முதலமைச்சர்களும் மாவட்ட ஆட்சித்தலைவர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் வரையிலான ஒட்டுமொத்த நாடும் தெளிவாகத் தெரியும் வகையில் இவற்றை எதிர்கொள்ள வேண்டும்.

அரசியல் கட்சிகளின் அனுதாபம் நடைமுறையில் மக்களுக்குப் பயன்படும் வகையில் வெளிப்பட வேண்டும்.

ரோஹித்துக்கும் முன்னால் நிகழ்ந்த 9 தற்கொலைகளிலிருந்து நாம் பாடங்களைப் பெற வேண்டும். மாணவர் வெங்கடேஷ் என்பவர் 2013-ல் தற்கொலை செய்தார். அதை விசாரிப்பதற்காகப் பேராசிரியர் வி.கிருஷ்ணா கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை அமலாக்கப்பட்டிருந்தால் ரோஹித் தற்கொலை தடுக்கப்பட்டிருக்கலாம்.

மாணவர்களின் தற்கொலைகளையொட்டி பி.எஸ்.கிருஷ்ணன் ஒரு விவாதத்தை முன்வைக்கிறார். அதன் தொடர்ச்சியாக விவாதங்களை வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

- மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

கட்டுரையாளர் இந்திய அரசின் முன்னாள் செயலாளர், சமூகநீதிக்கான சட்டங்கள் உருவாவதில் முக்கிய பங்கு வகித்தவர். ஆங்கிலத்திலிருந்து சுருக்கித் தமிழாக்கம்: நீதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in