

கற்றுக்கொள்ளுதல் என்பது உயிரியல் முறைப்படி நிஜமான இயற்கையான நிகழ்வு. ஆனால் பள்ளிக்கூடக் கல்விமுறையின் அடிநாதமாக இருப்பது கற்றல் எனும் பாவனை. அது செயற்கையானது.
- ஜே. கிருஷ்ணமூர்த்தி
அனுபவக் கல்வியும் கற்றல் அனுபவமும்
குழந்தைகள் வீட்டில் தங்களது சுற்றத்தில் பெறுகிற அனுபவங்களைப் பள்ளியில் மனம் விட்டுப் பகிர்ந்துகொள்ளும் அமைப்பு நம்மிடம் இருக்க வேண்டும் எனப் பல வருடங்களாகப் பரிந்துரைக்கப்படுகிறது. தனது இருப்பிடத்திலிருந்து பள்ளிக்குப் பயணமாகும் ஒரு குழந்தை பேருந்திலோ இதர ஊர்திகளிலோ அல்லது நடைபாதை சகாக்களிடமோ பகிர்ந்துகொள்ளும் அனுபவங்கள் நுணுக்கமானவை. சொல்லப்போனால் ஒருவரது ஆளுமையைச் செதுக்கும் ஆற்றல் அவற்றுக்கு உள்ளது. இந்த இடத்தில்தான் குச்சி ஐஸ், பஞ்சு மிட்டாய் எனப் பள்ளிக்கூட வாசல் கடைகளும் அவை தரும் அனுபவங்களும் கற்றலில் வகுப்பறை தராத கல்வியாக மலர்கின்றன.
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிறகும் வழியிலும் குழந்தை பெறும் அனுபவம் முக்கியமானது. அத்துடன், ஆண்டுக்கு ஒருமுறையேனும் திறந்த வெளி நோக்கிப் பள்ளிகளே கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லுதல் கல்வியின் முக்கிய அங்கமாகும். அன்று கல்விச் சுற்றுலா பெரிய வைபவமாக போற்றப்பட்டது. இன்று பள்ளிகளின் வருடாந்தரச் செயல்திட்டத்திலிருந்து கல்விச் சுற்றுலாக்கள் எடுக்கப்பட்டுவிட்டன என்பது துரதிர்ஷ்டம். குழந்தைகளின் பாதுகாப்பு, பாடத்திட்டத்தைக் குறித்த காலத்திற்குள் முடிக்க முடியாமை என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதிலும் அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது உட்படப் பல முட்டுக்கட்டைகள். விளைவு, பள்ளிகள் பெரும்பாலும் சுற்றுலாக்களைக் கைவிட்டன. ஆனால் மாணவர்கள் ராசனும் சிவசங்கரும் ஒருவரது பள்ளி வாழ்வில் சுற்றுலா என்கிற ஒன்று இடம்பெறுதல் எத்தகைய அற்புத மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என எனக்குக் காட்டினார்கள்.
திறந்தவெளிக் கற்றலான அனுபவக் கல்வி
வகுப்பறைகளில் நடக்கும் திணிக்கப்பட்ட கற்றல் அனுபவங்களுக்கு மாற்றாக, சுயதேடலின் மூலமே கிடைக்கும் அனுபவங்கள் வழி கற்பது (Experiential learning) என்பதைக் கல்வியில் அறிமுகம் செய்தவர் அமெரிக்க உளவியல் அறிஞர் டேவிட் ஏ.கோல்ப் (David A. Kolb). உண்மையான கற்றலின் அடிப்படை சுயதேடல். அதன் இயல்பான கற்றல்முறை ‘பயணம்’ என அவர் அறிவித்தார்.
தமிழ்ச் சூழலில் பயணமே கல்வி என்பதற்கான சான்றாக விளங்கியவர்கள் பலர். வள்ளலார், திரு.வி.க., ஜி.டி.நாயுடு என அடுக்கிக்கொண்டே போகலாம். கோல்பின் கற்றல் முறை, உண்மையான இயற்கையான சூழல்களில் கிடைக்கும் வாழ்வனுபவங்கள் வழியாக ஒருவர் பெறும் கல்வியை அடிப்படையாகக் கொண்டிருந்தது. 1970களில் அவர் அதை மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் முதலில் அறிமுகம் செய்தார்.
பயணிக்கும் வகுப்பறைகள் (Traveling Class rooms) என அவை அழைக்கப்பட்டன. கோல்புடையது ஒரு டார்வீனிய விதி. சார்லஸ் டார்வினின் பீகிள் (கப்பல் பெயர்) கடல் பிரயாணமே அவரது பிரதானக் கல்வியாகிப் பரிணாமவியலின் கண்டுபிடிப்பாளாராக அவரை மற்றியது. இதை ஆதாராமாய் கொண்டு கோல்பின் கல்வி முறை இயங்கியது. மாணவர்கள் மேற்கொள்ளும் பிரயாணங்களே நிஜமான கற்றல் அனுபவங்களைத் தர முடியும். அந்த அனுபவங்களைக் குறிப்பெடுத்துத் தன் அனுபவப் படைப்பாக வெளியிடுதல் அடுத்த படிநிலை. அது எழுத்தாகவோ, ஓவியமாகவோ பிறரோடு நடக்கும் பேச்சுப் பதிவாகவோ அல்லது புகைப்படப் பதிவாகவோ இருக்கலாம்.
