Published : 02 Feb 2016 11:42 AM
Last Updated : 02 Feb 2016 11:42 AM

ஆங்கிலம் அறிவோமே - 95: ஹாலிவுட்டும் சிவப்புநாடாவும்

கம்பளம் அல்லது போர்வை என்று நாம் சொல்வதைத்தான் blanket என்கிறார்கள். கதகதப்புக்காக இதைப் பயன்படுத்துகிறோம். Blanket bath என்றால் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத நோயாளியின் உடல் முழுவதையும் துடைத்துவிடும் செயல். Blanket finish என்றால் மிகவும் குறைவான வித்தியாசத்தில் வெற்றி பெறுதல் என்று அர்த்தம். Photo finish என்று நாம் கூறுவது இதைத்தான். Blanket roll என்பது பெரும்பாலும் ஒரு ராணுவ வீரர் கையோடு எடுத்துச் செல்வது. இதில் சுருட்டப்பட்ட கம்பளத்துக்குள் அவருக்குத் தேவையான பிற முழுமையான பொருள்களும் இருக்கும். Blanket weed என்பது தண்ணீரில் காணப்படும் ஒருவகை பாசி.

METONYM

Wall street என்பது ஒரு தெருதான். ஆனால், அந்த வார்த்தைகள் அமெரிக்காவின் நிதி மற்றும் கார்ப்பரேட் தொழில்பிரிவினரைக் குறிக்கப் பயன்படுகின்றன. ஹாலிவுட் என்பது ஒரு நிலப்பகுதி. ஆனால் அமெரிக்காவின் திரைப்படத் தொழிலை அது குறிக்கிறது.

ஒரு பெயர் வேறொரு அர்த்தம் அளிக்கும் வகையில் - அதாவது அதனுடன் மிகவும் நெருக்கமாக இணைந்திருக்கும் மற்றொன்றைக் குறிக்கும் வகையில் - குறிப்பிடப்பட்டால் அதை metonym என்போம். இப்போது வேறு சில metonym-களைப் பார்ப்போம்.

Red tape என்றால் சிவப்பு வண்ண நாடா. ஆனால் Red tapism என்று குறிக்கும்போது மிக அதிகமான அதிகாரவர்க்கச் செயல்முறை என்று அர்த்தம். அதாவது எதுவும் அங்கு சீக்கிரம் நடந்துவிடாது. முன்பெல்லாம் அரசு அலுவலகங்களில் ஆவணங்களை வைக்கும் கோப்பின்மீது பச்சை நாடா மேலாக இருக்கும்படி கட்டினால் அது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்றும், சிகப்பு நாடா என்றால் அது அவசரமில்லாத விஷயம் என்றும் அர்த்தம்.

Eyes and ears என்றால் கண்கள் மற்றும் காதுகள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் உளவு வேலை செய்யும் ஒற்றரைக் குறிப்பிடவும் ‘eyes and ears’ என்பதைப் பயன்படுத்துகிறார்கள். அதாவது ஒற்றனுக்கு உடலெல்லாம் கண்கள் மற்றும் காதுகள்!

Bangalore என்றால் கர்நாடக மாநிலத்தின் தலைநகர் என்று சட்டென்று சொல்லிவிடுவீர்கள். ஆனால் அமெரிக்கத் தகவல் துறை அலுவலகங்களில் “இந்த வேலையை Bangalore செய்திடலாம்” என்றால் அந்த வேலையை வெளியாட்களிடம் கொடுத்துச் செய்ய வைக்கலாம் (Outsourcing) என்று அர்த்தம்.

Brass என்றால் பித்தளை. ஆனால் ராணுவத்தில் ‘Brass’ என்ற வார்த்தை ராணுவ அதிகாரியைக் குறிக்கிறது.

சிலிகான் வாலி என்பது ஓர் அமெரிக்க இடம்தான். எனினும் ‘உயர்ந்த தொழில் நுட்பம்’ என்பதைக் குறிக்கவும் இது பயன்படுகிறது.

Metonym என்பதன் ஒரு பிரிவு Toponym. ஒரு நாட்டின் தலைநகரம் அந்த நாட்டின் அரசைக் குறிக்கப் பயன்படுவது இந்த வகைதான். New Delhi is not in favour of it என்றால் இந்திய அரசு அதற்கு ஆதரவாக இல்லை என்று பொருள். Moscow accepted it என்றால் ரஷ்ய அரசு ஒன்றை ஏற்றுக்கொண்டதாக அர்த்தம்.

