Published : 26 Feb 2016 12:44 PM
Last Updated : 26 Feb 2016 12:44 PM

‘காம்ரேட்’ ஷெஹ்லா

“எதிலிருந்து விடுதலை வேண்டும், எப்படிப்பட்ட விடுதலை வேண்டுமென்று ஆட்சியாளர்களும் வலதுசாரி அமைப்புகளும் கேட்கின்றன. சுதந்திரம் என்றால் என்ன என்று இப்போது வரையறுப்போம். உலக வர்த்தக நிறுவனம், ஜாதியம், ஒடுக்குமுறை சட்டங்களில் இருந்து ஒட்டுமொத்த தேசத்துக்கும் விடுதலை வேண்டும்” - நறுக்கு தெறிப்பதுபோல வந்து விழும் அவருடைய ஒவ்வொரு வாக்கியத்துக்கும், மாணவர் கூட்டம் கரகோஷம் எழுப்புகிறது.

காதலர் தினத்தன்று நடைபெற்ற போராட்டம், அதைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டங்களில் அழுத்தம் திருத்தமாக அந்தப் பெண் முன்வைத்த வாதங்களை, பேச்சைக் கேட்கவும் இணைந்து போராடவும் 5000, 10,000 பேர் திரண்டார்கள். உலக ஊடகங்களில் அது செய்தியானது. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் தத்துபித்து உளறல், ஜல்லியடித்தலுக்கு இடையில் தெளிவான அரசியலை முன்வைத்துப் பேசும் அவருடைய வீடியோ பதிவுகள் பிப். 14-ம் தேதி இரவுக்குப் பிறகு தீயைப் போலப் பரவ ஆரம்பித்தன. நாட்டு மக்களுக்காகவும் பேச்சுரிமைக்காகவும் குரல் கொடுக்கும் அவருடைய பேச்சு, காதலர் தினத்தை ஒட்டி அதிக அளவில் பகிர்ந்துகொள்ளப்பட்டது ஓர் ஆச்சரிய முரண்.

பொறி பறக்கும் மலர்

சக மாணவ, மாணவிகளால் ‘காம்ரேட்' (தோழர்) என்று அழைக்கப்படும் ஷெஹ்லா ரஷித் ஷோராதான் அந்தப் பெண். ஷெஹ்லா என்றால் மலர் என்று அர்த்தம். ஆனால், பேச்சில் பொறி பறக்கிறது. அவருக்குள் கனன்று கொண்டிருந்த ஆக்ரோஷமான சமூகச் செயல்பாட்டாளரைக் கண்டுபிடித்தது, நாட்டின் முதன்மை சிந்தனை மையங்களில் ஒன்றான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்தான்.

“ஜே.என்.யு.வில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கிடைத்த அனுபவங்களும் எனக்குக் கிடைத்த அரசியல் பயிற்சியும், இந்த நாட்டில் மிகவும் எளிதில் பாதிக்கப்படச் சாத்தியமுள்ள கடைக்கோடி மனிதனுக்காகவும் நான் குரல் கொடுக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்துள்ளன. சமூகத்தைத் தொந்தரவுக்கு உள்ளாக்கக்கூடிய, சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்பதையும் உணர்த்தியுள்ளன” என்கிறார் ஷெஹ்லா.

முதல் காஷ்மீரி

தேசத்துக்கு எதிரான கோஷங்கள், காஷ்மீர் விடுதலை தொடர்பான குரல்கள்தான் ஜே.என்.யு. மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரின் கைதுக்குக் காரணமாகக் கூறப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டு எவ்வளவு போலியானது என்பதைப் போட்டு உடைத்து, மத்திய அரசையும் ஜே.என்.யு. நிர்வாகத்தையும் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப்போட்டு விமர்சித்துவருகிறார் ஷெஹ்லா. கன்னையா குமாருக்கு அடுத்த நிலையில் ஜே.என்.யு. மாணவர் சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கும் ஷெஹ்லாவின் கலகக்குரல், இன்றைக்கு அந்த வளாகத்தையும் தாண்டி உரக்க ஒலித்து வருகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற ஜே.என்.யு. மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிட்ட முதல் காஷ்மீரி மாணவி ஷெஹ்லா. அதில் ‘அகில இந்திய மாணவர் சங்கம் - விடுதலை' (AISA) எனப்படும் இடதுசாரி மாணவர் அமைப்பின் சார்பில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு, அந்தத் தேர்தலிலேயே அதிக வாக்குகளை (1387) பெற்று அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கார்பரேட் உலகில் இருந்து

கடந்த 20 ஆண்டுகளாகக் கொந்தளிப்பான சூழ்நிலையில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் தலைநகரம் நகரில் உள்ள ஹப்பா கதல் பகுதியைச் சேர்ந்தவர் ஷெஹ்லா. அவருடைய அம்மா, நகர் எஸ்.கே. மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் செவிலியர். அரசியல் பின்புலமில்லாத நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த ஷெஹ்லா. நகரில் உள்ள தேசியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.ஐ.டி.) கணினி் பொறியியலும் பிறகு பெங்களூர் ஐ.ஐ.எம்மிலும் படித்தார்.

படித்து முடித்தவுடன் கார்பரேட் உலகில் நுழைந்தார். ஆனால், அந்த மாய உலகத்தின் கற்பனைகள் விரைவில் உடைந்து நொறுங்க, சமூகச் செயல்பாட்டாளராக மாறினார். காஷ்மீரில் குழந்தைகளுக்கான சட்ட உரிமைகளுக்காகவும், இளம்பெண்களைக் குறிவைக்கும் அமில வீச்சு தாக்குதல்களுக்கு எதிராகவும் சின்ன வயதிலேயே போராடியவர். காஷ்மீரில் அரசியல் செயல்பாடுகளுக்கான வாய்ப்பு குறைவாக இருக்கவே ஜே.என்.யுவில் சட்டம் மற்றும் அரசாட்சிப் பிரிவில் எம்.ஃபில். ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்தார். பெண் உரிமைகள், சுதந்திரமான பேச்சுரிமை, மனித உரிமை சார்ந்து தொடர்ந்து செயல்பட்டுவந்துள்ளார்.

போராட்டம் ஓயாது

“ஜே.என்.யு.வில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம், மத்தியிலுள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசின் ஒடுக்குமுறை கொள்கைகளுக்கு எதிரான மிகப் பெரிய போராட்டத்தின் ஒரு பகுதிதான். நாட்டை வலதுசாரி கொள்கைகள் ஆக்கிரமித்துவரும் நிலையில், உண்மையான வரலாற்றை அவர்கள் மறைப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்பதற்காகவே போராடி வருகிறோம். நாட்டின் உயர்கல்வியைக் கைப்பற்றக் காத்துக்கொண்டிருக்கும் தாராளமயக் கொள்கைகளையும், மக்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் பா.ஜ.க. அரசையும் விமர்சித்தால், மாணவர் உரிமைகளை வலியுறுத்தினால், தேச விரோதம் என்று பிடித்துச் சிறையில் தள்ளுகிறது அரசு. அவர்கள் கடைப்பிடித்துவரும் வலதுசாரி கொள்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களைப் பழிவாங்கும் இந்த அரசியல் வேட்டையாடல் முடியும்வரை, எங்கள் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது” என்கிறார் ஹெஷ்லா.

- இந்த ஜம்மு எக்ஸ்பிரஸைத் தடுத்த நிறுத்த முடியாது என்றே தோன்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x