Last Updated : 06 Sep, 2021 04:24 AM

 

Published : 06 Sep 2021 04:24 AM
Last Updated : 06 Sep 2021 04:24 AM

`எரி'யும் பிரச்சினையின் மறுபக்கம்!

ஓவியம்: முத்து

கரோனாவுக்கு முன்பிருந்தே சரிவைச் சந்தித்து வந்த இந்தியப் பொருளாதாரம் கரோனா பாதிப்பு காலத்தில் மேலும் மோசமானதை யாரும் மறுக்க முடியாது. இந்தக் காலத்தில் மக்களின் வருவாய் வெகுவாகக் குறைந்தது. பலருக்கு வேலை கிடைப்பதே பெரும்பாடாகிப் போனது. பொருளாதாரம் வேகமாக மீண்டுவருவதாகக் கூறப்பட்டாலும், பெரும்பாலான மக்களின் வாழ்க்கை இன்னமும் பாதிப்புகளிலிருந்து மீளவில்லை. ஆனால், கரோனா கோரத்தாண்டவமாடிய இதே காலகட்டத்தில் மட்டுமே சமையல் எரிவாயுவின் விலை 47 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த வருடம் செப்டம்பரில் ரூ.610 ஆக இருந்த 14.2 கிலோ மானியமல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி ரூ.25 உயர்த்தப்பட்டதுடன் ரூ.900.25க்கு விற்கப்படுகிறது. கடந்த ஓராண்டு காலத்தில் சமையல் எரிவாயுவின் விலை ரூ.290 அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் 11 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரியில் மட்டுமே மூன்று முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே ஒரு முறை ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.10 குறைக்கப்பட்டது. பாஜக ஆட்சியில் அமர்ந்த 2014ம் ஆண்டு செப்டம்பரில் ஒரு சிலிண்டர் விலை ரூ.427 ஆக இருந்தது. ஏழு ஆண்டு கால ஆட்சியில் இரண்டு மடங்காக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

பாஜகவின் ஏழு ஆண்டுகால ஆட்சியில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மூலம் அரசுக்குக் கிடைத்த ரூ.23 லட்சம் கோடி எங்கு போனது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்புகிறார். மோடி ஆட்சியில் ஜிடிபி உயர்வு என்றால் ‘கேஸ், டீசல், பெட்ரோல்’ விலை உயர்வு என்று கிண்டலும் செய்கிறார். பாஜக கொண்டுவந்த உஜ்வாலா திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய குடும்பங்களையும் சமையல் எரிவாயு பயன்பாட்டுக்குள் கொண்டுவந்ததன் மூலம் அனைத்து குடும்பத்தின் மாத செலவிலும் சமையல் எரிவாயு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது. அப்படியிருக்க உணவு, கல்வி போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கே கஷ்டப்படும் பெரும்பான்மையான குடும்பங்களின் நிலையை என்னவென்று சொல்வது? பெரும்பாலானோர் மீண்டும் விறகு அடுப்புகளுக்குத் திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் பெட்ரோல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை உயர்வுக்கு அரசு பொறுப்பு என்று கூறிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போது விலை உயர்வுக்கு எண்ணெய் நிறுவனங்களே பொறுப்பு எனக் கூறிவிட்டார். உண்மையில் சமையல் எரிவாயுவின் விலை உயர்வுக்கு யார் பொறுப்பு, விலை உயர்வின் பின்னணி என்ன?

இந்தியாவில் சமையல் எரிவாயுவின் விலையானது இறக்குமதி சமன் விலை (import parity price)அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச சந்தை விலை, ஃப்ரீ ஆன் போர்ட் விலையானது, கடல் சரக்கு போக்குவரத்து செலவு, காப்பீடு செலவு, சுங்க வரிகள், துறைமுகக் கட்டணங்கள் உள்ளிட்டவற்றையெல்லாம் உள்ளடக்கித்தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதோடு உள்நாட்டில் செய்யப்படும் போக்குவரத்து செலவுகள், சந்தைப்படுத்தல் செலவு, எண்ணெய் நிறுவனங்களின் லாப சதவீதம், பாட்டலிங் செய்வதற்கான செலவுகள், டீலர்களுக்கான கமிஷன் மற்றும் ஜிஎஸ்டி இவையனைத்தையும் கணக்கில் கொண்டே பயன்பாட்டுக்கு வரும் மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நிர்ணயம் ஆகிறது. இது ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைக்கப்படும்.