தமிழில் 12th என்பதை எழுதும்போதும், ஆங்கிலத்தில் எழுதும்போதும் சிலர் தவறு செய்கிறார்கள். பன்னிரண்டாவது என்று எழுதுங்கள். (பன் + இரண்டாவது = பன்னிரண்டாவது). ஆங்கிலத்தில் இதை எழுதும்போது இடையில் வரும் ‘f’ என்ற எழுத்தை விட்டுவிடக் கூடாது. Twelfth.

சில ஆங்கில வார்த்தைகள் தமிழில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை (பிரிட்டிஷ்) ஆங்கிலத்தில் பிழையில்லாமல் எழுத முடிகிறதா என்பதைப் பாருங்கள்.

1. சைக்கோ

2. ஆக்வர்ட் (அசிங்கமான)

3. ஸீனரி

4. ட்யூஷன்

5. அகாமடேஷன்

6. ஆன்ட்ரப்ருனர் (சுய தொழில் நடத்துபவர்)

7. என்வலப்

8. இக்வல்டு (சமமாக்கப்பட்டது)

9. கேரண்டி (உத்தரவாதம்)

10. ஜெனுயின் (அசல்)

11. நோஸி (பிறர் விஷயத்தில் மூக்கை நுழைப்பது)

12. நாஸியா (குமட்டல்)

13. ஃபார்ட்டி (நாற்பது)

14. டயலாக்

15. டிஸிப்ளின்

16. ட்ராட் (பஞ்சம்)

17, செக் (காசோலை)

18. வில்லன்

19. ரெலவண்ட்

20. அன்டில்

“Duologue என்ற ஒரு வார்த்தையைப் படித்தேன். இதென்ன புதிதாக இருக்கிறதே! ஒருவேளை எழுத்துப் பிழையா?” என்று வியப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஒரு நண்பர்.

டயலாக் என்றால் வசனம் என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். ஆனால் Dialogue என்பது இருதரப்பினரும் பங்கு கொள்ளும் பேச்சு வார்த்தை. Monologue என்றால் ஒருவர் மட்டுமே பேசிக்கொண்டிருப்பது. சில சமயம் மேடையில் ஒரே ஒரு நடிகர் தோன்றி அவர் மட்டுமே தொடர்ந்து பேசுவதை இப்படிக் குறிப்பிடுவார்கள். இரண்டு பேர் இருந்து அவர்களில் ஒருவர் மட்டுமே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால் அதையும் (கொஞ்சம் எரிச்சலோடு) Monologue என்பதுண்டு.

வாசகர் கண்ணில் பட்ட Duologue வேறு வகை. அது ஒன்றும் காலகாலமாக இருந்துவந்த வார்த்தை அல்ல. ஆப்ரஹாம் கப்லாங் என்ற தத்துவவாதி (1993-ல் இறந்தவர்) பயன்படுத்திய சொல் இது. இது Monologue என்பதைவிடக் கொஞ்சம் அதிகம். Dialogue என்பதைவிடக் குறைவு.

அதாவது இருவரும் பேசுகிறார்கள். ஆனால் இந்த இருவரில் யாருமே பிறர் கூறுவதை ஒழுங்காக கவனிக்கவில்லை. இந்த நிலையில் இவர்களது பேச்சு வார்த்தையை ‘Duologue’ என்கின்றனர். இதற்கு ஓர் எடுத்துக்காட்டு இதோ.

அதாவது இருவரும் பேசுகிறார்கள். ஆனால் இந்த இருவரில் யாருமே பிறர் கூறுவதை ஒழுங்காக கவனிக்கவில்லை. இந்த நிலையில் இவர்களது பேச்சு வார்த்தையை ‘Duologue’ என்கின்றனர். இதற்கு ஓர் எடுத்துக்காட்டு இதோ.

நபர் 1 நாளைக்கும் உங்களாலே வர முடியுமா?

நபர் 2 மகாபாரதம் மூன்று முறை படிச்சுட்டேன். அலுக்கவே இல்லை.

நபர் 1 என் பிள்ளைகள் நான் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்வதில்லை.

நபர் 2 எனக்கு அர்ஜுனனைவிட கர்ணன் ரொம்பப் பிடிக்கும்.

(இந்தப் பேச்சு வார்த்தையிலும் ஒரு தொடர்ச்சியைக் காண முடிகிறதே என்று நீங்கள் கூறினால் உங்கள் மூளை மியூசியத்தில் பாதுகாக்கப்பட வேண்டும். உங்களுக்குத் தெரியுமா? கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்த சார்லஸ் பாபேஜின் மூளை இரண்டு லண்டன் மியூசியங்களில் பாதுகாக்கப்படுகிறதாம் ஒவ்வொரு மியூசியத்திலும் பாதி மூளை!).

