Published : 16 Feb 2016 11:55 AM
Last Updated : 16 Feb 2016 11:55 AM

முகங்கள்: மாணவர்களின் வழிநடத்துநர் வரதராஜன்

‘என்னால் ஆன உதவிகளை ஏழைப் பிள்ளைங்களுக்குச் செய்வது எனக்கு ஆத்ம திருப்தியா இருக்கு. இதுக்கு எந்த இடையூறும் வந்துடக்கூடாதுன்னுதான் நான் கல்யாணம் பண்ணிக்கல'' நடத்துநர் வரதராஜனின் அடிமனத்திலிருந்து வந்து விழுகின்றன இந்த வார்த்தைகள்.

நெல்லை மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்தவர் வரதராஜன். நெல்லை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 28 ஆண்டுகளாக நடத்துநராகப் பணிபுரிகிறார். 20 ஆண்டுகள் ஒரே (சுரண்டை - ரெட்டியார்பட்டி) வழித்தடத்தில் தனது பணியைத் தொடர்கிறார். இவரை, அந்த வழித்தடத்தில் பயணிக்கும் ஏழை பள்ளி - கல்லூரி மாணவர்கள் தங்களது ஞானத் தந்தையாகக் கொண்டாடுகிறார்கள். ஏழைக் குழந்தைகளுக்கு உதவும் அவரது ஈகைக் குணம்தான் காரணம்.

பள்ளி மாணவர்களை கிழிந்த சீருடையுடன் பேருந்தில் பார்த்துவிட்டால் வரதராஜனுக்குத் தாங்காது. அந்த மாணவரின் குடும்பச் சூழலைப் பற்றி விசாரித்துவிட்டு மறுநாளே புதிய சீருடைக்கு ஏற்பாடு செய்துவிடுவார். பேருந்தில் யாராவது சேட்டை செய்தால், “அமைதியா இருந்தா அஞ்சு ரூபா பரிசு” என்று அவர்களை அமைதிப்படுத்துவது வரதராஜனின் தனிபாணி.

இது மாத்திரமல்ல, யாருக்காவது படிப்புச் செலவுக்கு, கல்லூரிக்குச் செலுத்த பணம் வேண்டும் என்று சொன்னால் தயங்காமல் வரதராஜனின் உதவிக்கரம் நீண்டுவிடும். பள்ளிச் சிறுவர்களாய் இவரோடு பேருந்தில் பயணித்து இப்போது கல்லூரி மாணவர்களாகிவிட்ட பலரும் இவரோடு இன்னமும் நட்பாக இணைந்திருக்கிறார்கள்.

“நான் விவேகானந்தரின் பக்தன். ஏழைப் பிள்ளைகளுக்கு நான் செய்யும் சிறு உதவிகளை வெளிச்சம் போட்டுக் காட்டிக்கிறதில்லை. பள்ளிக் குழந்தைகளை வாசிக்க வைக்கணும்கிறதுக்காகவே எங்க வீட்டில் சுமார் 500 புத்தகங்களைத் திரட்டி சின்னதா ஒரு நூலகம் வைச்சிருந்தேன். அதை முறையாப் பராமரிக்க முடியாததால ஸ்கூல் பசங்களுக்கே குடுத்துட்டேன். விவேகானந்தர் தினத்தில் பஸ்ஸுல வர்ற அனைத்துப் பிள்ளைகளுக்கும் புத்தகத்தைப் பரிசாகக் குடுக்குறத வழக்கமா வைச்சிருக்கேன். பள்ளிப் பிள்ளைகளா இருந்தா திருக்குறள் வாங்கிக் குடுத்து தினம் ஒரு குறளை மனப்பாடம் பண்ணிட்டு வந்து சொல்லச் சொல்லுவேன்.

ஒரு பள்ளிக்கு அப்துல் கலாமின் ‘அக்கினிச் சிறகுகள்’ புத்தகம் நூறு வாங்கிக் குடுத்தேன். “இதைப் படிக்கலைன்னா எம்புட்டுப் பெரிய படிப்புப் படிச்சாலும் பிரயோஜனம் இல்லைடா”ன்னு சொல்லிச் சொல்லியே நிறையப் பசங்கள ‘அக்கினிச் சிறகுகள்’ வாசிக்க வைச்சிருக்கேன்’’ என்று தனது சமுதாய சேவையை அடுக்கிக்கொண்டே போகிறார் வரதராஜன்.“பஸ்ஸுல வர்றவங்க தங்களோட பிள்ளைகளக் கடுஞ் சொல்லால ஏசுனா எனக்குக் கோவம் வந்து அவங்கள நான் ஏசிவிட்டுருவேன். பிள்ளைகள் மீது எந்தத் தவறும் இல்லை. வழிகாட்ட ஆள் இல்லாததாலயும் தவறான வழிகாட்டுதலாலயும்தான் அவங்க திசை மாறிடுறாங்க. பெத்தவங்களும் பிள்ளைகளுக்கு நல்ல வார்த்தை சொல்றதில்லை. சமூகத்துலயும் நல்லது சொல்ல ஆளில்லை.

மாதச் சம்பளத்தில என்னோட செலவுகளுக்குப் போக நான் எதையும் சேர்த்து வைக்கிற தில்லை. சிறிய அளவு சேமிப்பு வைச்சுருக்கேன். இதைத் தவிர இப்ப என்கிட்ட எந்தப் பணமும் இல்ல. இதையும் இல்லாதவங்களுக்குத்தான் குடுக்கப்போறேன். இதுக்கெல்லாம் தடை வந்துடக் கூடாது பாருங்க... அதான் கல்யாணமே பண்ணிக்கல.

குடும்பம் இல்லாட்டியும் நான் என்னைத் தனி ஆளாய் எப்போதும் நினைத்ததில்லை. இன்னும் மூன்றரை வருசம் சர்வீஸ் இருக்கு. பணியிலிருந்து ஓய்வு பெற்றதும், இருபது வருசமா என்னோட பேருந்தில் பயணித்து என்னால் ஊக்குவிக்கப்பட்டு இன்னைக்கி கல்லூரிகளில் படிக்கிற மாணவர்களை எல்லாம் ஒண்ணுசேர்த்து ஒரு சேவை அமைப்பு உருவாக்கணும். அவங்க மூலமாவும் இந்த சமுதாயத்துக்கு நல்லது செய்யணும். இதுதான் என்னோட லட்சியம்’’ என்று நம்மை வரதராஜன் (9585125612) அதிசயிக்க வைக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x