எரிவாயுவைப் பொறுத்தவரை சவுதி அராம்கோ நிறுவனம் நிர்ணயிக்கும் விலையின் அடிப்படையில் சர்வதேச சந்தை விலை தீர்மானிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் விலை உயரும்போது உள்நாட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயுவின் விலை உயரும். அதேசமயம் சர்வதேச விலையானது டாலரில் நிர்ணயிக்கப்படுவதால், ரூபாய் மதிப்பு சரிவை சந்திக்கும்போதும் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிடும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு விலையும் உயரும். அதேபோல உலக நாடுகளைப் பாதிக்கக் கூடிய வகையிலான போர்ச்சூழல்கள், நெருக்கடி நிலைகள் உருவாகும்போதும் கச்சா எண்ணெய்யின் விலை உயரும். தற்போது ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி இருப்பதால் ஏற்பட்டுள்ள உலக அரசியல் குழப்பம் விலை உயர்வுக்குக் காரணமாக இருக்குமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு அல்ல, அதேசமயம் அதன் எண்ணெய், எரிவாயு பயன்பாடும் பெரிய அளவில் இல்லை. ஆனால், ஆப்கானிஸ்தான் சூழல் ஏற்படுத்தியுள்ள குழப்பமும், பதற்றமும் உலக நாடுகளின் அரசியல் நடவடிக்கைகளிலும் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இருக்கிறது. எனவே கணிசமான விலை உயர்வுக்குக் காரணமாக மாறி உள்ளது.

இந்தியா தனது சமையல் எரிவாயு தேவையில் 50 சதவீதம் இறக்குமதியை நம்பியுள்ளது. மீதமுள்ள 50 சதவீதம் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் ஒட்டுமொத்தமாக சர்வதேச சந்தை விலையின் அடிப்படையிலேயே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டுகின்றன. இது சரியான முறையல்ல என்று நிபுணர்கள் வாதிடுகின்றனர்.

அதேசமயம், இந்தியாவில் பாஜக ஆட்சிக் காலத்தில் சர்வதேச விலை நகர்வுகளின்படி விலை நிர்ணயம் செய்யப்படுவதாகத் தெரியவில்லை. காரணம் இத்தனை ஆண்டுகளில் பல முறை சர்வதேச சந்தையில் விலை சரிவடைந்திருக்கிறது. ஆனால், அப்போதெல்லாம் அரசு சமையல் எரிவாயுவின் விலையைக் குறைக்கவே இல்லை. ஒரு மெட்ரிக் டன் எல்பிஜி ஃப்ரீ ஆன் போர்டு விலை 2014ல் 880 டாலராக இருந்தது. இது 2016ல் 394 டாலராகவும், 2021ல் 382 டாலராகவும் குறைந்துள்ளது. (ஃப்ரீ ஆன் போர்டு என்பது - விற்பனை நிறுவனத்திடம் வாங்கும் நிறுவனம் அதை கப்பல் மூலமாகக் கொண்டு வரும் பொறுப்பு, இடையில் ஏற்படும் இழப்பு, காப்பீடு உள்ளிட்டவற்றை ஏற்க வேண்டும். வாங்கிய இடத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் இடம் வரையில் எரிவாயுவை பெறுவதற்கான பொறுப்பை வாங்கும் நிறுவனம் ஏற்பதாகும்).

சர்வதேச சந்தையில் விலை குறைந்தாலும் இந்தியாவில் விலை குறையவில்லை. மாறாக விலை உயர்ந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல், மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் மானியத்தையும் தொடர்ந்து குறைத்து வந்துள்ளது. குறிப்பாக மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தைக் கொண்டுவந்த பிறகுதான் மானியத்தைத் தொடர்ந்து குறைக்க தொடங்கியது. இதனால் கடந்த 5ஆண்டுகளில் மானிய சிலிண்டருக்கும், மானியமல்லாத சிலிண்டருக்கும் இடையிலான விலை வித்தியாசம் வெகுவாகக் குறைந்துள்ளது. தற்போதைய மானியமல்லாத சிலிண்டரின் விலை ரூ. 900.25. மானிய சிலிண்டர் ரூ.875.25க்கு விற்பனை ஆகிறது. வருடத்துக்கு 12 சிலிண்டர் மட்டுமே மானியத்தில் வழங்கப்படும். அதற்கு மேலான பயன்பாடுகளுக்கு மானியமல்லாத விலைதான் வசூலிக்கப்படும்.