ஆப்ரஹாம் கப்லாங் கூறிய இன்னொரு நகைச்சுவையான வாக்கியத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். Duologue என்பதை ஓர் அறையில் உள்ளவர்களின் எண்ணிக்கையோடு பெருக்கினால் உங்களுக்குக் கிடைப்பது Conference!

விடைகள்

1. Psycho 11. Nosey

2. Awkward 12. Nausea

3. Scenery 13. Forty

4. Tuition 14. Dialogue

5. Accommodation 15. Discipline

6. Entrepreneur 16. Drought

7. Envelope 17. Cheque

8. Equalled 18. Villain

9. Guarantee 19. Relevant

10. Genuine 20. Until



ஆங்கிலத்தில் டீ ஆத்தலாம்

சம்பந்தி, டீ ஆற்றுவது ஆகியவற்றை ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிடுவது என்று இந்தப் பகுதியில் கேட்டிருந்தேன். பல வாசகர்கள் இதற்கு பதில் எழுதியிருந்தார்கள். அவற்றில் சில “அட” என்று வியக்க வைத்தன. சில புன்னகைக்க வைத்தன. பலரும் “சம்பந்தியை in-laws என்று மட்டுமே கூப்பிட்டால் போதுமே” என்கிறார்கள். போதாது.

Co-Father-in-law, Co-Mother-in-law என்று குறிப்பிடலாம் என்கிறார் ஜி.மகாலட்சுமி. Co-Parents-in-law என்பது பொருத்தமானது என்று கருதுகிறார் சுப்புலட்சுமி பாலசுப்ரமணியன். சம்பந்தி என்பது மகன் அல்லது மகளின் மாமனார்-மாமியாரைக் குறிப்பிடும் சொல். “இவங்க ரெண்டு பேரும் சம்பந்திகள்’’ என்பதை “They are Parents-in-law அல்லது Co-Parents’’ எனலாம். ஆனால் ‘‘இவர் என் சம்பந்தி’’ எனும்போது “He is my Co-Parent’’ என்றோ, “He is my Parent-in-law’’ என்றோ கூறுவது தவறான அர்த்தம் தருகிறது. ஆக பொருத்தமான வார்த்தை கிடைக்கும்வரை “He is my son’s father-in-law’’ அல்லது ‘‘She is my daughter’s mother-in-law’’ என்றோ குறிப்பிட்டு குழப்பத்தைக் குறைத்துவிடலாம் என்று தோன்றுகிறது.

“டீக்கடைக்காரர் டீ ஆற்றுவதை’’ எப்படிச் சொல்வது என்று கேட்டிருந்தோம். ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் டீயை ஆற்றாததால் வந்த குழப்பம் இது! தேவையென்றால் அவர்கள் cup-ல் உள்ளதை saucer-ல் ஊற்றினால் ஆறிவிடும். தவிர chilled என்ற வார்த்தை குளிர வைப்பதை உணர்த்தி விடுகிறது. ஆனால் ‘ஆற்றுவது’?

Appeasing என்று கூறலாமே என்று கூறியிருக்கிறார் வாசகர் சுந்தரேசன். கோபத்தில் இருக்கும்போது அதை ஆற்றும் முயற்சியை appeasing எனலாம். ஆனால் டீ ஆற்றுவது வேறு அல்லவா? ‘Tea cataracting’ என்று சுப்ரமணியன் சங்கர சுப்பையன் என்பவரும், ‘Tea beating’ என்று ஸ்ரீனிவாசன் பார்கவன் என்பவரும் ‘Tea pulling’ என்று நடராஜன் முரளீதரன் என்பவரும், ‘Tea brewing’ என்று சையது ஹபிபுல்லா அகமது என்பவரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

He weathered the tea எனலாமா? Weathered என்றால் காற்றில் அதிக நேரம் வைத்தல், வெப்பம் குறைத்தல் என்ற ஒரு அர்த்தமும் உண்டு. Seasoned என்றும் கூறலாமோ? Seasoned என்ற வார்த்தையை உணவுப் பொருட்களுக்குப் பயன்படுத்துவது உண்டு. பானங்களுக்கு அல்ல. ஆக ‘The act of cooling tea’ என்று கூறிவிடலாம் என்று தோன்றுகிறது.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x