அவற்றை அங்கீகரித்து மாணவர்களைப் பாராட்டி, மதிப்பீடுசெய்து சான்றளித்தது கோல்பின் கல்வி முறை. ஆறுகளைக் கடப்பதிலிருந்து, அருங்காட்சியகம், சரணாலய விஜயம் செய்தல் வரை எல்லாமே கற்றல்தான் என அது கொண்டாடியது.
பயணக் கல்வியாளரை கோல்ப் நான்கு வகையினராகப் பிரித்தார்.
1. பயணத்தை வாழ்வின் ஆதாராமாக்கி வாழ்நாள் முழுவதும் தொடர்பவர்; அதாவது அத்தோடு பொருந்திப்போனவர் (accommodator).
2. கற்றலின் நோக்கத்தைப் பயணங்களின் வழியே தற்காலிகமாய்க் குவித்துணர்பவர் ( converger).
3. கற்றதை மேலும் பரிசோதித்து விரிவாக்கப் பயண வாழ்வை ஒருங்கிணைப்பவர் (assimulator).
4. ஒரு குவிமையத்திலிருந்து பல திசைகள் நோக்கி அறிவை விசாலாமாக்கிடப் பயணிப்பவர் (Diverger).
இந்த வகைப்பாட்டின்படியான சுதந்திரத் தேடலை நமது பள்ளிக் கல்வி ஒருபோதும் முன்வைப்பதில்லை. தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்திய மண்ணில் கால் வைத்த காந்தியடிகள் இந்தியாவை அறிந்துகொள்ள இந்தியாவைப் பற்றிய புத்தகங்களை வாசிக்கவில்லை. ரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியில் இந்தியா முழுதும் பிராயணம் செய்து இந்தியாவைக் கற்றுணர்ந்தார் என்கிறது வரலாறு. நமது கல்வியின் இறுக்கத்தை மீறிப் பயணங்களை சாகசக் கற்றலாக மாற்ற முடியும் என எனக்குக் காட்டியவர்கள்தான் ராசனும் சிவசங்கரும்.
திருவண்ணாமலை தந்த அதிர்ச்சி
என் ஆசிரியர் வாழ்வின் முதல் ஐந்தாண்டுக் காலகட்டத்தில் பதினோராம் வகுப்பு மாணவர்களாக எனக்கு அவர்கள் அறிமுகமானார்கள். அவர்களது சைக்கிள்களே அவர்களை வேறுபடுத்தி என்முன் நிறுத்தியிருக்க வேண்டும். அதிலும் ராசன் தன் சைக் கிளில் ஒரு நாளைக்கு ஒரு புதுமையை புகுத்துவார். என் இருப்பிடத்தைக் கடந்தே இருவரும் பள்ளிக்குப் பயணிப்பார்கள். சக்கரத்தில் உரசும்படி பலூன் கட்டிப் படபடவென ஒலி எழச்செய்வது, விதவிதமாக பீப்பீ ஹாரன் மாட்டுவது, பிரேக் பிடித்தால் (தானாக) சக்கரத்தோடு சேர்ந்து கிலி கிலி என ஒலிக்கும் மணி அமைப்பது என அவர்கள் சைக்கிள் பித்தர்களாகிப் பள்ளியைக் கலக்கிக்கொண்டிருந்தார்கள்.
அந்த நாட்களில் திருவண்ணாமலை கிரிவலம் இப்போதளவு பிரபலம் அல்ல. ஆனால் தீபத் திருவிழாவுக்கு உடன் பணி செய்த ஒரு ஆசிரியரின் உந்துதலினால் நான் செல்ல நேர்ந்தது. நல்ல கூட்டம். பலவகை லிங்கங்களை எனக்கு விளக்கியபடி சாலையில் நடந்தார் நண்பர். சட்டென எங்கள் ஊரில் என் இருப்பிடத்தைக் காலை நேரங்களில் கடக்கும் அதே சைக்கிள் கிலிகிலி சத்தம் கேட்டுத் திரும்பினேன். என்ன ஆச்சரியம். ராசனும் சிவசங்கரும் கடந்து போய்க்கொண்டிருந்தார்கள் .
விதவிதமாய்ப் பல விஷயங்கள் சைக்கிளின் இருபுறமும் கொக்கிகளில் தொங்கின. ஆசிரியர்களை அங்கே கண்டதும் முதலில் தயங்கியவர்கள் பிறகு சரளமாகப் பேசினார் கள் எங்கள் ஊரிலிருந்து திருவண்ணாமலை நூறு கிலோமீட்டர். சனி ஞாயிறு விடுமுறையுடன் வெள்ளி யும் லீவு போட்டு ஒரு அனுபவத்திற்காக இருவரும் சைக்கிளிலேயே திருவண்ணாமலை வந்திருப்பதை அறிந்து நான் அடைந்த அதிர்ச்சியிலிருந்து இன்றுவரை விடுபடவில்லை. திருச்சி மதுரை என அவ்வப்போது பயணிப்போம் என்றார்கள்.
அவர்களது பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வகுப்பறையில் நான் நேரம் ஒதுக்கியபோது அற்புதமான சாகச ஜன்னல் ஒன்றைத் திறந்துவிட்டிருந்தேன் . திறந்த வெளி சுயகற்றலான பயணக் கல்வியின் அதிசயங்களை எனக்கு உணர்த்திய அந்த அற்புத நண்பர்களில் ராசன் இப்போதும் தன் ‘பயண’ கனவை விட முடியாமல் டிராவல் ஏஜென்ஸி நடத்துகிறார். சிவசங்கர் இப்போது அக்குபஞ்சர், ஹோமியோபதி மருத்துவராக இருக்கிறார்.
தொடர்புக்கு: eranatarasan@yahoo.com