Published : 23 Feb 2016 12:31 PM
Last Updated : 23 Feb 2016 12:31 PM

மத்திய அரசுப் பணிகளில் சேர வேண்டுமா?

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் சார்நிலைப் பணிகளில் (குரூப்-பி, குரூப்-சி) உள்ள காலியிடங்கள் பணியாளர் தேர் வாணையம் (Staff Selection Commission-SSC) மூலமாக நிரப்பப்படுகின்றன. இதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (Combined Graduate Level Examination) நடத்தப்படுகிறது. இதில் முதல்நிலை, இரண்டாம் நிலை என இரு நிலைகள் உண்டு.

முதல் நிலையில் இதர அரசு போட்டித்தேர்வுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் பொது அறிவு, ரீசனிங், அடிப்படை கணிதம், பொது ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளிலிருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். இரண்டாம் நிலையில், கணிதம் மற்றும் ஆங்கிலத்திலிருந்து கேள்விகள் இடம்பெறும். கடந்த ஆண்டு வரையில் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வில் நேர்முகத்தேர்வு இருந்தது. குரூப்-பி, குரூப்-சி பணிகளுக்கு நேர்முகத்தேர்வு ரத்துசெய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பதால் இந்த ஆண்டிலிருந்து நேர்முகத்தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டாலே மத்திய அரசு பணி உறுதி.

ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வெழுத ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப் படிப்பு முடித்திருந்தால் போதும். வயது வரம்பைப் பொருத்தவரையில் பணிகளுக்கு தக்கவாறு அதிகபட்சம் 27, 30, 32 என்று வெவ்வேறு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மத்திய அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

இந்த ஆண்டு பல்வேறு துறைகளில் உதவியாளர், உதவி பிரிவு அதிகாரி (ஏஎஸ்ஓ), வருமான வரி ஆய்வாளர், மத்திய கலால் ஆய்வாளர், தடுப்பு ஆய்வாளர், தேர்வு ஆய்வாளர், உதவி அமலாக்க அதிகாரி, சிபிஐ சப்-இன்ஸ்பெக்டர், தபால்துறை ஆய்வாளர், கணக்கர், புள்ளியியல் ஆய்வாளர், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆய்வாளர், தேசிய புலனாய்வு முகமை உதவி ஆய்வாளர், உதவி தணிக்கை அதிகாரி மற்றும் குரூப்-சி நிலையில் ஆடிட்டர், கணக்கர், முதுநிலை உதவியாளர், வரி உதவியாளர், போதைப்போருள் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் என பல்வேறு விதமான பணியிடங்களை நிரப்புவதற்காக பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை என்றாலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இந்த தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்நிலை தேர்வு (Tier-I) மே மாதம் 8 மற்றும் 22-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்கு மார்ச் மாதம் 10-ம் தேதிக்குள் ஆன்லைனில் ( >http://sscregistration.nic.in) விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுமுறை, ஒவ்வொரு பாடத்துக்கான மதிப்பெண் விவரம், தேர்வுக்கான பாடத்திட்டம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட தகவல்களை பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் ( >www.ssc.nic.in) விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

பொதுவாக, பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு குறித்த விழிப்புணர்வு தமிழக மாணவர்களிடம் மிகவும் குறைவாக உள்ளது. ஒவ்வோரு ஆண்டும் தமிழகத்திலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே தேர்வுக்கு விண்ணப்பிக்கிறார்கள். தற்போது பல்வேறு பதவிகளுக்கு ஆயிரக்கணக்கான காலியிடங்கள் நிரப்பப்படுவதாலும், முதல் முறையாக நேர்முகத்தேர்வு ரத்துசெய்யப்பட்டிருப்பதாலும் தமிழக மாணவர்கள் எளிதாக மத்திய அரசுப் பணியில் சேர இது ஓர் அரிய வாய்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x