அதுமட்டுமல்லாமல் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் அதே விலையைத்தான் அரசுத் துறை நிறுவனங்களும் நிர்ணயிக்கின்றன. அரசுத் துறை நிறுவனங்களின் நிர்வாக முறை, சந்தைப்படுத்தல் முறை மற்றும் செயல்பாட்டுத் திறன் ஆகியவை தனியார் நிறுவனங்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவை. அப்படியிருக்க தனியார் நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் கணிசமான விலைக் குறைப்பை அரசுத் துறை நிறுவனங்கள் செய்யமுடியும். ஆனால் அப்படியான நிகழ்வுகளும் நடப்பதில்லை.

அதுமட்டுமல்லாமல் உஜ்வாலா திட்டத்துக்காக மானியத்தை விட்டுக்கொடுக்கும் திட்டத்தையும் அரசு கொண்டுவந்தது. ஆனால், மிகக் குறைவான சதவீதத்திலேயே மானியத்தை விட்டுக்கொடுக்க முன்வந்தனர். அது கணிசமாக அரசு திட்டங்களைச் செயல்படுத்த உதவியாக இருந்தது. ஆனால், உஜ்வாலா திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு பயன்பாட்டுக்குள் வந்த பெரும்பாலான மக்கள் இன்று விலை உயர்வினால் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். மானியத்தையும் கணிசமாகக் குறைத்துவிட்ட நிலையில் சமையல் எரிவாயுவை பயன்படுத்துவது குறித்து யோசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பொருளாதார சரிவு, வரி வருவாய் பாதிப்பு, நிதிப் பற்றாக்குறை, நிதி ஊக்குவிப்பு திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நிர்பந்தம் என அரசுக்குப் பல்வேறு சவால்கள் இருப்பது உண்மைதான். ஆனால், அதற்கான நிதியைத் திரட்டுவதற்கு சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருள்களின் மீது விலையை உயர்த்துவது சரியான போக்கு இல்லை. என்னதான் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வுகளுக்கு சர்வதேச விலை உயர்வோ, டாலர்-ரூபாய் பரிமாற்ற மதிப்பு சரிவோ காரணமாக இருந்தாலும் நாட்டு மக்கள் அன்றாட வாழ்வாதாரத்துக்கே திண்டாடுகின்ற சூழலில் விலை உயர்வின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு மக்கள் மீது விழும் சுமையைக் குறைக்க வேண்டிய கடமை அரசுக்குதான் உள்ளது. மேலும் அரசு தற்போது எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு அரசின் கொள்கைகளே காரணமாகவும் இருக்கிறது என்றுதான் பல பொருளாதார நிபுணர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

சமீபத்தில் அரசு அறிவித்துள்ள அரசு சொத்துகளை பணமாக்குதல் கொள்கை மூலம் ரூ.6 லட்சம் கோடி நிதித் திரட்டும் நடவடிக்கையும் எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்களைக் கொண்டுவரும் என்று எச்சரித்துள்ளார்கள். ஆனால் அரசு எதையும் கேட்பதாகத் தெரியவில்லை. சில தவிர்க்க முடியாத தருணங்களிலும் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு நீண்டகால நோக்கில் கொள்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்தை அரசு மறந்துவிடுகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைவாக இருந்தபோதே பெரும்பாலான குடும்பங்கள் விறகு அடுப்பைத்தான் பயன்படுத்திவந்தனர். 2019ல் சிஏஜி வெளியிட்ட ஆய்வறிக்கையில் உஜ்வாலா வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் முதல் சிலிண்டர் பயன்பாடோடு நிறுத்திவிட்டு மீண்டும் விறகு அடுப்புக்கு மாறிவிட்டார்கள் என்று கூறியது. தற்போது விலை கடுமையான உயர்வை எட்டியிருக்கிறது. விரைவில் ரூ.1,000 -ஐ நெருங்கும் என்கிறார்கள். மக்கள் மீண்டும் விறகு தேடி கிளம்ப வேண்டியிருக்கும் போலிருக்கிறது.

ஜெ.சரவணன்
saravanan.j@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x